யாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017

முதலாவது தமிழ் திரைப்படம் கீசகவதம் வெளியிடப்பட்ட 100ஆவது வருடத்திலும், முதலாவது பேசும்படம் காளிதாஸ் வெளிவந்து 75ஆவது வருடத்திலும் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்ப்பாணத்தில்   மூன்றாவது சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. கடந்த 15.09.2017 வெள்ளிக்கிழமை தொடங்கிய இவ்விழா எதிர்வரும் 20.09.2017  புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.

சினிமாவில் படைப்புரீதியான வெளிப்பாட்டின் சமகால வடிவங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு பாரபட்சமற்ற தளமாக யாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை அஜேன்டா 14 நிறுவனத்துடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனமும் இணைந்து முன்னெடுக்கின்றன. விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைப்பீடமும், ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளுகின்றனர். ஏறத்தாழ 25 நாடுகள் பங்கேற்கப் போகும் இவ் விழாவில் நூறுக்கும் அதிகமானதிரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

இவ்விழாவானது செப்ரெம்பர் 15ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் – கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கில் கோலகலமாக ஆரம்பமாகித் தொடர்ந்து யாழ். பல்கலைக் கழக கைலாசபதி அரங்கு, ஹற்றன் நஷனல் வங்கி அரங்கு, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் கோணர் ஆகிய இடங்களில் நடைபெற்று மீண்டும் மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கில் செப்ரெம்பர் 20 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு விருது விழா வைபவத்துடன் நிறைவுபெறும். திரைத்துறை முயற்சியாளர்களான பல பெரியவர்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைத்து அவர்கள் தயாரிப்புகளைக் கொண்டாடுகின்ற அதேவேளை வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த அறிமுகப் படத்துக்கான விருது, சிறந்த சர்வதேச குறும்பட விருது, சிறந்த உள்ள 10 குறும்படத்திற்கான விருது மற்றும் பார்வையாளர்களால் தெரிவு செய்யப்படும் சிறந்த குறும்படத்திற்கான விருது என்று பல விருதுகள் இம்முறை வழங்கப்பட இருக்கின்றன. ஆரம்பத் திரைப்படமாக ஏறத்தாழப் பத்துத்திரைப்பட விழாக்களைக் கண்ட இந்தியத் திரைப்படமான ‘ஒற்றையாள் பாதை’ திரையிடப்படுகிறது. இறுதி நாளன்று ‘தவெனவிஹாகன்’ (Burning Birds) என்ற விருது பெற்ற இலங்கைத் திரைப்படம் திரையிடப்படுகிறது. உலக அரங்கில் முதல் முறையாகத் திரையிடப்படும் திரைப்படங்களாக சுமதிமோகனின் ‘புத்துசகபிரியவரோ’ (Sons & Fathers), விஜிதகுணரத்னவின் ‘Invisible Moon’ மற்றும் கேசவராஜன் நவரட்ணத்தின் ‘பனைமரக்காடு’ என்பன பட்டியலிடப்பட்டிருக்கிறது. விழாவின் இறுதி நாளான்று தென்னிந்திய திரைக்கலைஞர் இயக்குனர்ராம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார். விழாவில் அன்னாரது ‘தரமணி’ என்ற திரைப்படமும் திரையிடப்படுகிறது.

இந்த விழாவில் குறேசியா நாட்டைச் சேர்ந்த கலாநிதி. எராமிபோர்ஜொன், (Dr.EtamiBorjon – Croatia) சிங்கப்பூரைச் சேர்ந்த பிலிப் செயா ( Philip Cheah – Singapore) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரேமேந்திரா மஸும்டெர் (Premendra Mazumder – India) ஆகியோர் நடுவர்களாகக் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த விழாவிலே தலைசிறந்த திரைத் தயாரிப்புகளைத் தந்த திரைமுயற்சியாளர்கள் இருவரது படைப்புகள் திரையிடப்பட்டு அவர்கள் திறமைகள் மீள எண்ணப்பட்டுக் கௌரவிக்கப்பட இருக்கின்றனர். அதில் ஒருவர் பிரெஞ் நாட்டைச் சேர்ந்த ஏக பெண் இயக்குனரான அக்னெஸ் வார்தா (Agnes Varda). மற்றவர் நம் நாட்டுக் கலைஞரான கலாநிதி தர்மசேன பத்திராஜா (Dr.Dharmasena Pathiraja)

கௌரவாளர்களில் ஒருவரான அக்னெஸ் வார்த்தாவின் தலைசிறந்த திரைப்படங்கள் Jacquot de Nantes (1991) , Vagabond ( 1985) , The Gleaners and I ( 2000) , Cleo from 5 to 7 (1962) , The Beaches of Agnes (2008) என்பவைகளுடன் கலாநிதி தர்மசேன பத்திராஜாவினது Aga Gawwa , PoraDige, BambaruAwith, SoldaduUnnehe , MathuyamDawasa ஆகிய படைப்புகளும் காட்சிப்படுத்தப்படும்.

