திக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு

– அத்தனாஸ் யேசுராசா

சிங்கள எழுத்தாளர் கமல் பெரேராவின் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து ஏழு கதைகளைத் தெரிந்து – மொழியாக்கம் செய்து, ‘திறந்த கதவு’ என்னும் பெயரில் தொகுப்பாக்கியுள்ளார் திக்குவல்லை கமால். இத்தொகுப்பைக் கொழும்பிலுள்ள ‘எஸ். கொடகே சகோதரர்கள்’ நிறுவனம்இ 2௦௦9 இல் வெளியிட்டுள்ளது.

கமல் பெரேரா விருதுகள் பெற்ற ஓர் எழுத்தாளர். அவரது 4 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 அரசியல் பத்தி எழுத்துக்கள், வேறு 2 நூல்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. ‘மனித வாழ்வையும் அவர்களுக்கிடையிலான உறவையும் உண்மையான அன்புடனும் கௌரவத்துடனும் அவதானிக்கின்ற தன்மை இவரது கதைகளிலே மேலோங்கியிருக்கின்ற சிறப்பம்சமாகும்’ என்கிறார், திக்குவல்லை கமால்.

‘எனது இலக்கியப் படைப்புக்களுக்கூடாக தமிழ் பேசும் மக்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல், சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்ட ஆரம்பக் காலத்திலேயே எனக்கேற்பட்டது’ என்று கூறும் கமல் பெரேரா, ஓர் இடதுசாரி! இந்தத் தொகுப்பை அவர், தமிழ் எழுத்தாளரான டொமினிக் ஜீவாவுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிக்கத்தக்கது!

இத்தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன.

1. விலகல்

செல்லையா இக்கதையின் நாயகன். மனைவி பாம்பு கடித்து இறந்தபின், துயரில் தலவாக்கலை தோட்டத்திலிருக்க விருப்பமில்லாமல் அங்கிருந்து வெளியேறிக் கண்டிக்கு வரும் அவன், முதலில் ஒரு ‘பேக்கரியில்’ வேலை பார்க்கிறான்; பிறகு மஹியாவையில் ஒரு விறகு மடுவத்தில். அங்கு வரும்போது பழக்கமாகிய சிறிசேன முதலாளியின் அழைப்பை ஏற்று அவரிடம் வருகிறான்; அங்கு வீட்டு வேலைகளையும் பசுமாட்டையும் பார்த்துக்கொள்கிறான்; தொழுவத்தில் அவன் செய்யும் வேலைகள், முதலாளிக்கும் மனைவிக்கும் அவன்மீது நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தின. ஆறு மாதங்களாகக் காலில் வருத்தம்; வாதம் என நினைத்து மருத்து எண்ணெய் பூசினான். ஆனால், அண்மையில் கால் வீங்கி நடக்க முடியவில்லை; வருத்தம் கூடுகிறது. நோயாளியாகும் அவனை வைத்திருப்பது இனி நல்லதல்ல என்று, முதலாளியும் எஜமானியும் கதைப்பது காதில் விழுகிறது; மறுநாள் பசுவை விற்றுவிடப் போவதாகவும், அவன் கண்டி மருத்துவமனைக்குப் போய்த் தங்கியிருந்து நோயை மாற்றி வருவது நல்லதெனவும் முதலாளி சொல்கிறார். தன்னை நீக்குவதற்காகவே அவர் அவ்வாறு சொல்வது செல்லையாவுக்குப் புரிகிறது. அவன் ஏமாற்றத்துடன் மறுநாள் காலை கண்டிக்குச் செல்வதுதான் கதை. செல்லையா மென்மையான மன உணர்வுகொண்டவன்; முதலில் தோட்டச் சூழலை நீங்குவது அதனால்தான். பேக்கரியில் வேலை செய்த இளைஞனுக்கு கணக்குவழக்கில் அநீதி நிகழ்ந்ததால்தான், அதனையும் நீங்குகிறான்; இங்கும் பசுவை விற்கப்போவதாக முதலாளி கூறுவதன் உள்நோக்கத்தை உணர்ந்து கொள்கிறான். எப்போதும் விசுவாசமாக உழைக்கும் மலையகத் தொழிலாளியாகிய அவனது பாத்திரம், மனதில் பதிகிறது.

