ஊட்டச்சத்து இன்றி வருங்காலமேது நமது சந்ததிக்கு?

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ல்லதொரு மாற்றத்தைப் பற்றி இங்கே பேசத் தலைப்படுகின்றோம். இது எங்கள் எல்லோரைப் பற்றியதுமாகும். எமது நல்வாழ்வு பற்றியதும் எமது வருங்கால சந்ததியின்நிலை பற்றியதுமான அலசலாகும். இன்று இத்தருணத்தில் இதனைப்பற்றி பேசுவதற்கு காரணம் உண்டு. திசைகெட்டு தன்னிலை மறந்து போகின்ற இளைய சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய காலம் இது. தவறின் அனைவரும் ஒரு நாள் வருந்த வேண்டியிருக்கும்.

Prof.G.Mikunthanநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! படித்து என்ன பலன்? உழைத்து என்ன பலன்? சொத்தை சேர்த்தும் என்ன பலன்? இந்த நோயற்ற செல்வத்தினைத் தொலைத்துவிட்டு பலர் தற்போது நிர்க்கதியாக நிற்கின்றார்கள். நோயென்பது நாம் விரும்பி வரவழைத்ததல்ல என்றாலும் எமது தவறான செய்கைகளினால் வழிமுறை தவறிய நடைமுறை பழக்கங்களினால் நாம் அதனை வில்லங்கமாக வரவழைத்து விடுகின்றோம். எமதுதவறை நாமே கவனித்து திருத்திக்கொள்ளாவிடில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது? தலைமுறை பற்றியும் வளமான வாழ்வு பற்றியும் நாம் அவ்வப்போது சிந்திப்பதோடு சரி போதாக்குறைக்கு ஒரு கருத்தரங்கு அதிலும் சிலர் வந்து தமக்குத் தெரிந்த மொழியில் உள்ளதை சொல்லி விட்டுப்போவர். அவ்வளவுதான். அதற்குப் பின்பு எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை.

நல்ல மனம் வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். நல்லவர் சகவாசம் வேண்டும். நாலடியாரில் பாடல் வேண்டும். எம்மையும் மற்றையவர் மதித்திட வேண்டும். ஊர்போற்ற வாழ வேண்டும். இது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருப்பினும் அப்படி வாழ தலைப்படவில்லையே. விஞ்ஞானம் வளரவளர அதன் பயன்பாடுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றதென்பது உண்மையே. இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் நல்லவழியில் பயன்படுத்துவோமாயின் அது பலருக்கும் பயனுள்ளதாகவும் இன்னும் வளர்ச்சிப்பாதையில் நாம் உயர்ந்து செல்லவும் உதவும். மாறாக தற்போதுள்ள இளைய சமூகம் இந்த வளர்ச்சிப்பாதையை இலகுவான வாழ்க்கைக்கான வழியாக எதுவிதமான முயற்சியுமின்றி பொழுதுபோக்குவதனை மையமாக வைத்தே நகர முற்படுகின்றனர் என்பது கவலைதரும் விடயமாக தெரிகின்றது. உழைக்க வேண்டும் என சொல்லிக் கொடுப்பவரும் இல்லை, உழைக்க ஊக்கம் கொடுப்பவரும் இல்லை மாறாக புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் பல ஆண்டுகளுக்குப் பின் தமது பிறப்பிடம் வந்து சொந்தங்களுக்காக பலவித இனாம்களை குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களை தமது பங்குக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனை வைத்து இங்குள்ளவர்களுக்கு ஆரம்ப நாட்களில் எய்தப்படும் இன்பம் பின்னர் தொடர்வதில்லை மாறாக இவ்வாறாக கிடைக்கும் அற்ப வசதி வாய்ப்புக்கள் அவர்களுக்கு இடையூறாகவே மாறிவிட சந்தர்ப்பங்கள் அதிகம். இவ்வளவு விடயங்களிலும் தமது நேரத்தை பணத்தைச் செலவழிப்பவர்கள் தமது உணவிலும் குறிப்பாக ஊட்டச்சத்து விடயத்திலும் அதிக கவனஞ்செலுத்துவதில்லை என்பதனையே பலரும் குறைபட்டுக் கொண்டுள்ளார்கள்.

