இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும்

– அ.றொக்ஸன்

தமிழர் கலைகள் எல்லாம் ஆன்மீகத்துடனும் சமயச்சடங்குகளுடனும் இணைந்தும் பிணைந்தும் மரபுவழியாகப் பேணப்பட்டு சந்ததி சந்ததியாகக் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. இறைநம்பிக்கை சமய நம்பிக்கை என்ற இறுக்கமான பிணைப்புடன் எம்கலைகள் கட்டியெழுப்பப்பட்டதனால் அவை அழிவடையலாம் என்று எண்ணி அஞ்சவேண்டியதில்லை. என்று இந்நம்பிக்கைகளிற்கு பங்கம் வருகின்றதோ அன்று கலைகளும் தம் உயர் பண்பை இழந்து அழிவை நோக்கிய திசையில் பயணிக்கும்.

ஆன்மீக நாட்டம், தெய்வீக சிந்தனை என்ற வகையில் கலைகள் மக்களை அவ்வழி ஒருங்கிணைக்கும் பாலம் எனலாம். பரதக் கலையும் இவ்வகையில் தெய்வீகக்கலை எனும் உயர்செவ்வியல்கலையே எனில் அது மிகையாகாது. நற்சிந்தனையுடனும் தெய்வீக நாட்டமுடனும் அழகியல் உணர்வுடனும் ஆடல் ஆற்றுகையை அளிக்கும்போது அது அனைவரும் இரசித்து இலயித்து ,ன்பம் பெறக்  கூடியதாகவே அமையும்.

கலைகளை பிரபல்யப்படுத்தி வளர்க்க வேண்டுமெனில், மக்கள் மத்தியில் அதன் மதிப்பினை மேப்படுத்த வேண்டுமெனில் நல்ல கலைஞர்களை குறிப்பாக வளர்ந்துவரும் இளங்கலை ஞர்களை இனங்கண்டு வாய்ப்புகள் வழங்கி, உற்சாகமளித்து, ஊக்குவித்தல் வேண்டும். அப்போதுதான் எமது பாராம்பரியக்கலைகள் அடுத்த சந்ததியினர்க்கு முறையாகக் கையளிக்கப்பெற்று அவர்தம் கலை ஆர்வத்தை அதிகரித்து அத்துறையில் நாட்டம் கொள்ள வழிகோலும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நடனப்பிரிவின் முன்னாள் தலைவரும், ‘நாட்டிய கலாகேந்திரம்’ நாட்டியநிறுவனத்தின் இயக்குனருமான கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா தெரிவித்தார்.

krishanthi-ravinthera-_-nanilam

நானிலம் இணையத்துக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருடன் ஏற்படுத்திய செவ்வியின் முழுமையான வடிவம் பின்வருமாறு:

இன்றைய கணினிமய யுகத்தில் நாட்டியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது?
இன்றைய நவீன வசதிகள் – அதாவது மடிக்கணனிப் பயன்பாடு, வீடுகள்தோறும் TV வசதிகள், இணையப் பயன்பாடு, முகநூல்பக்க செயல்பாடு, ஒளி ஒலி நவீன கருவி வசதிகள்;, இவையனைத்தும் இணைந்த Mobile Phone பயன்பாடு என்பன நாட்டியக்கலை வளர்ச்சியில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தவல்லன. அன்று நாம் பரதக்கலை பயின்ற காலத்தில் கிடைத்த வசதி வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இன்று பரதக்கலை பயில்பவர்களுக்குள்ள வசதி வாய்ப்புகள் மிகவும் முன்னேற்றகரமானது.