‘ஆ செல்லையா ….ஒருமுறை டாம் இழுத்துப் பார்ப்போம்….’ (பக். 4)

தொழுவத்தின் ஒரு பகுதிக்கு முதலாளி வீட்டு பெற்றோல் விளக்கின் வெளிச்சம் விழும். (பக். 5)

பழக்கப்படி மரக்குற்றியில் அமர்ந்து வெற்றிலைத் தட்டை மடியில் வைத்து வெற்றிலை வாய் தயாரிக்க ஆரம்பித்தான். (பக். 6)

…. வாசலிலிருந்து வந்த முதலாளி கண்ணாடிக் கூட்டத்தைக் கையிலெடுத்தபடி …. (பக். 6)

என வரும் மொழிநடைத் தவறுகள் பிசிறல்களாக உள்ளன.

சாதாரண மொழிநடையில் சித்திரிப்பு அமைந்து, ஒரு சாதாரண கதையாகிறது!

2. நெருப்பின் கண்ணீர்

1983 இல், தமிழருக்கெதிரான இன வன்முறைச் சூழலில் கதை நிகழ்கிறது. ஓர் அலுவலகத்தில் உள்ளவர்கள், வெளிப்புறத்தில் நடைபெறும் வன்முறைகளை யன்னல்களுக்கூடாகப் பார்க்கின்றனர்.

‘இங்கயும் ஆரம்பித்திட்டாங்கள்….இந்தத் தடவை ஒருவனையும் விடக் கூடாது….’

‘ஆ…. ஆ …. சாரதாஸுக்கும் கதையைக் குடுக்கிறாங்க….’

‘அதோ இன்னொரு புகை மண்டலம் எழும்புது …. ஸ்டேசன் பக்கமிருந்தல்லவா….? நிச்சயமாக அஜந்தாவுக்குக் கதையைக் குடுத்திட்டாங்க…. மேல போனா அந்த மாதிரி பார்க்கலாம்….’

‘ஆ…. ரெண்டு மணிக்குக் கேஃபியூவாம்….’

ஊழியரிடையே பதற்றம் உருவாகிறது. போக்குவரத்து எப்படி?; பள்ளிக்கூடங்களில் சின்னதுகள்; பக்கத்தில் தமிழரின் வீடு – அது எரிந்தால் எமது வீடும் எரியுமே! பதற்றத்துடன் வெளியேறுகின்றனர். யன்னலிலிருந்து அப்போதுதான் நீங்கிய சிற்றூழியனான தயாரத்ன, அங்கு பேசப்பட்டவற்றை ஆச்சரியத்துடன் நினைக்கிறான்: ‘அவர்களின் இதயம் இவ்வளவு கொடூரமாக இருக்குமென்று நான் ஒரு நாளும் நம்பவில்லை…. உயிர்க் கொலை பற்றி…. தீ மூட்டுவது பற்றி…. எந்தளவு சந்தோஷமாக அவர்கள் கதைத்துக்கொண்டார்கள்….’

