இயற்கையென்னும் பொக்கிஷம்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

யற்கையை தாய்மைக்கு ஒப்பிடுகின்றோம் ஏனெனில் அள்ளஅள்ள குறையாதததை தருபவள் தாய்தானே. அந்த அன்புக்கு நிகரேது? இயற்கையை அழித்து மாற்றி செயற்கையுலகில் சஞ்சரிக்கப் பார்க்கின்றோம். இயற்கையின் மகிமைமையை உணராதவர்கள் எவருளர்? ஆனாலும் எமக்குத் தெரிந்ததெல்லாம் சிறிதளவு மட்டுமே. தேடத்தேட புதிதுபுதிதாக வந்து கெண்டேயிருக்கும் இந்த அதிசயத்தை எத்தனைபேர் அறிந்துளர்? அந்த மகிமையில் ஒன்றினைப்பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல்துறையின் இறுதியாண்டு சிறப்பு மாணவி கோபிநந்தா சேது காவலர் செய்த ஆய்வு குறிப்பாக இயற்கையில் காணப்படும் உயிரியல் கட்டுப்பாடு பற்றி ஆய்ந்து விளக்கியிருக்கின்றது. எந்த ஆய்வினதும் முடிவுகள் வெறுமனே ஆய்வறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்னும் பிடிவாதமான கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டதன் முடிவாக அவர் செய்த ஆய்வினைப் பற்றி எமது மக்களும் படித்து அதனை நடைமுறையில் செய்துபார்த்து பயனுற வேண்டும் இன்னும் தொழிற்றுறை விருத்திக்கு வித்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கட்டுரையினூடாக தரப்பட்டுள்ளது.

Prof.G.Mikunthanஇலங்கைத்தீவினை நஞ்சற்ற தேசமாக மாற்றியே தீருவேன் என நாட்டின் தலைவர் கங்கணம் கட்டியிருப்பது விவசாயத்தை நம்பியிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நஞ்சினை தினந்தினம் மரக்கறி வகைகள் மற்றும் கனிகளுடன் மேலும் உணவுப்பொருட்களுடன் உட்கொள்ளும் மக்களுக்கும் நம்பிக்கையைத் தந்திருக்கின்றது. இதற்கு அனுசரணையாக எந்த நடவடிக்கைகள் நடைபெற்றாலும் அதனை நிச்சயமாக மக்கள் வரவேற்பார்கள். இவ்வாறான திட்டத்திற்கு நாமும் அனுசரணையாக இருந்து நஞ்சாக பயன்படுத்தும் வேளாண் இரசாயனங்களுக்கு பதிலாக மாற்றுவழிகளை பரிந்துரைக்க தலைப்பட்டுள்ளோம். அந்தவகையில் மாற்றுவழிகளை எங்கு தேடுவோம் என்பதற்கு பதிலாக என்னிடம் வாருங்கள் அத்தனையுமிருக்கின்றது என இயற்கைத்தாயவள் அறைகூவி அழைத்திருந்தாள். அவள் சொல்லில் நம்பிக்கை கொண்டோம் கிடைத்தது பொக்கிஷம்தான். கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கும் என்பதன் அர்த்தம் இங்கே புரிந்தது. தேடுங்கள் அனைத்தும் கிடைக்கும் அதிலிருந்து என்னை புரிந்துகொள்வீர்கள் என்ற இயற்கைதாயவளின் அர்த்தம் இந்த ஆய்விலிருந்து புரிந்தது.