இவ் விழாவில் இறுதிநாளன்று நடைபெறவிருக்கும் விருது விழாவில் இலங்கை சினிமாத்துறைக்கு தன்னாலான சிறந்த பங்காற்றி இருக்கின்ற கலாநிதி தர்மசேன பத்திராஜா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப் படவிருக்கிறார்.

யாழ். சர்வதேச சினிமா விழா ஆரம்பந்தொட்டு அனுசரணையாளராகவிருக்கின்ற சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தினர், இம்முறை விழாவில் சிறந்த குறும்படமாகத் தெரிவு செய்யப்படும் தேசிய குறும்படம் ஒன்றிற்கு ரூபா. ஒரு லட்சத்தினைச் சிறப்புப் பரிசாக வழங்கவிருக்கின்றனர். இந்தப் பரிசானது தொடர்ந்தும் வழங்கப்படும் என்று சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தினர் உறுதியளித்திருக்கின்றனர்.

விழாவில் திரைப்படக் காட்சிகள் நடைபெறும் இடங்களாக கார்க்கில்ஸ் சதுக்கத்திலுள்ள மஜெஸ்ரிக் சினிபிளெக்ஸ் திரையரங்கம், யாழ். பல்கலைக் கழகத்திலமைந்துள்ள கைலாசபதி திரையரங்கம், ஹற்றன் நஷனல் வங்கியின் மெற்றோ கிளையிலுள்ள உள்அரங்கம் என்பன அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில விசேட காட்சிகள் பிரிட்டிஷ் கவுன்சிலிலும், அமெரிக்கன் கோணர் இலும் நடைபெறும்.

விழாக் காலங்களில் இலங்கையில் பிறந்து இந்தியத் திரைத்துறையில் கால்பதித்து நடக்கின்ற பிரபல ஆவணப்படத் தயாரிப்பாளரான எஸ்.சோமிதரன் மற்றும் குறெசியா நாட்டைச் சேர்ந்த கலாநிதி எராமிபோர்ஜொன் ஆகியோர் இரண்டு புலமைசார் வகுப்புக்களை நடத்தவிருக்கின்றனர். சோமிதரன் “ Practical Challenges in Making Documentaries in Sri Lanka (இலங்கையில் ஆவணத் தயாரிப்பில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள்) என்ற தலைப்பிலும், கலாநிதி. எராமிபோர்ஜொன் “Representing the Other : Ethics & Politicsin Ethnographic  and  Indigenous Cinema”  (பிறவற்றை பிரநிதித்துவப் படுத்துவது, இனவரைவியல் மற்றும் சுதேச சினிமாவில் சமூக ஒழுக்கக் கோட்பாடும் அரசியலும்) என்ற தலைப்பிலும் வகுப்புகளை நடத்தவிருக்கின்றனர். இந்த வகுப்புகள் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பயனள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரச திரைப்படப்பிரிவானது ரால்ப் கீனின் ‘நெலுங்கம’ மற்றும் திஸ்ஸ அபயசேகரவின் ‘கமம்’ ஆகிய ஆவணங்களுடன் இன்னும் பல ஆவணங்களையும் திரையிடவிருக்கின்றனர்.

இம்முறை பிரான்ஸ், ஜேர்மனி, பெரிய பிரித்தானியா, இத்தாலி, செதர்லாந்து, இந்தியா, செக் குடியரசு, ருமேனியா, போலாந்து, குரேஸியா, இலங்கை, பங்களாதேஷ், சைனா, சிங்கப்பூர், அமெரிக்கா, சிலோவேக்கியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், சிலி, பாகிஸ்தான், நேபாளம், கொலதம்பியா, வியட்நாம்ட, கொலம்பியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.

யாழ்ப்பாணச் சர்வதேச சினிமா விழா 2017 இற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், அரச திரைப்படப் பிரிவு, ஹற்றன் நஷனல் வங்கி, ஜெட் விங் ஹோட்டல் – யாழ்ப்பாணம், அன்ரூரவல்ஸ், ஹோத்தே நிறுவனம், பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் அமெரிக்கன் கோணர் – யாழ்ப்பாணம் ஆகிய நிறுவனங்களும் தமது அனுசரணையை வழங்குகின்றன.

யாழ்ப்பாணச் சர்வதேச சினிமா விழாவில் பிரான்ஸ், இத்தாலி, சுவிஸ்லார்ந்து, நெதர்லாந்து. ருமேனியா, கனடா, அவுஸ்திரேலியா தூதராலயங்களும். சுலோவிக்கியா கொன்சலேற், நியூ டெல்கியிலுள்ள போலாந்து அரச நிறுவனமும், செக் குடியரசு தூதராலயம் ஆகியனவும் தமது திரைப்படங்களைத் திரையிடுகின்றன.

விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றும் திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு www.jaffnaicf.lk  என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

Print Print Print Print Print Print Print

Related posts

*

*

Top