உலகளவில் உருக்கொண்ட உணவுப்பஞ்சம்!

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன்

லக உணவு தாபனத்தின் (Food and Agriculture Organization) அண்மைக்கால அறிக்கை உலகளாவிய பஞ்சம் பற்றி உலக மக்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. உலக மக்கள் என்னும்போது நாமும் எமது பங்குக்கு இந்த பஞ்சத்தை இல்லாதொழிக்க முற்பட வேண்டும் என்பது அதனுள் உள்ளார்ந்திருக்கின்றது என்பதாகும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்திடுவோம் என முழங்கிய எட்டயபுரத்துக்குரல் ஒய்ந்துவிட்டதாக இன்னமும் நாம் கருதவில்லை என்பதற்கு சான்றாக இந்த அறிவிப்பு உலக உணவுதாபனத்திலிருந்து ஒலித்திருக்கின்றது. உலக மக்களை சிந்திக்கத் தூண்டும் இந்த செய்தியினூடாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இதனை நாம் நல்லதொரு பாடமாகவும் படிப்பினையாகவும் வரித்துக்கொள்ள வேண்டும் என்பதும் எழுதும் இக்கைகளின் எதிர்பார்ப்பாகும்.

Prof.G.Mikunthanஉலக உணவுதாபனத்தின் (இணையத்தள முகவரி: www.fao.org) அறிக்கை பலவிடயங்களை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. அதில் உணவுப்பஞ்சம் என்பது ஒருபுறமிருக்க ஊட்டச்சத்து குறைபாடு என்பது இன்னொரு பிரச்சனையாக எழுந்திருக்கின்றது. இதற்கு முதலும் இக்கட்டுரைத் தொடரில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி அலசப்பட்டாலும் தற்போது உலகளாவிய ரீதியில் இதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது எம்மையும் மேலும் இதுபற்றி சிந்திக்க வைத்திருக்கின்றது. பொதுவாக கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தின் வீரியம் குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தற்போது உலகசனத்தொகையைக் கருத்தில் கொண்டால் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் 2015 ஆம் ஆண்டளவில் 775 மில்லியனாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடான மக்களுடன் ஒப்பிடும்போது 2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 815 மில்லியன் மக்களாக அதிகரித்திருக்கின்றது. அதாவது அதிகரிக்கும் மக்கட் தொகையுடன் இந்த ஊட்டச்சத்து நலிவான மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது. இந்த செய்தி தென்சூடானில் இவ்வாண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் செய்தியோடு சூட்டோடுசூட்டாக உலக மக்களை வந்து சேர்ந்திருக்கின்றது. தென்சூடானுடன் நைஜீரியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான உணவுப்பஞ்சத்தை தற்போது உணர்ந்திருக்கின்றன. இந்நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஏதுமறியாத பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினந்தினம் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருப்பதும் உலக முதலாளிகளுக்கு இன்னமும் தெரியவில்லை என்றா நினைக்கின்றீர்கள்? இல்லையில்லை இவற்றை கண்டும் காணாதவர்கள்போல பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள் என்னும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்தும் செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் உலகமும் உலக நிறுவனங்களும் ஏதும் செய்ய முடியாது வாளாவெட்டியாக பார்த்துக் கொண்டிருப்பது எமது இயலாமையை எடுத்தியம்புவதாக அமைகின்றது.

உணவுப்பஞ்சத்தைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா பகுதி, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பிரதேசங்கள் உள்நாட்டுப்போரில் தம்மையே அழித்துக் கொண்டிருக்கும்போது இயற்கையின் அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி என்பன இன்னொரு பக்கத்தில் இம்மக்களை வரட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றன. எல்நினோவின் (El-nino) தாக்கமும் காலநிலை மாற்றத்தின் (Climate Change) தாக்கமும் இவற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப்போர்கள் வலுவடைந்திருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதன்மூலமாக மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்ததும் இன்னும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. உணவுப்பஞ்சம் ஒருபுறமிருக்க கிடைக்கின்ற உணவும் ஊட்டச்சத்தற்ற உணவாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாதிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. மேலும் தற்போது சந்தைப்படுத்தல் குறிப்பாக ஏற்றுமதி செய்யும் தொகை குறைவடைந்திருப்பதனால் இறக்குமதியின் அளவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இறக்குமதியாகும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிகழும்போது அது சராசரி ஒரு மனிதனையும் அவர்சார்ந்த குடும்பத்தையும் வெகுவாக பாதித்துவிடும், பாதித்தும் இருக்கின்றதனை உறுதிப்படுத்த முடியும்.