எனவே இன்று (நவீனகாலம்) கலை ஆர்வம் கொண்ட மாணாக்கர்கள் பரதக்கலையினை விரும்பிக் கற்பதற்கான சூழ்நிலையும் வசதிகளும் வாய்ப்புகளும் ஏராளம் எனலாம். எனினும் கணனிமயம் எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முரணான பல்வேறு திசைகளில் மாணவர்களின் மனத்தை திசைதிருப்பக்கூடிய பாதக சூழ்நிலைகளயும் கொண்டுள்ளது. இன்றைய இயந்திரமயப்பட்ட துரித வாழ்க்கைமுறை மக்கள் மத்தியில் நிம்மதியற்ற, போட்டிச்சூழல் நிறைந்த, மனஅழுத்தம் கூடிய, ஓய்வுநேரமற்ற ஒரு பாதக சூழலை ஏற்படுத்தியுள்ளது. நிம்மதி, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தல், மனஆறுதல் என்பவற்றை நாடி மக்கள் அங்கலாய்த்தல் உணரப்படுகின்றது. ,தற்கான அருமருந்து கலை இரசனையும் ஆன்மீக சிந்தனையும் ஆகும். ,ங்குதான் நாட்டியம் குறிப்பாக பரத நாட்டியம் முக்கியத்துவம் பெறுகின்றது.

தகவல் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சிக்கேற்ப அதன் பயன்பாடுகளை நாட்டியக்கலை சார்ந்த வல்லுனர்களும் தங்கள் தேவைகளையும் தகவல் வெளிப்பாடுகளையும் விளம்பரப்படுத்தும் உத்திகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள். அதன் பயனாக உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட நாட்டிய நிகழ்வுகளை இணைய வசதிகள் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வீட்டில் இருந்தவாறே நவீன கலைநுட்பங்களையும், ஆக்கத்திறன்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மக்கள் தொடர்பாடல்கள் இலகுபடுத்தப்பட்டமையினால் உலகளாவிய ரீதியில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று பரந்துபட்ட மக்களிடையே நாட்டியக்கலை சென்றடைகிறது.

நடனக்கலைகள் தொடர்பான இறுவட்டுக்கள் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளன. ஒளி-ஒலி வசதிகள் மூலம் பரதக்கலையின் அழகியல் வெளிப்பாடுகளையும், பரதநிகழ்வு வெளிப்படுத்த விளையும் கருத்துக்களையும் மெருகூட்டி வழங்க கூடியதாகவுள்ளது. நிறையப் பாடல்களையும், அதற்குரிய நடன ஆக்கங்களையும் இணையத்தினூடாக (YOUTUBE) பார்த்து அறிந்து கொள்ள கூடியதாகவுள்ளது. பழைய கலைஞர்களின் கலைப் பங்களிப்பு, அவர்களின் கலைப்பயணம் பற்றிய தகவல்கள், அவர்களின் ஆக்கங்கள் பெருமைகள் பற்றியெல்லாம் இணையத்தளங்களினூடாக அறியக் கூடியதாகவுள்ளது.

இவ்வகையில் பரதக்கலையின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளமையினால் அக்கலை நிகழ்வுகளுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது. நுட்பமான நடன அமைப்புமுறைகள், கற்பனைவளம் நிறைந்த ஆக்கங்கள், ஒப்பனை அலங்கார நுட்பங்கள் மற்றும் இன்னோரன்ன வசதிகள் மக்கள் மத்தியில் பரதக்கலையின்பால் ஆர்வத்தினைத் தூண்டியுள்ளது.

dr_krishanthi_with_Student_nanilam

தற்போது நடனக்கலைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்ன?
ஒரு காலத்தில் தேவரடியார் சந்ததி வழியாகவும், குரு – சிஷ்ய – பரம்பரை கல்வி வழியாகவும் பயின்றாடப்பட்ட ஆடற்கலை தற்காலத்தில் உயர்கல்வி, ஆய்வுகள் என பல்கலைக்கழக மட்டம் வரை நவீன கற்கைசெயற்பாடுகளாக மாற்றமடைந்துள்ளது. இங்கு பல சாதகமான அம்சங்கள் காணப்படினும் எம்மூதாதையர் கட்டிக்காத்த இறைத்துவம் பிணைந்த தனித்துவம் தொடர்ந்தும் பேணப்படுமா என்ற அங்கலாய்ப்பு ஒரு சவாலாகவே உள்ளது.

