வீட்டுத்தோட்டமும் டெங்கு நுளம்பு கட்டுப்பாடும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ன்றைய தலைப்பு இரண்டு முக்கிய விடயங்களில் கரிசனை செலுத்த முனைகின்றது. ஒரு பக்கம் வீட்டுத்தோட்டத்தை நாம் ஊக்குவிக்கும்போது மறுபக்கம் வீட்டுத்தோட்டத்தில் தாவரங்களை வளர்க்க பயன்படுத்தும் கொள்கலன்களில் தண்ணீர் தேங்கி நின்று நுளம்பின் வாழிடமாக மாறுகின்றதனை சுகாதார பரிசோதகர்கள் அவதானித்து அது பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த எடுத்த முயற்சியின் பயனாக இக்கட்டுரை உருப்பெறுகின்றது. நிலம் காய்ந்து வரண்டிருந்த காலம்மாறி மழைகாலம் ஆரம்பித்ததற்கான சகுனமாக ஆரம்பமழை ஆங்காங்கே பார்த்துப் பார்த்து பெய்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சடுதியாக இருட்டி பெய்த மழை பலரையும் வெருட்டியும் போட்டிருக்கின்றது. இவ்வாறு மழைபெய்யும் இடங்களில் காணப்படும் கவனிப்பாரற்றுச் சிதறிக்கிடக்கும் இன்னும் அவரவர் வீடுகளில் வேலைசெய்யும் தளங்களில் கவனமின்றி விசிறிப்பட்டிருக்கும் பயன்படுத்திய பிளாஸ்ரிக் மற்றும் தகரத்திலாக கொள்கலன்கள் மழைநீரை கிடைக்கின்ற நீரை விரும்பியோ விரும்பாமலோ தேக்கி வைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய பெரிய கொள்கலன்களில் இலகுவாக நுளம்பு பெருக்கமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமே. அதிலும் மழைநீர் தேங்கியிருக்கும் இடங்களில் டெங்கு நுளம்பு போன்றன இலகுவாக வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமே. நாம் அவ்வாறான இடங்களில் நீர் தொடர்ச்சியாக தேங்காது தடுத்தால் நுளம்பு பெருகுவதனை இலகுவாக கட்டுப்படுத்தலாம்.

Prof.G.Mikunthanவீட்டுத் தோட்டங்களில் இன்னும் பாடசாலைத் தோட்டங்களில் பல வகையான பயனற்றதென கருதப்படும் இன்னும் பாவித்த கொள்கலன்களில் தாவரங்கள் இலகுவாக வளர்க்கப்படுவதனை அவதானிக்கலாம். ‘கொள்கலனில் பயிர்ச்செய்கை’ (Potted cultivation) என்னும் முறையின் கீழானதாக இதனை இலகுவாக தெரிவுசெய்து மக்கள் பயன்படுத்துவதனை காணலாம். அதிலும் பயன்படுத்தப்பட்ட வெற்றுப்போத்தல்கள் குறிப்பாக வெற்று பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்கள்இ தகரடப்பாக்கள்இ பாவித்த வாகன ரயர்கள்இ பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களினை பாதுகாப்பாக வைத்திருந்த கொள்கலன்கள் இன்னும் பலவற்றை மக்கள் பயன்படுத்துவதனையும் அவற்றை நிறமூட்டி அழகாக வைத்திருப்பதனையும் காணலாம். ஆனால் இவ்வாறான கொள்கலன்களில் நீர் வழிந்தோடுவதற்கான வழிமுறை செய்யப்படாது விட்டிருந்தால் நீர் தேங்கி நிற்பதற்கு வாய்ப்பாகிவிடும். தொடர்ச்சியாக ஆகக்குறைந்தது 7 நாட்கள் நீர் தேங்கி நிற்குமாயின் அதிலே நுளம்பு முட்டையிட்டு குடம்பியாகி பின்னர் கூட்டுப்புழுவாகி இறுதியில் நிறைவுடலியாகி விடும். ஏடிஸ்இயிப்ரி (Aedesaegypti)  நுளம்பினுடைய வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது. முட்டை 2-4 நாட்களில் குடம்பியாகி விடும். குடம்பி தேங்கியிருக்கும் நீரில் வளர்ந்து ஆகக்குறைந்தது 4-6 நாட்களில் கூட்டுப்புழுவாகி விடும். கூட்டுப்புழு 2 நாட்களில் நிறைவுடலியாகிவிடும். நிறைவுடலி பெண்நுளம்பு மனிதரைக் கடிக்கும்போது டெங்கு வைரசினை மனிதனில் உட்செலுத்திவிடும். நிறைவுடலி நுளம்பு 2 கிழமையிலிருந்து ஒரு மாதத்திற்கு வாழக்கூடியது என்றால் எத்தனை பேருக்கு அது டெங்குநோயை காவிச்செல்ல முடியும் என கணக்கிட்டுப் பாருங்கள். கவனியாது நீர் தேங்க விட்டிருக்கும் இடங்களை தெரிவுசெய்து அதனை துப்பரவாக வைத்திருத்தல் முக்கியமானதாகும்.

