‘சுவர்க்க வாசல்’ – தேவி பரமலிங்கம்

‘பொழுது விடிஞ்சிட்டுது……எங்கட வாழ்க்கைக்கு எப்பதான் விடிவு வரப்போவது………’ நித்திரைப் பாயில் வழித்துக் கொண்டதும் கிறேசியனின் நினைவில் தோன்றியது இந்தச் சிந்தனைதான். அங்கை இங்கையென்று பூறி கடன்களைப் பட்டுத் தினமும் எப்படியோ சீவனைப் பிடித்துக் கொண்டு நான்னு பிள்ளைகளுடன் அவனும் மனைவி மேரியும் வாழ்நாளைக் கழித்து வருவது இன்றைக்கு நேற்று ஏற்பட்டு விட்ட காரியமல்ல.
கடந்த இரண்டு வருடங்களையும் தாண்டுகிறது.

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு இடம்பெயர்ந்து நாச்சிக்குடாவுக்குச் சென்ற குடும்பம் தொண்ணூற்றேழாம் ஆண்டு குடாக்கடல் நீரேரியால் வள்ளங்களில் வெள்ளைக் கொடிகளைக் கட்டிக்கொண்டு திரும்பியிருந்த குடும்பங்களில் ஒன்றாக இங்கு வந்து சேர்ந்தது.

வந்த ஏத்தரவில் குடாக்கடலில் மீன்பிடிக்கு நல்ல உழைப்புகள் கிடைத்ததால் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக நடந்தது. அப்பொழுது குடாக்கடலில் மீன்பிடிக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் படையினர் விதிக்கவில்லை. சுதந்திரமாக ஆழ்கடல் வரை மீனவர்கள் சென்று மீன்பிடித்துவர முடிந்ததால் அக்காலத்தில் வசந்தகாலம் நிலவியது.

தொண்ணூற்றைந்தில் குடாநாட்டை விடுப்போன விடுதலைப் போராளிகள் இரண்டாயிரமாம் ஆண்டு மீண்டும் கைப்பற்றித் தொடுத்த போரில் மீண்டிருந்த படையினர் குடாக்கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால் குடாநாட்டை வாழ்விடமாகக் கொண்ட மீனவர்களின் வாழ்வில் பேரிடி விழுந்தது. சிறிய இடைவெளியின் பின்பாக மீன்பிடிக்க அனுமதித்த படைநிலை பல கட்டுப்பாடுகளையும் விதித்தது.

காலையில் ஏழு மணிக்கு மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர்கள் பிற்பகல் இரண்டு மணிக்கு முன்பாகத் திரும்பிவிட வேண்டும். கடல் எல்லையும் ஒரு கிலோமீற்றருக்கு உள்ளதாக நியமிக்கப்பட்டது.

இந்த நெருக்கடி நிலை தோன்றிய பின்பாகக் கிறேசியனின் வாழ்க்கை அதள பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.

‘மேரி இப்படி வருமெண்டு ஆர்கண்டது அங்கை இருந்த மாதிரி இருந்திருக்கலாம்…’

‘நீங்க உப்புடிச் சொல்றீங்க அங்கை இருக்கிற சனம் பயத்தில இந்தியாவுக்கும் மன்னாருக்குமாக ஓடுறேண்டு கேள்விப்படேல்லயே….’

‘ஓமோம் வன்னியப் புடிக்கிற போரால அங்கேயும் இருக்கேலாமல் சனங்களெல்லாம் ஓடேக்கத்தான எங்கட கட்டையன் பாட்டி கடலில் போகேக்க கடற்படை சுட்டு அவனும் செத்தவன்….’

கணவனும் மனைவியுமாக வாழ்வாதாரத்துக்கான வியூகம் வகுக்கையில் எங்கை போயும் என்ன மாதிரியும் வாழமுடியாதெண்ட நிலைக்குத்தான் அவர்களால் வரமுடிந்தது.

இரண்டு வருட இடைவெளிக்கு ஒரு பிள்ளையாகப் பெத்துக்கொண்ட அந்தச் சின்னஞ் சிறுசுகளின் பசியைப் போக்க அவனால் ஊருக்கு வசதி படைத்த ஒரு சிலரிடம் மாறிமாறிக் கடன்பட்டுத்தான் வாழ்க்கையை நகர்த்த முடிந்திருந்தது.

‘நல்ல யோக்கியமான ஆள்தான் கைமாத்த வாங்கின காசைத் திரும்பித்தர முடியத நீ ஒரு முளக் கயித்தில தொங்கலாம்….’

பட்டகடன்களைத் திரும்பிக் கேட்டவர்களில் வரம்பு மீறாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ள ஆலோசனை வழங்குபவர்களையும் கிறேசியன் வாழ்நாட்களில் இப்பொழுதே முதன்முதலில் சந்திக்கிறான்.
அந்தந்த நேரங்களில் பிள்ளைகளுடன் வாழ்க்கையை முடித்துவிடலாமா எனவும் மின்னல் சிந்தனைப் பொறி தாக்கியும் இருக்கிறது.

