கழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம்

– சி.ரமேஷ்

பூர்வீக காலம் தொட்டு கடல் நீரால் தங்கள் நிலங்களை இழந்த மக்கள் கடந்துவந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட போரால் தங்கள் இடங்களை இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். அவர்கள் வாழும் இன்றைய குறுகிய நிலப்பரப்புக்குள்ளும் அவர்களை இருக்கவிடாமல் துரத்தி  நாட்டை விட்டு வெளியேற்ற துடிக்கும் தூரநோக்கம் கொண்ட சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பு வடிவங்களில் கழிவு எண்ணை விடயமும் ஒன்றாகும்.

கடந்த அரசின் ஆசீர்வாதத்தோடு ஒரு புறம் போதை பொருளுக்கு அடிமையாக்கி சிந்திக்க தக்க இளைஞர் சமூகத்தை சீரழிக்கும் சிங்கள திட்டமிடலால் யாழ் இளைஞர் சமூகம் பாரிய பாதிப்புக்களை சந்தித்து இருக்கும் நிலையில் மறுபுறம் ராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களின் பூர்வீக நிலம் சூறையாடபட்டுக்கொண்டு இருக்கின்றது.

இன்னொரு புறம் இனத்தின் தனித்துவத்தை உடைக்க இனப்பரம்பல் செய்து எமது உடமைகளை இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறது. எமது பிரதேசங்களுக்கு சிங்கள மொழியில் பெயர் சூட்டல் 1480 களில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கின்றது.

இவற்றை எல்லாம் விட மேலாக எமது தாய்குலத்துக்கு கருத்தடை செய்து அவர்கள் சந்ததி வளர்ப்பை நேரடியாக கட்டும்படுத்தும் சூழ்ச்சி நடக்கின்றது. இவை எல்லாம் சிங்கள அரசின் நீண்டகால திட்டமிடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும் இவற்றுக்கு சில தமிழ் கட்சிசார் நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதும் காலத்தின் பதிவில் பதிவு செய்யபடுகின்றது.

இம்முறை இயற்கையின் கொடையான மழை எமது பிரதேசங்களில் நீர் நிலைகளை நிறைத்து இருந்தாலும் , அந்த மழை நீரை சேமித்து தேக்கி வைத்து எமது தேவைகளுக்கு பயன்படுத்தும் தயார்நிலையில் எமது தேசத்தின் நீர் நிலைகள் குளங்கள் தயார்படுத்தபட்டு இருக்கவில்லை. அந்த கால மன்னர்கள் செய்த குளம் கட்டுதல், அணைகட்டுதல் போன்ற திருப்பணிகளுக்கு பின்னர் எமது முன்னோர்கள் ஓரளவு திருத்த வேலைகளை செய்து பாதுகாத்து வந்தார்கள். இன்று அவற்றை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ் மாவட்டத்தை பாதுகாக்க வன்னியில் இருந்து தண்ணீரை கொண்டுவரும் திட்டத்தை அவர்கள் தொடங்கினார்கள். சமகாலத்தின் அவர்கள் அரசியல் வீழ்சியால் அவர்கள் பிரித்தானியர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வெளி ஏறியதால் அந்த பணி இடை நடுவில் விடப்பட்டது.

இன்று அதே தண்ணீரை கொண்டுவருவதற்கு நாம் புலத்துக்கு அழைத்துவந்து பொன்னாடை போர்க்கும் ஒருவர் தடையாக உள்ளார். அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் அவர்கள் அரசியல் நலன் சார்ந்ததாக இருக்கின்றதே தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. இதுவும் காலத்தின் பதிவில் கடந்து போகும்.

இன்று இந்த கழிவு எண்ணை விடயம் மிகவும் பாரதூரமான விளைவை குடா நாட்டில் ஏற்படுத்த போகின்றது. இதையும் அரசியலாக பார்த்து தேர்தல்களின் போது மட்டும் கூக்குரல் இடும் விடயமாக பார்க்காமல் மக்கள் நலன்சார்ந்து தீர்க்க படவேண்டிய பாரிய பிரச்சனையாக பார்க்க வேண்டும். எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய நாம் செய்யவேண்டிய தலையாய கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.

*

*

Top