“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை

– கருணாகரன்

“ஆயுத எழுத்து“ என்ற புதினம் கடந்த 09.01.2015 காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வெளியீட்டு நிகழ்வை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் நூலாசிரியரான சாத்திரிக்கு எதிரானவர்கள் சிலரும் முயற்சித்தனர். இதற்காக அவர்கள் பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவோருக்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. நிகழ்வுக்கும் நூலுக்கும் படைப்பாளிக்கும் எதிரான பரப்புரைகள் செய்யப்பட்டன. எல்லாவற்றையும் மீறி நிகழ்வு நடந்தால் அதைக் குழப்புவது என்றும் திட்டமிட்டிருந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்குச் சம்மதித்திருந்த திரைப்பட இயக்குர் வீ.சேகரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அருள்மொழி என்பவரும் திடீரென மறுத்துத் தாங்கள் நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தனர்.

அருள்மொழி தன்னுடைய நிலைப்பாட்டையும் நியாயத்தையும் சாத்திரிக்கு எழுதியிருந்தார். ஏனையவர்கள் பின்வாங்கவில்லை. அதற்கான அவசியமும் இருக்கவில்லை. ஒரு கருத்தை அல்லது ஒரு படைப்பை எதிர்கொள்வது அவசியம் என்பது மிகச் சாதாரணமான ஒரு நடைமுறை. அதைத் தடுப்பதும் எதிர்ப்பதும் ஏற்கக் கூடியதல்ல. மறுப்பும் விமர்சனமும் மாற்றுக் கருத்துகளும் இருந்தால் அதை ஜனநாயக நடைமுறைகளின் மூலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்யலாம்.

அதற்கான வாய்ப்புகளும் தாராளமாக உண்டு. அதுதான் கருத்துச் சுதந்திரத்துக்கு அளிக்கின்ற இடமுமாகும். ஆகவே ஏனையவர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சி நடந்தது. என்றாலும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக அதிகமானவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. பத்திரிகையாளர்களும் பிற ஊடகத்துறையினரும் அதிகமாகக் கூடியிருந்தனர். கூடவே, இந்த அச்சுறுத்தல்களை அறிந்த தமிழகக் காவல்துறையினர் அதிகளவில் வந்து வெளியே காவல் நின்றனர். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு இந்த மாதிரியான ஒரு நிலைமை தேவைதானா என்று யோசித்தேன்.

ஜனநாயகம் பற்றியும் கருத்துரிமை பற்றியும் விடுதலை பற்றியும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்ற சமூகத்தில் ஒரு புத்தக வெளியீட்டை நடத்த முடியாத நிலை, ஒரு புத்தகத்தை எதிர்கொள்ள முடியாத நிலை இருப்பதென்பது தமிழ்ச்சமூகத்தின் அறிவியற் பண்பாட்டு நிலைமையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பெருமாள் முருகனின் “மாதொரு பாகன்“ நாவலுக்கு வந்த எதிர்ப்புகளும் இப்படியான ஒன்றுதான். தமக்கு உவப்பில்லாத அல்லது தமக்கு எதிர்நிலையில் உள்ளவற்றை நிராகரிக்கின்ற – மறுக்கின்ற – இல்லாமலாக்குகின்ற இந்தப்போக்கு ஒரு வியாதியே.

இது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு அதிகார நிலைப்பட்ட செயற்பாடே. புனிதங்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை யாரும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ முடியாது. சகிக்க முடியாதென்பதற்காக அழிக்க நினைப்பதும் அழிக்க முயற்சிப்பதும் ஒடுக்குமுறையன்றி வேறென்ன? எத்தகைய நியாயங்களைக் கூறினாலும் இது ஒடுக்குமுறைதான். எந்த ஒடுக்குமுறையையும் எதிர்ப்பவர்கள் இந்த ஒடுக்குமுறையைக் கண்டும் காணாதிருப்பது வேடிக்கையானது. சாத்திரியின் ஆயுத எழுத்து நூல் தொடர்பாக எனக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

உடன்பட முடியாத விடயங்கள் உள்ளன. புலிகள் இயக்கத்தின் பார்வையில் ஆயுத எழுத்தை எழுதியிருக்கிறார் சாத்திரி என அந்த வெளியீட்டு நிகழ்வில் சாத்திரியை உடனிருத்திக்கொண்டே கூறினேன். புலிகள் இயக்கத்தின் பார்வையில் இருந்து எழுதியபடியால் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தம்பா, ரெலோ ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடம் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் இந்தப் புதினம் சந்திக்கும் என்றும் சொன்னேன்.

ஆனால், சாத்திரியின் எழுத்தில் விமர்சனத்துககும் உடன்படமுடியாமைக்குமான விடயங்கள் இருந்தாலும் அதைச் சொல்வதற்கு இடமளித்த சாத்திரி முக்கியமானவராகப்படுகிறார். இதுதான் முக்கியமானது. எந்தக் கருத்தையும் கூறுவதற்கு இடமளிக்கும் பண்பு அவசியம். அதை ஏற்கவில்லை என்றால், அது ஒடுக்குமுறை, பாஸிஸம் என்று ஏதோ எல்லாமாக ஆகிவிடும். ஆயுத எழுத்து வெளியீட்டில் நான் கலந்து கொண்டது கூட எதையும் நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ஆராய்வோம். எல்லாவற்றுக்கும் இடமளிப்போம். மாவோவின் கூற்றுமாதிரி நூறு புக்கள் மலர இடமளிப்போம் என்ற அடிப்படையில்தான்.

*

*

Top