யன்னல்களை மூடி, மின்விசிறிகளை நிற்பாட்டி, பின் பக்கத்தைப் பார்க்கச் செல்கிறான். மூடாது விட்ட தண்ணீர்க் குழாயில் நீர் வடியும் சத்தம்; அப்பக்கத்தைப் பார்க்கையில், உடைந்த கதிரையொன்றில் தலையைத் தொங்கவிட்டபடி செல்வராஜா. அவனைப் பெயர்கூறி அழைத்தபோது, அவன் தயாரத்னவைப் பயத்துடன் பார்த்தான். ஆதரவுடன் அவனைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்குப் போக முடிவெடுத்தான்; இடையில் கலவரக் கும்பல்களிடையே சிக்காமல் சமாளித்தபடி போனார்கள். இரவில் சிறு கும்பல் தயாரத்னவின் வீட்டின் முன் நின்று உள்ளேயிருப்பவனை வெளியில் விடும்படி கத்தியபோதும், ஒருவாறு சமாளித்துவிட்டான். விடிகாலையில் செல்வராஜாவைக் கூட்டிச் சென்று வெள்ளவத்தை அகதி முகாமில் சேர்க்கிறான். கலவரத்திற்கான பழியை இடதுசாரிகள் மீது திட்டமிட்டுச் சுமத்தியது அரசாங்கம். கலவரங்கள் ஓய்ந்து சிறிது காலத்தின் பின் செல்வராஜா அலுவலகம் வந்தபோது, சில பிரசுரங்களுடன் தயாரத்னவைக் கைதுசெய்து பொலிஸ் கொண்டுபோனது தெரியவருகிறது; இனவெறியின்றி உதவி புரிந்த ஒருவனையே கைதுசெய்யும் நிலைமை! செல்வராஜா துயரடைகிறான்.

வரலாற்றில் முக்கியமாகிய ஓர் இனவன்முறைக் கொடூரத்தின் பதிவாகிறது இக்கதை; ஆசிரியரின் தமிழர் மீதான பரிவு வெளிப்படுகிறது; எனவே, எம்மையும் கவர்கிறது! ஆயினும் சாமான் சட்டிகள்; ‘கதையைக் குடுக்கிறாங்க….’ ; செல்வராஜாவை வெள்ளவத்தை அகதி முகாமில் ஒப்படைத்துவிட்டு நன்றாகவே உடைந்து போன உள்ளத்தோடுதான் தயாரத்ன வீடுவந்து சேர்ந்தான் – என மொழிநடைப் பிசிறல்கள் காணப்படுகின்றன!

3. புயல்

1988 – 1989 காலகட்டத் தென்னிலங்கையில், ஜே.வி. பி. தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அரசுப் படைகள் ஈடுபட்டமையைக் கதை சித்திரிக்கிறது; கதாநாயகன் கொமாண்டோப் படையின் அதிகாரி. சந்தையில் வியாபாரம்செய்யும் உள்ளூர்க் கிளர்ச்சிக்குழுத் தலைவனை உளவாளி அடையாளங்காட்ட, சிவிலுடையில் சென்று அவனது தலையில் சுட்டுக் கொல்கிறான். சுடுவதற்கு முன் அவனது கையைப் பற்றிப் பிடித்து, பிறகு காதுப் புறத்தில் பிஸ்ரலை அழுத்தும்போது அவன் பார்க்கிறான். ‘மிகச் சிறு சலனம் கூட அந்தக் கண்ணில் காணப்படவில்லை. எல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்து தலைவிதியைப் பொறுப்பெடுத்த கண்கள். இறுதிக் கட்டத்தில்கூட அதிகாரியின் முகத்தை அசையாது அவதானித்தபடி யிருந்தன அந்தக் கண்கள்.’ அந்தப் பார்வை அதிகாரியை ஆழமாகப் பாதித்தது. பின்னர் வெவ்வேறு வேளைகளில் அந்தப் பார்வை நினைவுக்கு வந்து, அவனை ஆட்டங்காணச் செய்கிறது!

பிடிபட்ட இன்னொருவனும் முக்கியமானவன்; அவனைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால், அவனது மனைவி குழந்தையை அணைத்தபடி நின்று அழுது கெஞ்சினாள்; கணவன்மீதான அவளின் நேசமும் அவளது கண்களின் பார்வைத் தாக்கமும் அதிகாரியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த, விடுதலை செய்யப்படுகிறான். சில நாள்களின் பின்னர் குழந்தையுடன் முகாமுக்கு வரும் அவள், கிளர்ச்சிக்காரரால் கணவனது உயிருக்கு ஆபத்தெனக் கூறி, பாதுகாப்புக்காக அவனை உள்ளேயே வைத்திருக்கும்படி கெஞ்சுகிறாள். அப்போதும் அவளது கண்களின் பார்வையினாலும் தோற்றத்தாலும் அதிகாரி தடுமாறுகிறான். அதைமீறி, ‘எழும்ப முயற்சித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சக்திகுன்றிய நோயாளிபோல் கதிரைமீது சரிந்து விழுந்தார்’ என்பதுடன் கதை முடிகிறது. அக்காலச் சூழலின் பதற்றம், அதிகாரியின் பெற்றோர் மூலமும் வெளிப்படுத்தப்படுகிறது. அதிகாரியின் நினைவுகள், நிகழ்வுகள் என மாறி மாறி வெளிப்படும் சித்திரிப்பு வித்தியாசமாக; மொழியும் அவ்வாறே! நல்ல கதையாகிறது.