இணையத்தினை மாணாக்கர்கள் அதிகமாக பயண்படுத்துவதினால் இணையத்திலுள்ள நடன ஆற்றுகைகளை அப்படியே பிரதி செய்கின்ற (Copy) செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. முறையான பக்குவமான தொடர் பயிற்சிகள் என்பது நிகழ்த்து கலைகளுக்கு இன்றியமையாதது. இப்பயிற்சிகளை முறைப்படி பெறாது, அதன் தனித்துவப் பெருமைகள் பற்றி அறியாது, ஆடல் புரியவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் கொண்டு, பரதம் நிகழ்த்துதல் பரதக்கலையின் புனிதத்தன்மையை பாதிக்கும் மிகப் பெரிய சவாலாகவே கருதவேண்டியுள்ளது.

ஆடற்கலையில் தகமை உள்ள, ஆர்வம் மிக்க, சிறந்த நடனக்கலைஞர்கள் சிறந்த பல ஆற்றுகைகளை வழங்கக்கூடியவர்களாயிருந்தும் ஒரு நிகழ்ச்சியை நடாத்த முடியாமைக்குப் பொருளாதாரக் காரணிகளும் ஒரு சவாலாகவே உள்ளது. சமூக பொருளாதார அரசியல் காரணிகளின் செல்வாக்கும் சில வேளைகளில் பரதக் கலையை அதன் தனித்துவத்துடன் பேணுவதற்குத் தடையாக உள்ளது. பரதக்கலையின் தனித்துவத்தையும் அதன் புனித இலட்சியத்தையும் உணராத சில கலைஞர்களின் செயற்பாடுகளும் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும்.

krishanthi-ravinthera1_-nanilamபணம் சம்பாதித்தல் என்ற நோக்கில் மட்டும் செயற்படுதல் அல்லது பட்டம் பதவிகளுக்காக கலையை அடகுவைத்தல் என்ற செயற்பாடுகளில் எவர் ஒருவர் செயற்பட்டாலும் அச்செயல் கண்டிக்கப்படல் வேண்டும். இச்செயற் பாட்டினை உயர் பதவியிலுள்ள கலைஞர்கள் செயப்புகின் அதுவே வருங்கால இளம்கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும் ஆபத்து உள்ளது. சமயம் தத்துவம் ஆத்மீகம் அழகியல் உலகியல் விஞ்ஞானம் யோகம் என்றனைத்தும் ,ணைந்த ஒரு தெய்வீகக்கலையை சிலரின் அற்ப பெருமைகளுக்கும் தனிப்பட்ட நலன்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்கக் கூடாது.

எமது பரதக்கலையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த எமது ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது நாட்டு இலக்கியங்கள் சமய பண்பாட்டு கலாசார வரலாறுகள் இதிகாசங்கள் வழிபாட்டுமுறைகள் என்பவற்றை நாட்டிய வடிவமாக்கி வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்களுக்கு (உல்லாசப்பயணிகளுக்கு) கலைப்படைப்பு செய்வதன் மூலம் எமது தனித்துவத்தை உலகறியச் செய்ய முடியும்.

பண்பட்ட கலைப் படைப்புக்களும், நற்பண்பு வாய்ந்த கலைஞர்களும், பக்குவமான கலா இரசிகர்களும் வாய்க்கப்பெறின் ஒரு நாடு உயர் விழுமியங்களினூடு எழுச்சி பெறும். புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் அடுத்த சந்ததியினர்க்குப் பரதக்கலையை பயிற்றுவித்து மிக உயர் நிலையில் போற்றுகிறார்கள். அப் பிள்ளைகளும் மிக ஆர்வத்துடன் பரதக்கலையை பயின்று சிறந்த தரம் வாய்ந்த நடன ஆற்றுகைகளை அளிக்கை செய்கிறார்கள். அப்படியானால் ஏன் நாம் இங்கு அப்படியான ஆர்வத்தை எம் வருங்கால சந்ததியினர்க்கு ஊட்டமுடியாது. நிச்சயம் முடியும். அது எம்மவர்களின் கைகளில்தான் உள்ளது.

