கலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மூன்றாவது முறையாக, கடந்த 15.09.2017 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவில் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும் விருது விழாவில், இலங்கை சினிமாத்துறைக்கு தன்னாலான சிறந்த பங்காற்றி இருக்கின்ற கலாநிதி தர்மசேன பத்திராஜா அவர்கள் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1943 ஆம் ஆண்டு பிறந்த இவர் கண்டி, தர்மராஜா கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றுக்கொண்டு பட்டப்படிப்புக்காக பேராதெனியா பல்கலைக்கத்திற்குத் தெரிவானார். 1967 இல் சிங்கள மற்றும் மேற்கத்தைய பாரம்பரிய கலாசாரத்தில் பட்டம் பெற்று வெளியேறி விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கியவர், பின்பு வங்காள சினிமா பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிலுள்ள மொனாஸ் பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார். தனது கல்விப் பணியை விரிவுரையாளராகக் களனிப் பல்கலைக்கழகத்திலும், பின்பு விரிவுரையாளாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், றுகுணுப் பல்கலைக்கழகத்திலும் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். தற்பொழுது இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தில் தலைவராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

1960 களில் இலங்கையில் மிகவும் பிரபல்யமாக இருந்த இலங்கைத் திரைப்பட சங்கத்திலேயே சினிமா மொழியைக் கற்றுக் கொண்டார். 1970 இல் சதுற என்ற ஒரு குறும்படத்தை தயாரித்து சினிமாவில் பிரவேசித்தவர். பின்பு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு ஆஹாசகுவா என்றதொரு முழுநீளப் படத்தை இயக்கியவர். இந்தப் படம் பலரால் வரவேற்கப்பட்டு அதற்காக இரு விதுகளை வென்றார். அதோடு இவர் படைப்பு முயற்சிகள் தொடர்ந்தன. பல விருதுகளையும் வென்றார்.

இவர் இரண்டு திரையரங்கக் கலை பற்றிய எழுத்துக்கள், தமிழ் படமான பொன்மணி உட்பட ஏறத்தாழ பத்துத் திரைப்படங்கள், இலங்கையில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கிய பிரதான மார்க்கங்கள் பற்றி ‘ஒரு தெருவின் தேடல்’ என்ற தலைப்புடனான தயாரிப்புடன் மொத்தம் ஏழு ஆவணங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்கள் என்று இவரது படைப்புலகம் நீள்கிறது.

இவர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியிருந்த சந்தர்ப்பத்தில் யாழ். மண்ணையும் மக்களையும் நேசித்தவர். அதனால் ஈர்க்கப்பட்டே பொன்மணியைப் படைத்தவர். சமாதனத்தை விரும்புபவர். நல்லிணக்கத்தை அப்பொழுதே ஆரம்பித்தவர். இவர் கௌரவிக்கப்படுவதை எல்லா கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களும், இலங்கை வாழ் அனைத்துச் சமூகமும் வரவேற்கிறது.

Related posts

*

*

Top