விஞ்ஞான தொழில்நுட்பம் அபரிவிதமாக வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் கூட இவ்வாறான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது என்றால் உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்பதனை அனுமானிக்க முடிகின்றதல்லவா. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது உலகஉணவு உற்பத்தி இப்போதிருக்கின்ற மக்களுடைய தேவையை பூர்த்திசெய்ய போதுமானதாக அறிவிக்கப்பட்டும் இந்த உற்பத்தியான உணவு சரியாக பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தால் இவ்வாறான  பஞ்சம் ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை. அப்படியாயின் உணவு உற்பத்தி, அதன் கிடைதன்மை என்பனவற்றையும் தாண்டி உற்பத்தியான உணவை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஏதோஒரு காரணி தடைக்கல்லாக இருப்பது உணரப்பட்டிருக்கின்றது அல்லவா? இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்துதான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது? காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால்தான் எம்மையும் ஏதோவொரு விதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும்வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக என்று நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்படுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்துதான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருகாலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து அதன் உயர்வைப் பார்த்து இலங்கையைப்போல வரவேண்டும் என எண்ணினார்களாம். ஆனால் இப்போது நாம் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் உயர்வையும் அண்ணார்ந்து பார்த்து நாமும் சிங்கப்பூர்போல வரவேண்டும் என எண்ணுகின்றோம். காலச்சக்கரம் எவ்வாறு சுழன்றிருக்கின்றது பார்த்தீர்களா? அவர்கள் எம்மைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும்போது நாம் நம்மை நாமே அழித்துக் கொண்டோம். தற்போது அவர்களைப் பார்த்து வளர எத்தனிக்கின்றோம் ஆனால் அழித்ததிலிருந்து மீள்வதற்கு பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.

விஞ்ஞானம் பிற கோள்களில் மனிதன் வாழலாமா என பெருமெடுப்பில் ஆய்வினை செய்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றார்களென்பது எல்லோர் மனதையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருக்கின்றதல்லவா. நன்றாக கவனியுங்கள்! இந்த நிலைமை இங்கும் இருக்கின்றது. உணவு உற்பத்தி ஒருபுறமும் தினமும் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களை கிராமங்களுக்குள்ளே எந்தவித வருமானமுமின்றி உதவிகளுமின்றி விடப்பட்டுள்ள குடும்பங்களை கேட்டறிந்தால் தெரிந்து கொள்வீர்கள். விஞ்ஞானத்தின் உயர்வு ஆக்கத்திற்காய் இருக்கும் மட்டும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஆனால் அதனை அழிப்பதற்கும் தீங்கு செய்வதற்கும் பயன்படுத்த முயலும்போது விஞ்ஞான வளர்ச்சியின் எதிர்பார்த்த நோக்கம் ஈடேறவில்லை எனவே தோன்றுகின்றது. உணவுற்பத்தியிலும் இந்த பாரபட்சம் நடந்து கொண்டிருக்கின்றது. விரைந்துணவு தயாரிக்கும் நிலையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்காக இயற்கையின் தன்மையை மாற்றி சூழலையும் மாற்றி புதியவகை இனங்களை உற்பத்தி செய்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சிறிதேனும் சிந்தியாது சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தின் சமகால நடப்புக்கள் ஒருபோதும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை மாறாக பல தீங்கான நிலைமைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. பசியும் பட்டினியும் இன்னும் தலைவிரித்தாடும் நிலைமைகளே அனுமானிக்கப்படுகின்றன.