ஒருவரின் நடனம் எப்பொழுது முழுமை பெறுகிறது?
கலையில் முழுமை என்று வரையறை கிடையாது. ஆர்வத்துடன் ஈடுபட ஈடுபட அனுபவமும் கற்பனை வளமும் பெருகும். கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்றவாறு கலை அனுபவிக்க அனுபவிக்க முழுமையை நோக்கிப் பயணிக்கும். நடனக்கலையை விரும்பிக் கற்பவர் முதலில் அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். விடாமுயற்சியுடனும் மனதை ஒருமுகப்படுத்தியும் நடனத்தை சிரத்தையுடன் கற்கும் போது குருவும் குறித்த நபரின் மீது பற்றுக் கொண்டு தனது நாட்டிய நுணுக்கங்களையெல்லாம் விருப்புடன் சொல்லிக் கொடுப்பார். ,தனால் நடனம் பயில்பவர் படிப்படியாக நாட்டியத்தில் ஒன்றித்து அதனூடு அனுபவ ஞானத்தை பெறுவார். நர்த்தகி ஒருவர் தன்னை மறந்து தான் அபிநயிக்கும் பாத்திரத்தில் ஒன்றித்து பார்வையாளர்களையும் அந்நிலைக்கு உட்படுத்த வல்ல தன்மையைப் பெற்றால் அந் நர்த்தகி கலைப் பக்குவம் பெற்ற உயர் தகமையைப் பெறுகிறாள் எனலாம்.

நடனக்கலையில் உயர என்ன வழி ?
நடனக்கலையிலுள்ள முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற வேண்டும். கலையை மதித்துச் செயல்பட வேண்டும். கடின உழைப்பு வேண்டும். அத்துடன் கலையில் நேர்மையாக இருத்தல் வேண்டும். போட்டி இருக்கலாம் அது நடனத்தை உயர்தரத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். ஆனால் பிற கலைஞர்கள் மீது பொறாமை கூடாது. அது கலைஞன் என்ற உயர் தகமையை தாழ்வுறச் செய்யும். நற் குருவானவர் கலைஞர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும். நல்ல தரமான நிகழ்வுகளை மனந்திறந்து பாராட்ட வேண்டும். அது குருவையும் கலைஞனையும் உயர்வடையச் செய்யும்.

பரதம் வேறு என்ன பலன்களைக் கொடுக்கிறது ?
சகல உடலுறுப்புகளுக்கும் பயற்சியைக் கொடுக்கின்றது. உள்ளத் தூய்மையையும் மன நிம்மதியையும் கொடுக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி யோகநிலைக்கு ஈடான தியானப்பயிற்சியை வழங்குகின்றது. ஆன்மீக நாட்டம் கொள்ள வைக்கின்றது. உடலழகு உள்ளத்தழகு ஆத்மதிருப்தி என்பவற்றைக் கொடுக்கிறது. நாட்டியத்தில் ஒன்றித்து உலக பந்தம் நீங்கி கற்பனா உலகில் இறை அனுபவங்களில் ஆழ்ந்து அரங்கிலிருப்பவர்களையும் அந்நிலையை அனுபவிக்க வழி செய்கிறது. ஞானிகள் புலனடக்கி ஆற்றும் அருந்தவத்திற்கொப்பான ஆத்மீக பலத்தை கொடுக்கிறது. அகத்தில் அனுபவித்த இறையனுபவம் முகத்தில் தெய்வீகக் களையாக வெளிப்படும். நல்ல நல்ல கருத்துக்களையும் செய்திகளையும் பார்வையாளர்களிடம் நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும்.

நம் கலாச்சாரத்தில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் நடனக்கலையை தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம் ?
மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இளம் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ள நிரந்தரமற்ற போலி நாட்டங்களிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும். எமது பாராம்பரிய நடனத்தின் பெருமையை உணர்த்த வேண்டும்.

