சுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’

மட்டக்களப்பைச் சேர்ந்த சுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’, நேற்று 22.08.2019 காலை 10 மணிக்கு இல. 114, ராஜேந்திர பிரசாத் வீதியிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியது. காலை 10. 00 மணி முதல் மாலை 6. 00 மணி வரை நடைபெறும் இக்காட்சி எதிர்வரும் 29 ஆம் திகதிவரை  நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சி குறித்து சுசிமன் நிர்மலவாசன் அவரது அறிக்கையில்,

2006 ஆம் ஆண்டு நான் யாழ் தேசிய கல்வியியற் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவனாக இருந்த போது மேற்கொண்ட எனது தனிநபர் காட்சியான ‘கருவாடு’ காண்பியக் கலை காட்சியின் எடுத்தாளுனராக காண்பியக் கலைப் படைப்பாளர் சனாதனன் அவர்கள் செயற்பட்டிருந்தார். அதை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அச்சிடலுக்கான அனுசரணை ஏற்பாடுகளை கல்வியியலாளர் திருமதி வப்சி மரியதாசன் அவர்கள் செய்து முடித்திருந்தார். காட்சிக்கான படங்களைத் தெரிவு செய்த போது சுயாதீன விமர்சகர் அகிலனும் கூட இருந்தார். படங்களுக்கான சட்டகங்களை போடும் வேலைகளை ஓவியர் ஆசை இராசையா பொறுப்பெடுத்தார். காட்சி தொடர்பான கட்டுரைகளை சுதர்சினியும், இன்னும் சிலரும் எழுதிக் கொண்டிருந்தனர். பதிப்பு வேலைகளுக்காக என்னையும், படங்களையும் தீஸ் புகைப்படமெடுத்தார். ஒவியங்கள் திருநெல்வேலி யாழ்/முத்துத் தம்பி மகா வித்தியாலய சித்திர அறையில் வைக்கப்பட்டிருந்தன. கரிகணன் அச்சகத்தில் கையேடு அச்சிட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அழைப்பிதழ் அச்சிட்டு முடிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் இரவு அழைப்பிதழ்களுக்கான பெயர்களை எழுதிக் கொண்டிருந்தபோது ஆட்லெரி சத்தம் கேட்கத் தொடங்கியது. ஏ9 பாதை மூடப்பட்டது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது. யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது. நான், கொல்லப்பட்ட மனிதர்களை வீதிகளில் காணத் தொடங்கினேன். நண்பன் ஒருவன் ஒரு கொக்கோ பிஸ்கட்டையும் நீரையும் காலை உணவாக உண்ணத் தொடங்கினான். ‘கருவாடு’ காண்பியக் கலைக் காட்சி நடைபெறாமல் போனது. அதன் பின்னரான நாட்கள் மிக மோசமானது. பல சிரமங்களைத் தாண்டி முப்பதிற்கும் அதிகமான ஓவியங்களை விட்டு விட்டு மட்டக்களப்பை வந்தடையும் வரை நண்பன் சுரேந்திரன் தன் வீட்டில் வைத்து என்னைப் பாதுகாத்து வந்தான்.

அக் காட்சியில் காட்சிப்படுத்தப்பட இருந்த படைப்புக்கள் கடந்த காலங்களில் பெறுமதி அற்றுப் போயிருந்த மனித உயிர்களைப் பற்றியும், ஒருவர் கொல்லப்படும் போது அவர்களுடைய தாய், மனைவி, பிள்ளைகள் தொடர்பில் எம் சமூகத்தில் இருந்த திட்டங்களைக் கேள்வி கேட்பதாக அமைந்திருந்தன.

அன்று மீண்டும் தொடங்கிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பத்து வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தில் ஒரு தனி நபர் காட்சிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றேன். இக்காட்சியானது அன்று நடைபெறாமல் போன ‘கருவாடு’ காட்சியின் எனது நினைவு கூரலும், அதன் தொடர்ச்சியும் ஆகும்இ யுத்தம் தெரியாத புதிய தலை முறை ஒன்று பத்து வயதைக் கடக்கும் நிலையில், கடந்த காலங்களை நினைவு கூரவும். யுத்தம் முடிந்து விட்டது உங்களுக்குப் பிரச்சினை இல்லை எனச் சொல்லப்படும் சூழ்நிலையிலும், யுத்தத்தின் தழும்புகளை உடலிலும் மனதிலும் சுமந்து கொண்டு வாழும் மனிதர்களை நினைவு கூரவும், ஞாபகங்களைப் பகிரவும், அதனுாடாக ஆறுதலடைவதற்குமான ஒரு சிறு புள்ளியாக இக்காட்சி அமைய வேண்டும் என்பது! எனது விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Susiman nirmalavasan Art Exhibition (1) Susiman nirmalavasan Art Exhibition (2) Susiman nirmalavasan Art Exhibition (10) Susiman nirmalavasan Art Exhibition (9) Susiman nirmalavasan Art Exhibition (6) Susiman nirmalavasan Art Exhibition (5) Susiman nirmalavasan Art Exhibition (4) Susiman nirmalavasan Art Exhibition (3) Susiman nirmalavasan Art Exhibition (11) Susiman nirmalavasan Art Exhibition (12) Susiman nirmalavasan Art Exhibition (13)

Susiman nirmalavasan Art Exhibition (7) Susiman nirmalavasan Art Exhibition (8) Susiman nirmalavasan Art Exhibition (14)

 

Related posts

One Comment;

  1. Malini para said:

    ஓவியக் காட்சிப்படுத்தலும் ,காலத்தின் விழிம்பு நூல் வெளியீடும் வெகு சிறப்பாக நடை பெற்றிருக்கும் என்பதில் ஜயம் இல்லை.
    சுசீமனின் ஓவியங்களின் வெளிப்பாடு வெகு சிறப்பு கொண்டதாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தல் செய்துள்ளமையை பாராட்டுகின்றேன் சுசிமன் . நம் கலைஞனின் சிறப்பினை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் . ஓவியங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே பெருக வேண்டும் என்பதே என் ஆதங்கம் . அதனை சுசீமன் போன்ற இளங்கலைஞர்கள் இதுபோன்ற காட்சிப்படுத்தல், கருத்தரங்குகள் பாடசாலை மட்டத்தில் இருந்து கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். ஓவியர்கள் இருந்தால் தான் ஓவியங்கள் வரையமுடியும் அந்த ஓவியர்க் கலைஞர்களுக்கான முதன்மை மக்களிடையே சரியான முறையில் அடையாளப்படுத்துதல் முக்கிய விடயமாகும் .
    வாழ்த்துகள் சுசிமன்.

*

*

Top