ஆனால், ஒடுக்கும் அரச இயந்திரத்தின் கருவியான ஓர் அதிகாரிமீது பரிவுகொள்தல் சரிதானா என்னும் கேள்வியும் இருக்கிறது!

‘கொஞ்சம் சுகம் போதாது…. இன்னொரு நாளைக்கு வரச் சொல்லுங்கோ.’ ; இனியாவது மாறனின் வாயிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு….

என்பவற்றில், மொழிநடைப் பிசிறல்கள் உள்ளன; ‘மாறன்’ என்பது என்னவென்று தெளிவில்லை!

4. முக்கோணம்

ஜே. வி. பி. இயக்கத்தின், இரண்டாம் எழுச்சிக் காலகட்டம்தான் கதையின் பின்னணி. கடையப்பம் செய்தும் மாடுவளர்த்துப் பால் விற்றும் இரண்டு பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்களாக்கினாள், லூசி மாமி. மூத்தவள் குஸுமாவதி, சைக்கிள் கடை சிரிபாலவுடன் ஓடிப்போனாள். ‘பனிகொட்டும் அதிகாலையில் கடையப்பப் பெட்டியைப் பூத்தட்டுப்போல் அணைத்துக் கொண்டு கடைகளுக்குச் செல்லும் பாலையாவின் உருவம் ஒவ்வொரு காலையிலும் எங்கள் முதற் காட்சியாக அமைந்தது எனக்கு இன்னும் ஞாபகம். பாடசாலை விட்டு வந்து லூசி மாமியின் பின்னால் தென்னோலை சேர்க்க ஓடும் காட்சி அடுத்து எங்கள்கண்களில் தெரிந்தது….. மாலையில் எங்களோடு பந்தடிக்க வரும் அவன் இருள்படர ஆரம்பித்ததும், வளர்ந்த ஒருவன்போல் பசுமாட்டை ஒழுங்கை வழியாக முன்னெடுத்துச் செல்வான்.’ என்பது, வெளிநாட்டிலிருந்து வந்த கதைசொல்லியின் கூற்று. ‘அவனைப் போல் துன்பம் அனுபவித்த பையன் இந்த ஏழு ஊரிலும் கிடையாது. அக்கா போயிட்டாளென்று அம்மாவுக்கு ஏதாவது குறை வைத்தானா?’ என்பது அம்மாவின் கூற்று!