தனிப்பட்ட கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் இக்கைங்கரியத்தில் செயல்பட வேண்டும். நாட்டியக்கலை ஒருபோதும் அழிவடையாது. ஏனெனில் அது ஓர் உடல் அசைவுவழி வெளிப்படுத்தப்படும்; மொழி. உணர்வுகளை உணர்த்தும் ஊடகம். சமயம் சார்ந்து ஆன்மீக வெளிப்பாடு நிறைந்த கலையாதலால் அவை அழிவுறலாம் என்று அஞ்சத் தேவையில்லை. எல்லாத்தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ஒத்திசைவு அடையச் செய்யும் கைங்கரியத்தை ,க்கலைகளினால் தான் சாதிக்க முடியும். இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைவனுக்கு அர்ப்பணமாக ஆடல் ஆற்றுகை செய்வதே எமது பண்பாடு. இதனால்தான் சைவர்கள் இறைவனையே ஆடல் வல்லானாக நடராஐப் பெருமானாக போற்றி வழிபடுகிறார்கள்.

பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஆரோக்கியமான நடனத்தை வழங்குவதில் ஏதேனும் சிரமங்கள் உண்டா ?
இறை நம்பிக்கை, ஆடற்கலை மீதான அளவு கடந்த ஈடுபாடு, ஆடல் ஆற்றுகை அனுபவ ஞானம் என்பவற்றுடன் செய்யப்படும் நடனஉருப்படியில் தனைமறந்து நர்த்தனம் புரிந்தால் பார்வையாளர்களைக் கவர்வதில் சிரமங்கள் கிடையாது. இறை வணக்கம், குரு வணக்கம், அரங்க பூஜை, சபையோர் வணக்கம் என்பனவெல்லாம் நர்த்தகி தன்னைத் திடப்படுத்தி சகல தடைகளையும் களைவதற்கான உளவியல் செயற்பாடுகளேயாம். எந்தவொரு நடன நிகழ்வையும் ஆரோக்கியமானதாகவும், பார்வையாளர்களை கவரும் விதத்திலும் வழங்குதல் வேண்டும். நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எந்தத்தடையையும் தகர்த்தெறி;ந்து சாதிக்க முடியும்.

நாட்டியம் கற்கும் ஆண்களுக்கு பெண்களின் பாவனை தொற்றிக் கொள்வதாகக் கூறுகிறார்களே அது உண்மையா?
இது தவறான கருத்தாகும். நடனத்தினைக் கற்றுக் கொள்ளும் ஆண்களுக்குப் பெண்களைப் போன்ற இயல்புகள் தொற்றிக் கொள்ளும் என்ற சொல்ல முடியாது. சில ஆண்கள் அப்படிப் பழக வேண்டும் என விரும்பிச் செயல்பட்டாலே தவிர நடனம் பயில்வதால் பெண்தன்மை தொற்றிக் கொள்ளாது.

நடனத்தினைக் கற்றுக் கொள்ளும் ஒருசில ஆண்கள் அர்ப்பணிப்புடன் விரும்பி கற்றுக் கொள்வார்கள். அவ்வாண்கள் நடன பாவத்தினை அடிக்கடி பயிற்சியை மேற்கொள்வார்கள். இதனாலும் அவர்களைப் பார்க்கும் நடனக்கலைஞர் அல்லாதவர்கள் இப்படியாகத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். இதே போன்று நடனக் கலையில் அதிகமாகப் பெண்கள்தான் கற்றுக் கொள்வார்கள். அவர்களுடன் இவ்ஆண்கள் அதிக நேரம் பழகுவதினாலும் நடனப் பயிற்சிகளில் ஈடுபடுவதனாலும் பெண் பாவனை அவர்களிடத்தே உள்ளது போன்ற ஒரு மயக்க நிலை தோன்றலாம். பெண்களும் நாயக பாவங்களை அபிநயிக்கிறார்கள். அதனால் அவர்களிடம் ஆண்தன்மை தொற்றிக் கொள்வது இல்லையே.

பாத்திரத்திற்கேற்றவாறு உணர்ந்து அனுபவித்து பாத்திரமாகவே மாறுதல்தான் நாட்டிய நிகழ்வின் வெற்றிக்கு வழிகோலும்.

*

*

Top