நாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்

ஈழத்தின் பிரபல நாடக ஆசிரியரும், நாடக கலைஞரும், புகழ்பூத்த எழுத்தாளருமான கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை தனது 86 ஆவது வயதில் அவரது சொந்த ஊரான அராலியில் காலமானார்.

1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி யாழ். அராலியில் பிறந்த ந. சுந்தரம்பிள்ளை யாழ்ப்பாணம் நீராவியடி கடையிற்சுவாமி வீதியை நீண்டகால வசிப்பிடமாக கொண்டிருந்தார். யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ந. பாலசுந்தரம்பிள்ளை பட்டப்பின்படிப்பாக ‘கல்வி டிப்ளோமா’ பட்டத்தினையும் பெற்றுள்ளதுடன் நீண்டகாலமாக ஆசிரியர் பணியும் ஆற்றியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1950ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் ‘கையொப்பம்’ எனும் தலைப்பில் வெளியானது. இவரின் சிறுகதைகள் இலங்கை தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

பல்வேறு சிறுகதைளை இவர் எழுதியிருந்தாலும், சிறுகதைத் துறையினை விட நாடகத்துறையிலேயே இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதலாவது நாடகம் கடந்த 1954ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் ‘இழந்த காதல்’ எனும் தலைப்பில் அராலி சரஸ்வதி வித்தியாசாலையில் அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தின் நாடக ஆசிரியராகவும், கதாநாயகனாகவும் இவரே திகழ்கிறார். கடந்த 1959ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியேற்ற பின்னர் இவர் தனது சொந்த மண்ணான அராலியில் மேடை நாடகத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். இந்நிலையில் கடந்த 1954 இற்கும் 1974 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.

இவரது முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் ‘நானே ராஜா’ எனும் தலைப்பில் கடந்த 1980ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் சுமார் 385 இற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று பின்னர் முழுநேர வாசிப்பையும், எழுத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்து வந்தார். அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின் இழப்பு ஈழத்து நாடகத்துறைக்கு பேரிழப்பு என்றால் மிகையாகாது.

அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை இதுவரை 21 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விபரம் வருமாறு:-

வானொலி நாடக நூல்கள்:

கெட்டிக்காரர்கள் – 1988

முதலாம்பிள்ளை – 1990

வீடு – 1997

யாழ்ப்பாணமா? கொழும்பா? – 1998

எங்கள் நாடு – 2002 (பரிசு பெற்ற வானொலி நாடகங்கள்)

மழைவெள்ளம் – 2003

இமயம் – 2004.

மேடை நாடக நூல்கள்:

பொலிடோலே கதி – 1976

பணமோ பணம் –  1977

இலக்கிய நூல்கள்:

நாடகம் எழுதுவது எப்படி? – 1997

வானொலி நாடகம் எழுதுவது எப்படி? – 2003

சிறுகதை எழுதுவது எப்படி? – 2005

யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள் – 1997.

விமர்சன நூல்கள்:

இலக்கியக் கட்டுரைகள் – 2000

‘வீடற்றவன்’ நாவலின் விளக்கமும், விமர்சனமும் – 2001

 இலக்கிய விமர்சனம் – 2002

பொருளோ பொருள் நாடகத்தின் விளக்கமும் விமர்சனமும் – 2004.

சிறுகதைத் தொகுப்பு:

யாழ்ப்பாணம் – 1999

நாவல்கள்:

அக்கரைச் சீமையில் – 1994

ஒரு காதலின் கதை – 2001

பெற்ற பரிசில்களும், விருதுகளும்:

இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 2000ஆம் ஆண்டு நடத்திய பவளவிழா இலக்கியப் போட்டிகளில் வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,  தேசிய ஒருங்கிணைப்பு செயல்திட்டப் பணியகம் ஆகியன ஒருங்கிணைந்து 1998 ஆம் ஆண்டு நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.

நோர்வே நாட்டுத் ‘தமிழ் நாதம்’ வானொலி நிலையம் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.

நோர்வே நாட்டிலுள்ள ‘மொல்டே தமிழ் கலை கலாசார மன்றம்’ அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.

கனடா ரொறன்ரோ பெருநகர் – ஆசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவினால் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.

இலங்கை வானொலி 1995ஆம் ஆண்டு நடத்திய நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.

வீரகேசரி பத்திரிகை 1997ஆம் ஆண்டு நடத்திய நாவல் எழுதும் போட்டியில் மூன்றாம் பரிசு.

அவுஸ்திரேலியாவில் உள்ள ‘விக்ரோரியா இலங்கைத் தமிழர் சங்கம்’ நடத்திய இலக்கியப் போட்டிகளில் சிறு கதைக்கான முதலாம் பரிசு.

முதலாம் பிள்ளை, எங்கள் நாடுஇ இமயம் நாடக நூல்களுக்கு வடக்குஇகிழக்கு மாகாண சபையின் பரிசுகள்.

1988ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.

இமயம் நாடகநூலுக்கு – சாகித்தியப் பரிசு.

இவரின் இத்தகைய சேவைகளை கருத்திற் கொண்டு இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ‘கலாபூஷணம்’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

 ஞானம் அட்டைப்பட அதிதி. 2010.ஒக்.

 தமிழியல் விருது – 2013.

*

*

Top