பாலையா உயர்தரம் கற்றுப் பாசாகியவன்; பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிட்டவில்லை. ஊர் விகாரையுடன் தொடர்புள்ளவன். அமைதியானவன்; நிறைய வாசிப்பவன். கதைசொல்லி உட்பட ஊரில் பலராலும் மதிக்கப்படுபவன். ஒரு நாள் காலை காணாமல்போகிறான்; என்ன நடந்ததெனத் தெரியவில்லை. தாய் ஏக்கத்துடன் அவனது வருகையை எதிர்பார்க்கிறாள்; நோயாளியாகிறாள். விகாரையின் பெரிய பிக்கு, சின்ன பிக்கு, காவலாளி ஹிமியொங், மெகி மாமி, சுங்க அதிகாரி சில்வா எல்லோரும் அவனை மதிக்கின்றனர். காணாமல்போன நாளுக்கு முதல் நாளிரவு, ‘…. நாட்டில் நடப்பவற்றைப் பார்க்கும்போது இளைஞர்கள் என்ற வகையில் நாங்கள் இப்படி இருப்பது சரியா?’ என அவன் கேட்டதாகஇ சின்ன பிக்கு தெரிவிக்கிறார். ஆசிரியர் நியமனப் பட்டியலில் அவனது பெயரை நீக்கிவிட்டு, உறவினர் பெயரைச் சேர்த்த மந்திரியின் செயலுக்குக் கோபப்படாமல், ‘அவங்களுக்கேற்ற விதமாகத்தான் சமூகம் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கு. அவங்களோட கோபம் பாராட்டி வேலையில்லை. இப்படியான விடயங்களுக்கு முழுச் சமுதாயமும் பதில் கூறவேண்டும். உள்ளேயும் வெளியேயும் இந்தச் சமுதாயம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.’ என முன்னர் அவன் சொன்னதையும், கதைசொல்லி நினைக்கிறான். வெளிநாட்டுக்குத் திரும்பும் நாளின் முன் லூசி மாமியைச் சந்திக்கச் சென்று, அவளது காலடியில் விழுகிறான். ‘நரம்புகள் வெளிப்பாய்ந்து உலர்ந்து போயிருந்த அவளது கால்களை மிகுந்த அன்புடன் முத்தமிட்டேன். லூசி மாமியின் மெல்லிய கைகள் என் தலையைத் தொட்டுத் தடவுவதுபோல் எனக்கு ஞாபகம்.

‘குஸுமாவதி…. இங்க இளையவன் வந்திருக்கான்.’

லூசிமாமியின் குரலில் என்றுமில்லாத உயிரோட்டம் அப்போது காணப்பட்டது.’ என்பதுடன் கதை முடிகிறது. நல்ல கதை.

ஆயினும், ‘எட்டு மணிக்கு கடையேறினான்.’ ; ‘நான் வீட்டுக்கு ஏறியவுடன்….’ ; மாட்டுக்குட்டி போல் என, மொழிப் பிசிறல்கள் உள்ளன!