‘இஞ்சேர் எத்தின தரம் தவணை சொல்லிப் போட்டாய் நானும் அலைஞ்சதில் சீப்பறிஞ்சிவிட்டது…… நீங்களெல்லாம் பொஞ்சாதிமாரை விட்டுச் சீவிக்கலாம்…’

கடன் கொடுத்தவர்கள் வரம்பைமீறிக் கதைக்கையில் கையாலாகாதவனாக அவற்றைக் கேட்டுச் சாம்புவதைத் தவிர அவனால் வேறு என்னதான் செய்துவிட முடியும்?

காலை ஏழு மணிக்கு பச்சத்தண்ணியைக் குடித்துக்கொண்டு தொழிலுக்குப் போகப் படையினர் பாதுகாப்பு வேலிக்குள் ஒன்றுகூடும் தொழிலாளர்களுடன் மல்லுக்கட்டி வாய்த்தர்க்கம் செய்து இன்னும் சில நேரங்களில் ஒருவருக்கொருவர் அடிபட்டு படையினரிடமும் தாக்குதலுக்கு உள்ளாகி தொழில் போய் வந்தால் நூறும் நூற்றி ஐம்பதுக்குத்தான் உழைப்பாகக் கிடைக்கிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வரும் பொருட்களின் விலைவாசியில் ஆறு பேர்கள் அடங்கிய குடும்பத்தைச் செவ்வனே நகர்த்துவதென்றால் அங்கை இங்கை கைமாத்து வாங்காமல் நடத்தக்கூடியதாகவா இருக்கிறது?

‘அடேடா….நீங்க நாங்க போட்ட எல்லைக்கு அங்காலதான போறது….?

‘இல்லையையா…..நாங்க அங்கால போகேல்ல….?

‘பொய்தான் சொல்றது….. நா இங்க இருந்து டெலஸ்கோப் போட்டு பாத்தது….நீங்க அங்கால போறது கண்டது….’

படையினர் இவ்விதம் பொய்க்குற்றம் சாட்டி மீன்பிடியில் ஈடுபட அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தைத் தற்காலிகமாக நீக்கிவிட்டபோதே கிறேசியனால் மேலும் நிமிரமுடியாமல் போனது.
‘என்னணை நாங்கதான் பசிகிடப்பம்….புள்ளைகளேயும் பசிபோட முடியுமே….’

மேரியின் துடிப்பைத்தான் பார்க்க இயலுமா? பிள்ளைகள் பசிக்கொடுமையால் அவர்கள் முனங்குவதைத்தான் கேட்கமுடியுமா?

‘இஞ்சேர் மேரி நானேதும் கூலிவேல கிடைச்சாப் போவோம்…. இல்லாட்டிச் சமாளிக்க ஏலாது….’

‘கூலிக்குப் போற நிலைமையும் எங்களுக்கு வந்திட்டுது…. பரந்த கடல் கிடக்கு…. இவ்வளவு காலமும் எங்கட வாழ்வையும்… வளத்தையும் கட்டிக்காத்த கடல்…’

கணவனின் நிலைமையையும் மீனவக் குடும்பங்களின் நிர்க்கதியையும் நினைத்து மேரி பெருமூச்செறிந்தாள்.

விறகு கொத்தல், கட்டடத் தொழில் கூலியாக கிறேசியன் உழைத்து வந்ததால் சிலகாலம் மேடும் பள்ளமுமாக வாழ்க்கை ரதம் தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்தது.

வேலி அடைப்பு, வீடு மேய்தல் ஆகிய தொழிலுக்கு இப்போது கிராக்கி இருப்பதில்லை. வீடுகளைக் கல் வீடுகளாகவும், வேலிகளை மதில் சுவர்களாகவும் மாற்றிக்கொண்ட கலாசார மாற்றத்தில் விறகு கொத்துற வேலை தான் நிச்சயம்.

பாதை பூட்டிய பின்பாக சிமெந்து வரத்தும் தடைப்பட்டதால் கட்டடத் தொழில் கூலியும் அருகிப்போனது. காஸ் சிலிண்டர்கள் எடுத்துவரப்படாததால் விறகு கொத்துற கூலி வேலையாவது கிடைத்துக் கொண்டிருப்பதும் இந்த மண் செய்த புண்ணியந்தான்.

‘மச்சான் கிறேசியன் உன்னட்ட பறிச்ச கடல் பாசைத் தந்திட்டாங்களா…..’

‘ஓம் பிறவி….நேற்றுத்தான் சங்கத்தில் போய் எடுத்தந்தனான்’

ஊரின் மதவடிச் சந்தியில் கிறேசியனைச் சந்தித்தபோதில் ஏணெஸ் இப்படிக் கேட்டு வைத்தான்.

கடல் தொழில் பாஸ் கடற்படையினரால் பறிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து கிறேசியன் கூலி வேலைகளைச் செய்து ஜீவனோபாயத்தை நடத்தி வருவது எல்லாம் ஏணெஸ்சிற்குத் தெரிந்து இருந்தது.