வரப்பே தலகாணி, வைக்கோலே பஞ்சுமெத்தை, வெற்றுடம்பே பட்டாடை என வெள்ளையுள்ளங்களாக வாழ்ந்த எமது மூதாதையர் சொல்லிச்சென்ற செய்திகள் பல. அனைத்தையும் மறந்து விட்டோம். சுகாதாரமான உணவு எமது பாரம்பரியத்தின் அடிப்படை. அதனை நாம் முழுமையாக மாற்றிவிட்டோம். பீட்சாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தற்போது எமது பாரம்பரிய உணவுக்கு கிடைப்பதில்லை. ஒருவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து பலமடங்கு அதிகமான விலையுள்ள பீட்சாக்களில் கிடைப்பதாக பலர் எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால் பாரம்பரிய உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்திற்கு அளவே இல்லை. இதனை மையப்படுத்தி குறிப்பாக மாணவ மாணவியருக்கு ஊட்டச்சத்து பற்றிய விளக்கங்கள் அதிகமாக கொடுக்கப்படல் வேண்டும் என உலகளாவிய நிறுவனங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றன. நாம் உண்ணும் உணவு சமபோஷ உணவாக பல்வகைத் தன்மையுடையதாக அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய உணவாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தற்போது இல்லை. ஏதோ ஒன்றை திணித்தால் போதுமானது என்னும் அளவிற்கு நிலைமை மாற்றமடைந்திருக்கின்றது எனலாம். யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம் என்னும் நிலைமையை எய்திய பின் இதனை மாற்றியமைத்தல் என்பது சிரமமான காரியமே. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்னும் மகுட வாசகத்திற்கேற்ப எமது காரியங்களை நாம் திட்டமிட்டு செய்தல் வேண்டும். இயலும் என்றால் இயலும் என்பார்கள் அதனையே நாம் எமது செயலூக்கத்திற்கான உதாரணமாக்கிக் கொள்வோம்.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய வலுவான விளக்கங்களைக் கொடுப்பதனை மையப்படுத்தியே பாடசாலைகளில் பாடசாலைத் தோட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பாடசாலைத் தோட்டம் என்பது வெறுமனே அழகுக்காக உருவாக்கப்படும் தோட்டங்களல்ல. ஒரு சில பாடசாலைகளில் குறிப்பிட்ட சில தாவரங்களை வளர்த்துவிட்டு அதனை பாடசாலைத் தோட்டம் என பெயர்சூட்ட முனைகின்றனர். ஆனால் பாடசாலைத் தோட்டங்கள் வெறுமனே அழகையும் பெயருக்கேற்றால்போல் ஒரு தோட்டமாகவும் இருந்தால் மட்டும்போதாது. அவற்றில் பாடசாலை மாதிரித் தோட்டத்திற்கான அம்சங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான தோட்டங்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பங்களிப்புடனேயை நிறுவப்படல் வேண்டும். அதன் மூலம் பாடசாலைத் தோட்டம் பற்றி செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தல் இலகுவாகி விடும்.

Photo 1

பாடசாலைத் தோட்டத்தினூடாக உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி வழங்கப்படுதல் உறுதி செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு பாடசாலைகளும் தமக்குரிய பாடசாலைத் தோட்டத்தை வளமாக உருவாக்கி அதனூடாக மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பற்றி அறிவூட்டலாம். இதற்காக பல பாடசாலைகளில் பாடசாலைத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியே. இருப்பினும் அவற்றையும் வகுப்பறைகளாக மாற்றி அதிலிருந்து பாடங்களைக் கற்பிக்கும் நாளும் வர வேண்டும். இங்கே செயன்முறைக் கல்வியை இவ்வாறான பாடசாலைத் தோட்டங்களுக் கூடாக வழங்குவது இலகுவாக இருக்கும் என பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றது. சிரியாவில் நிகழும் பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக உலக உணவு தாபனம் பாடசாலைத் தோட்டத்தினை சிபார்சு செய்திருக்கின்றது. இதன்மூலம் இளஞ்சந்ததிக்கான உணவுத் தேவையையும் மற்றும் ஊட்டச்சத்து தேவையையும் பற்றிய விளக்கங்களை கொடுக்க முடியும் என்பதனை அங்குள்ள மக்களும் திட்டமிடலாளர்களும் உணர்ந்திருக்கின்றார்கள். சாவின் விழிம்பில் இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக கையாளப்படும் கடைசி துருப்பு சீட்டாக பாடசாலைத் தோட்டத்தை பரிந்துரைத்திருக்கின்றார்கள். அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். இதனை நாமும் பின்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமே. எமது பாடசாலைகளை வளங்களுள்ள பாடசாலைகளாக இன்னும் பசுமை சூழல் நிறைந்த பாடசாலைகளாக மாற்றும் தன்மைக்கு பாடசாலைத் தோட்டங்களும் உதவி செய்யும் என்பதோடு மாணவமாணவிகள் இத்தோட்டங்களிலிருந்து தமக்கான செய்திகளை எடுத்துச் சென்று தமது குடும்பத்தினருக்கும் இன்னும் சமூகத்துக்கும் அளிக்க முடியும் என நம்பப்படுகின்றது.

பாடசாலைத் தோட்டங்களை உருவாக்கியிருக்கும் அதிபர்களுக்கும் அதில் முன்னின்று உழைத்த ஆசிரிய பெருமக்களுக்கும் இந்த தருணத்தில் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் இன்னும் இவ்வாறான பல்வகைமை கொண்ட பாடசாலைத் தோட்டங்களை சமூகத்திற்கு பயன்தரத்தக்க வகையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. பாடசாலைத் தோட்டங்களூடாக மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் விளக்கமளிப்பதுடன் அவர்களுக்கும் இதன் பயன்பாடுகள் பற்றி தெரியப்படுத்துதல் நல்லது. இவ்வாறான விளக்கங்கள் மூலம் பாடசாலைத் தோட்டங்களிலுள்ள விடயங்களை பெற்றோர்கள் அவர்தம் பிள்ளைகள் இணைந்து தத்தமது வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி அதன் பயன்பாட்டை பெறுவதற்கு நாம் உதவியளிக்கலாம்.

ஊட்டச் சத்து குறைபாடு அதிகரித்துச் செல்லும் தற்காலத்தில் அதற்கான மாற்றுவழிகளை நாம் விரைந்து நடைமுறைப்படுத்தாது விட்டால் அதற்கான விளைவை எமது சந்ததியில் காண நேரிடும். இது வெறுமனே எழுத்தாக இல்லாது இதனை வாசிப்பவர்கள் அனைவரும் இதுபற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும் எனவும் அதன்பின் தம்மாலானவற்றை செய்து ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்க வழி செய்வோமாக.

*

*

Top