5. ராஜினி வந்துசென்றாள்

ராஜினி இலண்டனிலிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு வந்திருந்தாள்; தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வொன்றுக்காகவே அவள் வந்தாள். முன்பு இடதுசாரிக் கட்சியில் சேர்ந்து வேலைசெய்த தோழர் விஜேரத்னவைச் சந்திக்கிறாள். இருவருக்கும் முன்பு நெருக்கமான உறவு இருந்துள்ளது. ராஜினி கணவனைப் பிரிந்திருக்கிறாள்; விஜேரத்ன மணமாகி பிள்ளைகளுடன் கொழும்பில் வசிக்கிறார்; அவர் எழுத்தாளரும் பத்திரிகை யாளருமாவார். ராஜினியின் வற்புறுத்தலில் ஆவலுடன் இணைந்து யாழ்ப்பாணம் செல்கிறார். இடையில் ஓமந்தை மற்றும் முகமாலை ஆகிய இடங்களில், இராணுவம் மற்றும் புலிகளின் தடையரண்களில் வெவ்வேறு அனுபவங்கள். போகுமிடங்களில் யுத்த அழிவுகளின் காட்சிகள். ராஜினியின் ஊரான சாவகச்சேரியில் அவளின் குடும்ப வீடு அழிந்திருக்கிறது. பக்கத்தில் பெரியம்மாவின் வீடும் அடையாளமின்றி அழிந்துள்ளது. தனக்கு இங்கு ஒன்றுமேயில்லை என்ற உணர்வு அவளுக்கு. யாழ்ப்பாணத்தில் தனக்குத் தெரிந்த ஜெயசீலன் அடிகளிடம் போகிறாள்; விஜேரத்னவை அறிமுகம் செய்துஇ அங்குள்ள நிலைமைகளை விசாரிக்க அவர் விளக்குகிறார். அவளது உறவினர் சிலர் இறந்ததையும் அறிந்துகொள்கிறாள். திரும்பி வருகையில், ‘எனது நாடு இல்லாமல் போய்விட்டது…. கணவன் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்…. எப்படியாவது மனதைச் சரிசெய்துகொண்டு மகனோடு மீண்டும் இங்குவர எண்ணியபடியே வந்தேன்…. இப்பொழுது அதுவும் முடிந்துவிட்டது. ஏன் விஜே எங்களுக்கு இப்படி நடக்கிறது?’ என்று அவனிடம் கேட்கிறாள். வந்த வேலை முடிந்ததில் கொழும்புக்கு வருகின்றனர். அவனது மனைவிக்குச் சில பரிசுப் பொருள்களை அவனிடம் கொடுத்துவிடுகிறாள். ஒரு பெண்ணுடன் யாழ்ப்பாணம் போவதாகச் சொல்லாததால், மனைவி சந்தேகத்துடன் கோபப்படுகிறாள். விமான நிலையத்துக்குத் தன்னுடன் வரமுடியுமா எனத் தொலைபேசியில் ராஜினி கேட்கிறாள்; பதில் சொல்லத் தயங்கியபடி தொலைபேசியைக் கையில் பிடித்துக்கொண்டு விஜேரத்ன நிற்பதுடன், கதை முடிகிறது. கடந்தகால உறவுகள், தற்கால நிலைமைகள் பற்றிய சித்திரிப்புகள். இடையில் உரையாடல்களில், மொழி தெரியாமைதான் சிங்கள – தமிழ்ப் பிரச்சினைக்குக் காரணம் எனக் கதைக்கின்றனர். எல்லோரும் உணர்ச்சிகளின் அடிமைகளாகியமை காரணமென ஜெயசீலன் அடிகள் கருதுகிறார். இவையெல்லாம் மேலோட்டமான பார்வைகள்! இடதுசாரிக் கட்சியில் வேலைசெய்த இருவரும், கட்சி விட்ட தவறுகளாக – பொருள்முதல்வாதத்தை (நூலில் பௌதிகவாதம் எனவுள்ளது) பிழையாக விளக்கியமை, பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து அந்நியப்பட்டமை போன்றவற்றைக் கதைக்கின்றனர். ஆனால்,. எரியும் பிரச்சினையாகவுள்ள இனச்சிக்கலின் அடிப்படைகளைத் தெளிவாகக் கண்டுகொள்ளாமை, ஏமாற்றந் தருகிறது.

பரவாயில்லாத ஒரு கதை எனலாம்!

இக்கதையிலும், ‘காரின் சுக்கான் மீண்டும் எனது கையில்,….’ ; ராஜினி அவரின் முன் சென்று முட்டுக்காலில் விழுந்தாள். அடிகளார் இரு கைகளாலும் பிடித்து அவளை எழுப்பியபடி…. ; ‘சும்மா பொய்சொல்ல வேண்டாம் விஜே…. நீங்க அந்தத் தமிழிச்சியோட போனீங்க…. நான் எல்லாம் தேடிக்கொண்டன்.’ என, மொழிநடைப் பிசிறல்கள் உள்ளன!