பட்டினியின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் உக்கிரத்தினுள் உடைந்து போனவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறான உள்நாட்டுப் போர்களினால் அபிவிருத்தியின் அடித்தளமான கிராமங்கள் உடைத்தெறியப்பட்ட சோகக்கதைகளே அநேகம். அடித்தளத்தை உடைத்தெறிந்து விட்டு எவ்வாறு அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். அதிலும் உணவுற்பத்தியின் மையங்களே கிராமங்கள்தானே! இந்த இடத்தில்தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். அபிவிருத்தி பற்றி கருத்தரங்கு மற்றும் மாநாடுகள் பல நடைபெற்றும் அவற்றின் தொனிப்பொருளான கிராம அபிவிருத்தி பற்றிய தீர்க்கமான முடிவுகள் பெறப்படவில்லை. அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் ஈடேறவில்லை. சாக்குப்போக்குக்கு செய்யப்படும் திட்டங்களாகவும் அவற்றினால் மக்களுக்கான வழிகாட்டல்கள் முழுமையானதாக இல்லாதிருப்பதும் கவலைதரும் விடயங்களே!

பசி பட்டினியினோடு சேர்ந்து ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்து மக்களை வாட்டுகின்ற சோகம் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதா? சத்துணவு திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள் பலவற்றில் ஒருவேளை உணவுக்காகவாவது பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 5 வயதிற்கு கீழான 155 மில்லியன் சிறுவர்கள் அல்லது பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் எனும் மிகமுக்கியமான தகவல் அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இன்னும் நம்மில் பலருக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட அறிந்துணர முடியாதிருப்பதனை என்னவென்பது. இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி நமது பிரதேசத்து திட்டங்களனைத்தும் இவற்றுக்கான தீர்வினை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். திட்டங்களின் முடிவுகள் மாற்றுவழிகளை பரிந்துரைக்கும் நேரத்தில் அவற்றிற்கான முடிவுகளையும் தீர்க்கமானதாக அறிவிக்க வேண்டும். எமது பிரதேசத்தில்  இந்த உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்னும் அவசியம் தேவைப்படுவோர் என இனங்காணப் படுபவருக்கும் வழங்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். உள்நாட்டுப்போரில் துவண்டு போன வடஉகண்டா நாடு போருக்கும் பின்னரான சரியான திட்டமிடல்களுக்கூடாக தற்போது தம்மை வளமுள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வளமான சந்ததியின் எதிர்காலம் சரியாக தீட்டப்படும் திட்டங்களிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் மேலும் அதற்கான சேவைகளிலும் தங்கியிருக்கின்றது.

‘சிறுகக்கட்டி பெருக வாழ்’ என்பதனை எமது மூதாதையர் எடுத்துக் கூறியதனைறியோ 20 முக்கியமான செய்தியாக சொல்லிச் சென்றிருக்கின்றது. இதனை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டால் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இளையவர் மனத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். வருங்காலம் அவர்களுக்கானது. சிறுகக்கட்டி என விளித்திருப்பது எமது சிறியளவிலான உற்பத்தியினை மையப்படுத்திய வீட்டுத்தோட்டங்களை குறிப்பிட்டுச் கூறலாம். ஏனெனில் வீட்டுத் தோட்டங்களில் பல்வகைப் பயிர்களை பயிரிட சிபார்சு செய்யப்பட்டதன் நோக்கம் ஒரு நேரத்தில் வகைவகையான பயிர்களை (multiple crops) அறுவடை செய்து ஆகக்குறைந்தது தங்களது அன்றாட தேவைக்காக பயன்படுத்த வழியுண்டு. நஞ்சற்ற பயிர்களை உற்பத்தி செய்யவும் இன்னும் ஒரேநேரத்தில் பல வகை பயிர்களை பயிரிட்டு உணவுக்காக பெறவும் வீட்டுத் தோட்டங்கள் (Home gardens) உதவும். அதனை இன்னும் வலியுறுத்தினால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், ஒருவேளை உணவுக்காக தவிக்கும் மக்கள், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காலத்தைக் கழிக்கும் மழலைகள், பெண்கள் என பலருக்கும் நிறைவான உணவை கிடைக்கச்செய்ய வழி செய்யலாம். இதற்கு இன்னமும் காலங்கடந்து விடவில்லை. அனைவரும் இந்த விடயத்திற்காகவாவது ஒன்று திரண்டால் சாது மிரண்டால் எமது தேசத்தை வளமுள்ள நிறைவான தேசமாக கட்டியெழுப்பலாம்.

Related posts

*

*

Top