என்ன யோசிக்கின்றீர்கள்? அந்த பொக்கிஷத்தைப் பற்றித்தானே கேட்கின்றீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் அரும்பெரும் பொக்கிஷம். பீடைகளின் பிரச்சனைக்கு பீடைநாசினிகள்தான் தஞ்சம் என இருந்த எங்களுக்கும் இன்னும் பலருக்கும் அதைவிட மாற்றுவழிகள் இருப்பதைப் பறைசாற்றியிருக்கின்றது இந்த ஆய்வு. இவ்வருடம் வரண்டுபோன பூமி, உஸ்ணமான காலநிலை, வரட்சி தாண்டவமாடியிருக்கும் பிரதேசம். குடிநீருக்கு மக்களை அலைக்கழிக்க வைத்திருக்கின்றது இயற்றையின் சீற்றம். இயற்கையின் இந்த அகோரதாண்டவத்திலும்கூட ஆங்காங்கே மழைபெய்திருக்கின்றது. மழையென்றால் ஆங்காங்கே இடங்களைத் தெரிவுசெய்து மழை பெய்திருக்கன்றது. அதுகூட அதிசயம்தான் ஆனாலும் இந்த வரட்சியில் உஸ்ணத்தில் பூஞ்சணங்களின் வளர்ச்சி பெருக்கம் என்பன மிகவும் கேள்விக்குறியானதாகும். இந்த உஸ்ணத்தில் சிற்றுண்ணிகளின் தாக்கம் வழக்கமாகவே அதிகமாக இருக்கும். வளிமண்டல வெப்பநிலை கூடக்கூட சிற்றுண்ணி அதனது வாழ்க்கை வட்டத்தை குறுக்கிக்கொண்டு பல்கிப்பெருகி விடும். இந்த மாதிரியான இருபுள்ளிகள் கொண்ட சிற்றுண்ணி (Two spotted Mite – Oligonychus sp.) கிளிறிசிடியாவில், வேம்பில், நித்திய கல்யாணியில்இ சிறுகுறிஞ்சாவில் இன்னும் முருக்கமர இலையில் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேமாதத்தில் திடிரென ஒரு மழை, சற்று ஓங்கியடித்த மழை என்று கூறலாம். மழை ஓய்ந்து இரண்டாம்நாள் கிறிறிசிடியாவில் அதிகமாக சேதத்தை ஏற்படுத்திய இரு புள்ளிகள் கொண்ட சிற்றுண்ணியில் குறிப்பிட்ட ஓரு வகை பூஞ்சணம் (Rhizopus sp.)  இயற்கையாக வளர்ந்திருந்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. அனைத்து சிற்றுண்ணிகளும் இறந்த நிலையில் அந்த சிற்றுண்ணிகளின் மேல் இந்த பூஞ்சணம் வளர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அனைத்து சிற்றுண்ணிகளும் இறப்பதற்கு இந்த பூஞ்சணத்தின் வளர்ச்சியே காரணமென ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இயற்கையாக வளர்ந்த பூஞ்சணம் சிற்றுண்ணிகளை முழுமையாக இறக்கச்செய்து அதில் பலவிதமான பூஞ்சண வித்திகளை உற்பத்தி செய்திருந்தமையையும் காண முடிந்தது. இவ்வாறான நன்மைதரும் பூஞ்சணங்களை நாம் கண்டுபிடித்து அவற்றின் தொழிற்பாடுகளை அவதானமாக அவதானித்தால் அவை தொழிற்படும் விதம் மூலம் அவற்றினை நாம் பிரித்தெடுத்த செயற்கையாக தயாரித்து சிற்றுண்ணி பீடைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு மிகமுக்கியமானது. ஓன்று கடும் வரட்சியிலிருந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட மழைக்குப்பிறகு வளர்ந்திருந்த பூஞ்சணத்தின் வலிமையைப் பற்றி இன்னும் விபரிக்க வேண்டும். அதைப்பற்றி இன்னொரு இடத்தில் விளக்கமாகப் பார்ப்போம்.

இங்கே அவதானிக்க வேண்டியது என்னவெனில் மழைபெய்ந்ததும் அந்த ஈரப்பதனையும் குறைந்த வெப்பநிலையையும் பயன்படுத்தி வளியிலுள்ள இரைபோபஸ் என்னும் பூஞசணம் சிற்றுண்ணியில் இயற்கையாகவே தொற்றுதலை ஏற்படுத்தி விரைவாக வளர்ந்து அனைத்து சிற்றுண்ணிகளையும் அழித்ததுதான் இந்த விசித்திரம். இயற்கையிலேயே மருந்திருக்கும் போது நாம் எங்கேயோ தேடி எதையோ பயன்படுத்தி இருந்த இயற்கைக் கட்டுப்பாட்டு பொறிமுறையையும் அழித்து விடுகின்றோம். இயற்கை பொறிமுறையை நாம் அழித்துவிட்டு செயற்கை கட்டுப்பாடான பீடைநாசினியை பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம். அதில் பீடைகட்டுப்படுகின்றதோ இல்லையோ எமது சூழலைஇ குடிநீரை இன்னும் உணவுகளை நஞ்சாக்கி விடுகின்றோம். இந்த நஞ்சை நாம் உணவுடன் உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித்தான் அறிந்திருப்பீர்களே. சிறுநீரகக்கோளாறு இன்னும் இருதயக் கோளாறுகள் இவற்றுடன் புற்றுநோய் போன்றவற்றுக்கும் இந்த பீடைநாசினி மற்றும் அசேதன பசளைகளும் காரணமாகும்.

இயற்கையாக உள்ள உயிரியல் கட்டுப்பாட்டுப் பொறிமுறையை கண்டுபிடித்த கோபிநந்தாசேது காவலரின் ஆய்வுத்திறமை இந்த இடத்தில் பாராட்டப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டியதாகும். அவரது ஆய்வில் இந்த சேதத்தை விளைவிக்கும் இருபுள்ளிகள் கொண்ட சிற்றுண்ணி பற்றியும் சேதத்தின்தன்மை பற்றியும் இன்னும் குறிப்பிட்ட பூஞ்சணத்தைப் பற்றியும் விரிவான ஆய்வுகள் அதனை தொடர்ந்தும் ஆய்வுக்குட்படுத்தி அதனை சிறந்த இயற்கை கட்டுப்பாட்டு பொறிமுறையாக எமது பீடைகளுக்கு பயன்படுத்த இன்னும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான இயற்கைப் பொறிமுறைகளை கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலமும் இன்னும் அவற்றை பாதுகாப்பதன் மூலமும் மேலும் பல பீடைகளைக் கட்டுப்படுத்துவது இலகுவானதாகும். இயற்கைவழி பீடைக்கட்டுப்பாடு என்பதனால் விரைந்து நாம் பயன்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டாக வேண்டும். இந்த பொறிமுறையை தொழிற்றுறையாக்கி உயிரியல் பீடைக்கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். நன்றேசெய் அதனையும் இன்றே செய் என்பார்கள். அதற்குரிய வழிவகைகளை தேடுவதற்கு இந்த ஆய்வுக்குழு அதீத முயற்சிகளை எடுத்திருக்கின்றது. நிச்சயமாக எமது மக்களுக்கு இந்த உயிரியல் பொறிமுறை சிறந்த ஒரு கைங்கரியமாக இருக்கும்.

*

*

Top