6. பிரதிவாதி

ஜே.வி. பி. கிளர்ச்சிக்காலக் கதை. ரணதுங்க கண்டியிலிருந்து கொழும்பு வந்து, லொக்கு பண்டார ஐயாவின் அலுவலகத்துக்கு வந்தான். அவனது பாட்டன், பூட்டனெல்லாம் லொக்கு பண்டார வளவிலும் வயலிலும் வேலைபார்த்த ஏழைகள். லொக்குபண்டாரவின் கொழும்பு வீடு சென்று பாட்டன் கதைத்த போது, ரணதுங்கவை அனுப்பும்படி சொன்னதன்பேரில்தான் இப்போது சந்திக்க வந்திருந்தான். சான்றிதழ்களும் விண்ணப்பமும் உள்ள பைல் கவரை அவரிடம் கொடுத்தான். அதனைப் புரட்டிப் பார்த்தபடி, ‘புரட்சி செய்யப் புறப்பட்டது வேலை இல்லாததாலா? அல்லது சேகுவேராவாகும் ஆசையிலா?’ என்று கேட்டவர், பிறகு சற்றுத் தள்ளியுள்ள பகுதியில் அமர்ந்திருக்கும்படியும், சிலருடன் கதைத்து இன்றே முடிவுசொல்வதாகவும் தெரிவிக்கிறார். அவன் கதிரையில் அமர்ந்து அங்குள்ள ‘ரைம்’ இதழிலுள்ள கம்புச்சியக் கிளர்ச்சியாளரின் சித்திரவதைப் படங்களைப் பார்க்கிறான். அவனை அறியாமலே நினைவுகளுள் மூழ்குகிறான். அவனை ஒரு பொலிஸ் அதிகாரி ‘வாடா போக….’ எனக் கழுத்தைப் பிடித்து, கண்ணைக்கட்டி ஜீப்பில் தூக்கிப் போடுகிறார். பிறகு ஓரிடத்தில் விசாரணை. அவன் தேசப்பற்றாளர் குழுவைச் சேர்ந்தவன் அல்ல; ஆனால் அடையாள அட்டைகளைச் சேகரிக்கும் குழுவுடன் சென்றிருக்கிறான். லொக்கு பண்டார வளவுக்கும் சென்று அடையாள அட்டைகளை எடுத்திருக்கிறான். ‘…. அப்பாமாருக்கு, பாட்டன் பூட்டன்மாருக்கு வளவுப் பரம்பரையால் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக, ஒருநாளைக்கென்றாலும் அவர்களைப் பயத்தால் நடுங்கவைக்க எனக்குத் தேவையிருந்தது.’ என்கிறான். வேறு நினைவுகளுடன் தனது கண்கட்டு அவிழ்க்கப்படுகையில் விழிக்கிறான். ‘என்ன ஏதோ பயந்தது போல….அங்கு பெரிய ஐயா…. உடனே வரச் சொன்னார்.’ என ஒருவன் முன்னால் நின்று சொல்ல, அங்குமிங்கும் பார்த்து லொக்கு பண்டார ஐயாவின் அறை வாசலை நோக்கி ரணதுங்க நடப்பதுடன், கதை முடிகிறது. ஒரு சாதாரண கதை!

7. திறந்த கதவு

கொழும்பில் மாகிரட் அம்மாவின் நான்கு மாடி வீட்டில், வாடகைக் குடியிருப்பாளனாக வரும் நாதனுக்கு விபரம் சொல்கிறாள் அவள். மனைவியும் இரு பிள்ளைகளும் பருத்தித்துறையில்; பிறகு அவர்கள் வருவார்கள் என்கிறான். எதிரேயுள்ள வீட்டின் கதவு திறக்கத் தோன்றும் முரட்டு மீசைக்கார ஜோதிபால, ‘எங்கட ஆக்கள் எவ்வளவோ இருக்க நீ அந்நிய ஜாதிக்காரனுக்கு வீட்டைக் கொடுத்திட்டே என்ன?…. சரி நாங்கள் பார்த்துக்கொள்வோம் மாகிரட்’ எனச் சத்தம்போடுகிறான். நாதன் திடுக்கிடு கிறான். மாகிரட் ஜோதிபாலவுக்குச் சிலவற்றை விளக்கிவிட்டு, இதைப் பொருட்படுத்த வேணாம் என நாதனுக்கும் சொல்லிச் செல்கிறாள்.

