தனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல

விமர்சனங்கள் சொல்லப்படும் போதோ அல்லது எழுதப்படும் போதோ ஒருவரை அல்லது ஒரு சமூகத்தினரை ஊக்குவிக்கின்ற நோக்கத்திலேயே அவை எழுதப்பட வேண்டுமே தவிர, எவரையும் தாக்கி மனம் நோக வைப்பதை நோக்கமாகக் கொண்டு விமர்சனங்கள் எழுதப்படுவது சர்வதேச ரீதியாக முறையற்ற விடயமாகவே கருதப்படுகிறது என யாழ்.ராமநாதன் நுண்கலைப்பிரிவின் இசைத்துறைத் தலைவா் கலாநிதி. ஸ்ரீ.தா்ஷனன் தெரிவித்தாா்.

”சுவடுகள்” தொடா்கள் தொடா்பான விமா்சனங்களைப் பற்றி கேட்டபொழுதே அவா் இவ்வாறு தெரிவித்தாா்.  இவ்விடயம் தொடா்பாக  அவா் மேலும் தெரிவிக்கையில்,

விமர்சனங்கள் சொல்வதும்,   விமர்சனங்களை எழுதுவதும்  சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவையாகும். விமர்சிக்கின்ற திறன்களை மாணவர்களிடையே வளர்க்க வேண்டுமென்று புதிய கல்விக் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. தனது மனதுக்குச் சரியென்று தோன்றுவதை வெளிப்படையாகத், துணிச்சலுடன் வெளிப்படுத்துகின்ற திறனை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதன் மூலம், மாணவர்களைச் சிறந்த சமூகப் பிரஜைகளாக ஆக்கித் தர முடியும் என்பது மிகவும் ஆரோக்கியமான கருத்தாகும்.

சில ஊடங்கள்  விமர்சனங்களை எழுதுகின்ற போது, அவை தமது சமுதாயப் பொறுப்பினைப் பற்றிச் சிந்திப்பதை விடத், தமது பத்திரிகைகளின் அதிகமான வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டு அவை செயற்படுவதனால், சிலரைத் தாக்கி விமர்சனங்களை எழுதுவதை அவ் ஊடகங்கள் வரவேற்பதும், அதற்குப் பதிலடியாக அதனால் மனம் நொந்தவர்கள் எழுதுபவற்றை மீண்டும் வரவேற்பதுமாக விமர்சனப் பாரம்பரியமானது தவறாக எமது மக்களுக்குச் சமீப காலமாக இனங்காட்டப்பட்டு வருகின்றமையானது, விமர்சனம் என்றால் இதுதான் என்கின்ற ஒரு தவறான உருவமைப்பைப் புதிதாக விமர்சனம் எழுத முற்படுகின்றவர்களுக்கு காண்பிக்கின்றது. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு விமர்சிப்பவர்கள், பிறரைத் தாக்கி அதன் மூலம் இன்பம் காணுகின்ற முறையைத், தமது உள்ளத்தினுள்ளே தேங்கிக் கிடக்கின்ற ஏக்கங்களுக்கு மருந்தாகவும், வடிகாலாகவும் பயன்படுத்துகின்ற நிலைமை உருவாகி வருகிறது.

இந்நிலைமையைத் தவிா்த்து எமது கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அவ்வாறான எமது விழுமியங்களைப் பாதுகாக்கக் கூடிய ஊடகங்கள், அவற்றைப் பயன்படுத்துபவர்களை மன மகிழ்ச்சி அடையச் செய்வதற்காகச் செயற்பட வேண்டுமேயன்றி, எவரையும் துன்புறுத்தி இன்பம் காண்பதற்காகச் செயற்படுவது நியாயமல்ல.

இவ்வுலகில். எந்த ஒரு படைப்பும். பிறரை இன்பமடையச் செய்வதற்காகத்தான் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும், உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியுமாகிய கலாநிதி அப்துல் கலாம்  கூறியது நிச்சயமாக உலகிலுள்ள அனைவராலும் கடைப்பிடிக்கப் பட வேண்டிய ஒழுக்கமாகும்.

ஆகவே ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதையே விமர்சகர்கள் தாரக மந்திரமாகக் கொண்டு, ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் போது தாமும் அதனைச் சிந்திப்பதாலும் எழுதுவதாலும் இன்பம டைந்து அதனைப் படிக்கும் அனைவருக்கும் இன்பத்தைக் கொடுப்பது; என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் இன்றிச் செயற்படுகின்ற புதியதோர் உலகம் படைப்போம்.

One Comment;

  1. Dr.S.Darshanan said:

    விமர்சனத்தைப்பற்றி நான் எழுதிய விமர்சனமாகிய இவ்விடயத்தை, எனது முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதற்கு சில வாழ்த்துகளுடன் ஒரு தரமான விமர்சனமும் வந்திருந்தது. எனது சிந்தனையைத் தூண்டி உதவிய அவருக்கு நன்றி கூறிக்கொண்டு, அதற்குரிய பதிலை இங்கே பிரசுரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    S.s. Kekirawa விமர்சனம் என்பது குறை,நிறைகளை ஆராய்வதுதானே? பலர் நல்லவிடயகளை சொல்வதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அது புகழாகிவிடும்,விமர்சனங்களை முன்வைக்கக் கையாழுகின்ற முறை பணிவானதாக புண்படுதாத விதத்தில் அமையவேண்டும்.

    Drs Darshanan: நிறை குறைகளை எழுதுவது தான் விமர்சனம் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், விமர்சனம் எழுதுபவரின் நோக்கமானது, ஒருவரையோ அல்லது ஒரு சமுதாயத்தையோ முன்னேற்றுவதாக உள்ளது என்பது அவரது விமர்சனத்தின் மூலம் நேர்மறைக் கருத்தாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே, இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. மனிதனது எந்த ஒரு ஆக்கமும், முடிந்த முடிபானவை அல்ல. ஒருவரது ஆக்கம் பலருக்குத் தவறானதாகப் புலப்படும். அதைப்பற்றி இன்னொருவர் எழுதும் விமர்சனமும் இன்னும் பலருக்குத் தவறானதாகத் தோன்றும். ஆகவே, தாம் எழுதுவதே முடிந்த முடிபு என்னும் மமதையானது, விமர்சனத்தில் தொனிக்கக்கூடாது.

Leave a Reply to Dr.S.Darshanan Cancel reply

*

*

Top