எங்கள் வீட்டில் உற்பத்தியாகும் நுளம்பு மற்றையவரைத்தான் கடிக்கும் என கனவு காணாதீர்கள். அது எம்மையும் கடிக்கும் என்பதுடன் எமக்கும் டெங்கு நோயினைப் பரப்பவல்லது என்பதனையும் மற்றையவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். டெங்கு என்பது ஆட்கொல்லி நோய். ஆதனால் வயது வேறுபாடின்றி பால் வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவர் என்பதோடு நாம் கவனயீனமாக இருந்தால் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியாதென்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும். வீடுகள்இ காணிகள்இ அலுவலகங்கள் இன்னும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் நீர்தேங்கியிருக்கக்கூடிய இடங்களை இனங்கண்டு பொதுநலன் நோக்கி அனைவரும் முன்னின்று இந்த நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டுத்தோட்டத்தில் தாவரங்கள் வளர்ப்பதற்காக மேற்கூறிய கொள்கலன்களில் நீர் தொடர்ச்சியாக தேங்கி நிற்கின்றதா என்பதனை தினமும் அவதானிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மண்இ உக்கல் மற்றும் பசளை என்பன இறுக்கமடைந்திருந்தால் இவ்வாறான கொள்கலன்களில் நீர் வழிந்தோடாது அப்படியே தேங்கி நிற்கும். தொடர்ச்சியாக தேங்கி நிற்கின்றதென்றால் உடனடியாக அந்த நீரை கொள்கலனிலிருந்து வெறியேற்ற வேண்டும். பின்னர் அந்த கொள்கலனிலுள்ள தாவரத்தையும் மண்ணையும் வெளியே எடுத்துவிட்டு மணல் மண் கலந்து மீண்டும் கொள்கலனை நிரப்புதல் வேண்டும். நீர்பிடித்து நிற்பதற்காக தேங்காய்நார் எடுத்த பின்னர் கழிவாகவரும் சோத்தியை காளான் பூஞ்சணம் கொண்டு உக்கவைத்து பயன்படுத்தலாம். காளான் பூஞ்சணத்தை பயன்படுத்து உக்கவைக்கும் பொறிமுறையை தொழிற்சாலை வாயிலாக ஆரம்பித்து மக்களுக்கு கிடைக்கச் செய்யலாம்.