நாதன் குழப்பத்தோடு உள்ளே சென்று கதிரையில் அமர்கிறான். ஜோதிபாலவினால் துன்பங்கள் வரக்கூடுமென அச்சமடைகிறான், அவனைப் போன்றவர்கள் படையினருக்குத் தவறான தகவல் கொடுக்கக்கூடுமெனவும் நினைக்கிறான். எனினும் பிள்ளைகள் இருவர்மீதும் புலிகள் கண்வைத்துள்ளார்கள் என்றும், பருத்தித்துறையிலிருந்து யுத்தத்தில் பலியாவதை விட இங்கு வசிப்பது நல்லதெனவும் தோன்றுகிறது; மனக் குழப்பத்துடன் வீட்டை ஒழுங்குபடுத்துகிறான்; கூட்டிப் பெருக்கித் துடைத்து, பின்னர் தண்ணீரை வாளியில் நிரப்பி நிலத்தைக் கழுவினான். தண்ணீர் குடிக்க எழுந்தபோது தவறி வீழ்ந்ததில் நீர்க்குழாயின் வாய்ப் பகுதி உடைந்துவிட, தண்ணீர் பெருகுகிறது; அதனைத் தடுக்க இயலவில்லை. தண்ணீர் பெருகி வெளிப்புறம் சென்றால், முன்வீட்டிலுள்ள ஜோதிபாலவினால் சச்சரவு வருமே எனவும் பயப்படுகிறான். வேறு வழியில்லாது முன்வீட்டுக் கதவைத் தட்டுகிறான்; சிறிது நேரத்தின் பின் ஜோதிபாலவின் கதவு திறக்கிறது; எச்சில் கையுடன் அவன். தனது இன்னல்நிலையை அவனிடம் நாதன் சொல்கிறான். ‘ஐயோ இது ஸிம்பல் கேஸ் ஐயா…. இருங்கோ ஒருநொடியில் வந்திடுறன்’ என உள்ளே சென்று, உபகரணப் பொதியுடன் வருகிறான். குழாயை வெட்டிப் புதிய இணைப்பை ஏற்படுத்திச் சரிசெய்கிறான். நாதன் நூறு ரூபா பணம் கொடுக்க, ‘என்ன சேர் பைத்தியமா…. உதவி செய்துவிட்டு காசு வேண்டும் பழக்கம் எங்களிடமில்லை….’ என மறுத்துவிட்டு, இன்னும் சாப்பிடவில்லை யல்லவா எனக் கேட்டுவிட்டு, ‘எங்கள் உறவினர் ஒருவருக்கு வீட்டைத் தருவதாக மாகிரட் அம்மா எனக்கு உறுதியளித்திருந்தார்….. அதனால்தான் சேர் ….சின்னதொரு குழப்படி செய்தன். இனி அந்த உறவினருக்குப் பதிலாக உங்களை புதிய உறவினராக ஏற்றுக்கொள்றன்…. வாங்க சேர்…. எங்கட வீட்டில் இருக்கிறத சாப்பிடுவோம்’ என்ற ஜோதிபால, நாதனின் வலக்கையைப் பற்றியபடி தனது வீட்டின் திறந்த கதவை நோக்கி நடந்தான். – என்பதுடன் கதை முடிகிறது!

சிங்கள தமிழ் இன உறவின் குறியீடுபோல், ‘திறந்த கதவை’ ஆசிரியர் கருதுகிறார்! ஆனால், இது மேலோட்டமானது. தனிப்பட்ட மனித உறவுகள் மதிக்கத் தக்கவைதான்; ஆயினும், இலங்கையில் உண்மையான இன உறவுச் சூழலுக்குச் செய்யவேண்டியவை இன்னும் ஆழமானவை – அரசியல் சார்ந்து வேறானவை!

ஆசிரியரின் மனிதாய ஈடுபாடும், தமிழர் மீதான பரிவும், குறிப்பிட்ட கால அரசியல் நிகழ்வுகள்மீதான அக்கறையும் கதைகளில் வெளிப்படு கின்றன. நுட்பமான உணர்வுத் தாக்கங்கள் பாத்திரங்களில் ஏற்படுவதையும் வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார். இவை பாராட்டத் தக்கவை. மொழி நடைப் பிசிறல்கள் அற்றதான – இன்னும் சிறந்த – மொழியாக்கப் பிரதி கிடைக்குமானால், சிங்கள இலக்கிய உலகில் மதிக்கப்படும் ஆசிரியரின் படைப்பு முயற்சியைத் தமிழ் வாசகர் சரியாகக் கணிப்பதற்கு உதவியாக அமையும் எனச் சொல்லத் தோன்றுகிறது!

– இது ‘ஜீவநதி’ (இதழ் – 13௦) இல் வெளியான கட்டுரை.

*

*

Top