ஏணெஸ் சோதனைச் சாவடியில் படையினரின் கூட்டோடு கடல் எல்லைக்கு அப்பால் சென்று கடல் அட்டை குழித்து வருவதால் நல்ல உழைப்பைப் பெற்று வசதியாக இருப்பதையும் கிறேசியன் அறிந்திருந்தான்.

ஏணெஸ்தான் என்றில்லாமல் இன்னமும் சிலர் படையினரின் கூட்டுடன் கடல் அட்டை பிடித்து வருவதால் நல்ல வருவாயை ஈட்டிக் கொண்டும் இருந்தனர்.

மீனவர்கள் பிடித்து வருகின்ற கடல் அட்டை விற்பனையில் பாதிப்பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் வௌ;வேறு பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினரின் பார்வையில் சிக்கிக் கொள்ளாத இடங்களில் கடல் அட்டைகளைக் குழித்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பிவிடவும் வேண்டும்.

இந்த நிபந்தனைகள் உடனே படையினர் அனுமதி வழங்கி வருவதையும் கிறேசியன் அறிந்துதான் இருந்தான். ‘கிறேசியன் நீயும் எங்களோட அட்டை குழிக்க வாவன்….’ அப்பதான் உன்னுடைய கஸ்டங்களும் தீரும்….’

ஏணெஸ் கேட்டதும் கிறேசியனுக்குத் தன்னையும் அந்தத் தொழிலில் இணைத்துக்கொள்ள மாட்டார்களா என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவனுக்கு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த மகிழ்ச்சி தோன்றி இன்பச் சாகரத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

‘என்ன யோசிக்கிறாய்…..நானுன்ர கஸ்டத்தைப் பார்த்துத்தான் கேட்டனான்…..எங்களோடவர கியூவில் நிக்கிறாங்க….பிடிக்கேல்ல எண்டா விடு..’

‘அப்படியில்லப் புறவி….. அப்புடியில்ல எனக்கென்னவோ அதிஸ்டம் கிடைத்த திகைப்புத்தான் வேறொன்றுமில்ல…நான் வாறன்…எனக்கிந்தத் தொழில் கிடைச்சுக் கிடக்கே….’

இந்தச் சந்திப்பின் பின்பாக வீட்டிற்குப் போனவன் மனைவிக்குத் தெரிவித்து மகிழ்ச்சியில் கிளைத்தே போனான்.

விடிந்ததும் கிறேசியனின் மனதில் தமது வாழ்வில் விடிவெள்ளி முளைத்துவிட்டதான பிரவாகத்தில் சுறுசுறுப்பாகத் தொழிலுக்குத் தேவையான செயற்கை நீச்சல் பாதங்களையும் எடுத்துக்கொண்டான்.

பிள்ளைகளை வாஞ்சையுடன் ஒவ்வொருவராக அழைத்து அவர்களைத் தடவிக் கொடுத்து மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டே சென்றிருந்தான்.

மேரியும் அவனைத் தொழிலுக்கு அனுப்பிவிட்டுப் பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பவும் கருமங்களில் தீவிரமானாள். மேரிக்கு இன்று மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை. ஆனந்தத்தில் அவளின் மனது கூத்தாடியது. இதுவரை நாள்பட்டு வந்த கஸ்டங்களெல்லாம் தீர்ந்து மதியம் கணவன் கைநிறையக் காசுடன் திரும்புவதை நினைத்துக் குதூகலித்து இருந்தாள்.

மதியம் பதினொரு மணியளவில் ஊருக்குள் கதையொன்று பரவியது. குடாக்கடல் எல்லைக்கு அப்பால் போனவர்கள் மீது வேறொரு சோதனைச் சாவடியில் காவல் கடமையில் இருந்த படையினர் சுட்டத்தில் கடல்குழியோடி கொல்லப்பட்டிருப்பதான செய்தி பரவிக் கொண்டிருந்தது.

மேரியின் காதுகளில் செய்தி வீழ்ந்ததும் ‘புனித யாகப்பரே…..படையாளியே… அவருக்கு ஏதுமில்லாமல் காத்தருளும்… கர்த்தாவே’ மனதில் வேண்டிக்கொண்டாள்.

பிந்திவந்த செய்தில் கிறேசியனே சூடுபட்டுச் செத்துப் போனான் என்றதும் சடலம் கரைக்குக் கொண்டுவந்துள்ள சங்கப் பணிமனை நோக்கி ஓட்டமாக ஓடினாள் மேரி.

‘என்ர ராசா எங்களைக் காப்பாத்த நீ பட்ட பாட்டை நானறிவேன்…ஐயோ….இனி நாலு குஞ்சுகளேம் எப்புடி அப்பா காப்பாத்தப் போறேன்…ஐயோ….என்ர ராசா…..’

விடியற்காலையில் தொழிலுக்காக வீட்டை விட்டுப் போயிருந்த கிறேசியனின் உயிரற்ற உடல்மீது மேரி வீழ்ந்து பிலாக்கணம் வைத்ததைக் கண்களில் நீரோட ஊரே பார்த்து நின்றது.

மேரி எழுப்பிய பெருங்குரல் அந்தக் கடற்கரைக்கு அப்பாலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

(கதையில் வருகின்ற மாந்தர் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே)

*

*

Top