வீட்டுத் தோட்டத்தில் தாவரங்கள் கொள்கலனை முழுவதுமாக மூடி வளர்ந்திருப்பதனை அனுமதியாதீர்கள். கீழ்புறத்தில் தேவையானளவிற்கு கத்தரிந்து கொள்கலனினுள் உள்ளிருப்பதனை நீங்கள் கண்களால் காணக்கூடியவாறு தாவரத்தைக் கத்தரித்தல் வேண்டும். நன்றாக உக்காத எருவை அல்லது கூட்டெருவை பயன்படுத்தாதீர்கள். நன்றாக உக்காது விட்டால் அவை இலகுவில் உக்குவதற்காக கால அளவு அதிகமாகவும் அதனால் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவும் ஏற்படும்.

வீட்டுத் தோட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் தென்னை கோம்பைகள்இ சிரட்டை மற்றும் சிறிய மூடிகள் என்பனவற்றில் மழைநீர் தேங்கியிருப்பதனை நாம் இனங்கண்டு அவற்றை சேகரித்து நீரினை அப்புறப்படுத்தல் வேண்டும். மேலும் பொதுவாக இனங்கண்ட பிரச்சனைகளாக கொள்கலன்களில் தாவரங்களை வளர்க்கும்போது அவை அளவுக்கதிகமாக வளர்ந்து கொள்கலனை மூடியிருப்பதனால் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவற்றிக்கீழாக சிறிய பாத்திரங்களில் நீர் தேங்கியிருப்பதனை நாம் கவனிக்கத் தவறியிருப்போம். அந்த இடங்கள் நுளம்புகளின் வாழிடமாக இலகுவில் மாறிவிடும். பின்பென்ன? எமது அசட்டையீனத்தினால் நாமே நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாகி விடுவோம்.

வீட்டுத் தோட்டத்தில் தாவரங்களை வளர்க்கும்போது நிலத்தில் வளர்ப்பது நல்லது. இல்லாது விட்டால் அதற்கான மாற்றுவழியினையும் நாம் தெரிந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் நீர் அதிகம் நாட்டமற்ற அல்லது நீர் அதிகம் தேவைப்பட்டாத தாவரவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். தினமும் வீட்டுத்தோட்டத்திலுள்ள தாவரங்களுக்கும் இன்னும் வேறு இடங்களிலிருந்து தருவிக்கப்படும் புதிய வகை தாவரங்களுக்கும் நாம் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். கொள்கலன்களை சுத்தப்படுத்தி மேலும் முக்கிய தாவரங்களை நடவு செய்வதற்கும் வழிவகை இருக்க வேண்டும்.

வீட்டுத்தோட்டமென்பது உங்களுக்கான உற்பத்தியை சுத்தமாக சிறப்பாக வினைத்திறன் மிக்கதாக ஆக்க வேண்டியது பொறுப்பு. இதுவொரு தேசத்துக்கான பிரச்சனை. எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நாம் பொறுப்புடன் பங்காற்ற வேண்டியது அவசியமாகும். அனைவரும் ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு. இதனை நாமனைவரும் உணரத்தலைப்படுவது எப்போது?

டெங்குநோய் தென்பகுதியிலிருந்து அதிகம் பேருக்கு தொற்றுதலாகி தற்போது நோய் தொற்றுதலை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் நடாத்தப்படுகின்றன. இவற்றுடன் டெங்குநோயினை கட்டுப்படுத்தல் பற்றிய அறிவூட்டல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மக்களை தயார்ப்படுத்தல் இவ்வாறான நோயினைக் கட்டுப்படுத்த உதவும். இது பற்றிய அறிவூட்டல் கண்காட்சியினை இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கத்தின் யாழ்ப்பாணக்கிளை நடாத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதனை நடாத்துவதற்கு இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கத்தின் அநுசரணையுடன் அதன் தலைவி பேராசிரியை வசந்தி தேவநேசன் அவர்களின் தலைமையின்கீழ் விரைவில் பல பாடசாலைகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. அனைவரும் இணைந்து இக்கொடிய நோயிலிருந்து எம்மக்களைக் காப்பாற்ற முன்வருதல் வேண்டும்.

Related posts

*

*

Top