நாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா?

– கிரிஷாந்

”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

தனிப்பட்ட பயணமாக ஏழாலை வடக்கு மற்றும் மல்லாகத்திலும் உள்ள கழிவொயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடவும் மக்களை சந்தித்து உரையாடவும், எனது இரண்டு நண்பர்களுடன் பயணித்தேன். ஒரு நண்பனின் நண்பனை மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது. அவருடைய கிணற்றை பார்த்து விட்டு அவருடன் உரையாடினோம் .தனது மோட்டர் சைக்கிளையும், ஒரு சைக்கிளையும் எங்களுடைய பயணத்தை தொடர்வதற்காக தந்தார். அவர் சொன்னவற்றிலிருந்து இப்போதைக்கு உங்களிடம் ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்”. யோசிச்சுப் பார் மச்சான், 3 நாளைக்கு இருநூற்றி ஐம்பது ரூவா செலவாகுது நாங்கள் தண்ணி வேண்டிக் குடிக்க, சின்னக்குழந்தைப் பிள்ளைய குளிக்க வார்க்கிறதுக்கு ஒரு அண்ணை மினரல் வோட்டர் தான் பாவிக்கிறார்”.

அடுத்ததாக ஏழாலை வடக்கிற்கு சென்றோம். இலக்கமிடப்பட்டு அங்கங்கே சில நீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டிருந்தன, அருகே சிவப்பு நிற வர்ணத்தால் ”நீரை வீணாக்காதீர்” என்று எழுதப் பட்டிருந்தது. ஒரு கடையில் சென்று வோட்டர் போட்டல் ஒன்று தாங்கோ என்றவாறு உரையாடலைத் தொடங்கினோம் , தண்ணீர் தாங்கிகளில் ஒழுங்காக வருகின்றதா?, குளிப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?, மினரல் வோட்டர் சனம் வாங்குதா என்று கேட்டுக் கொண்டிருந்த போது அம்பும் வில்லும் சகிதமாக ஒரு வேடுவர் கூட்டம் கடைக்கு வந்தது, ஆதி என்ற நண்பன் அவர்களுடன் உரையாடத் தொடங்கினான்.

elalai vadaku jaffna water crisis nanilam (3)

”என்ன தம்பிமார் நாடகமோ ?’

‘ஓம் அண்ணை ‘

‘என்ன நாடகம் ?’

 ‘கண்ணப்ப நாயனார் கதை. நாங்கள் வேடுவரா நடிக்கிறம். ‘

மற்ற நண்பனான யதார்த்தன் அம்புகளை பரிசோதிக்க ஆரம்பித்தான் கடை அக்காவுடன் உரையாடி விட்டு வந்தோம். ‘டேய் ஓடிப் போய் அந்த பெடியள பிடிசுக் கதை எண்டான் ஆதி’ நான் புறப்படுவதற்கு முன் ஏற்கனவே கொஞ்ச தூரம் அவர்கள் சென்று விட்டார்கள். ஒரு பள்ளிக்கூடத்தடியில இருந்த தாங்கியில் நீர் குடித்தனர். ஒருவன் துப்பி விட்டு, இது குளோரின் தண்ணியடா என்று குடிக்காமல் வந்தான். ஒருவன் மட்டுமே அவர்களில் நீரை குடிதான், நான் கேட்டேன் ‘ஏன் தம்பி அப்ப மினரல் வோட்டர் குடிப்பியளோ அதுவும் கைச்சல் தானே?’, ‘இல்லை அண்ணை அது நல்லா இருக்கும்’ என்று சொல்லி விட்டு மகா சிவாரத்திரியான அன்று, வேடுவர் குலமாக, இயற்கையை தெய்வமாக வணங்கிய ஒரு காலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் காணவில்லை. திரும்பி வந்தால் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பின் பக்கத்து வீடொன்றில் நுழைந்து கிணற்றை பார்த்தோம். தொட்டியில் தண்ணீரை நிறைத்திருந்தார்கள். எண்ணை கைகளில் மிதந்தது. அந்த நீரில்தான் குளிப்பதாகவும் சமைப்பதாகவும் அந்த வீட்டின் அம்மா சொன்னார்.

‘மிருகங்களுக்கு இந்த நீரைத் தான் தம்பி கொடுக்கிறோம்’ அது என்ன மாதிரி, நல்லமோ கூடாதோ.

 ‘என்னம்மா இஉங்களுக்கு நல்ல தண்ணி இஆடு மாடுகளுக்கு எண்ணைத் தண்ணியோ ?’

‘ என்ன தம்பி செய்யிறது இசமைக்கிறதுக்கே தண்ணியில்லை ‘ என்னிடம் பதில்களிருக்கவில்லை.

‘ அம்மா. போராட்டங்கள் எல்லாம் நடக்குது போற நீங்களே ?’

‘ எங்கட வீட்ட ஒயில் வாரத்துக்கு முன்னமே, எண்ட பெடியன் போனவன்.  இப்ப இப்பிடியாப் போச்சு ‘

‘ சரியம்மா, எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வரும், நாங்கள் திருப்பியும் வருவம் என்று சொல்லி விட்டு வந்தேன். அவர்களிருவரும், இளைஞர்களிடமே பேசிக் கொண்டிருந்தனர்,  இதால போங்க அண்ணை இந்த ரோட்டு முளுக்கலும் எண்ணைதான் என்றார் ஒருவர்.

இந்த உலகத்தின் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் ! வீடுகளும் அப்படித் தான், ஒரு கதவைத் திறக்க. மேலும் மேலும் கதவுகளை அது திறந்து கொண்டே செல்கிறது.

இப்பொழுது ஒரு பாதி இடிந்த கதவற்ற வீடு. ஒரு வயதான ஜோடி, பேரன் பேத்தியோடு நின்றார்கள். கதைத்தோம். ‘மருமகனுக்கு சமைசுக் குடுத்தன் தம்பி. அண்டைக்கு வயித்தால அடியாம், எனக்கும் வையுதுக்க குத்துது’ அவர் கதைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த தாத்தா, கிணற்றிலிருந்து நீரை தொட்டிக்குள் விடுவதற்காக குழாயை பொருத்தினார், குபு குபுவென்று நீர் பாய்ந்தது. தொட்டியை நிரப்பத் தொடங்கியது. அவருடைய பேர்த்தி ஓடிப் போய் நீரைக் குடித்தாள், தடுக்கப் பாய்ந்தோம்.

elalai vadaku jaffna water crisis nanilam (1)

‘ என்னம்மா இது ‘

‘என்ன செய்ய தம்பி, அதுகள் சொல் வழி கேட்காதுகள், தாய் வெளிநாட்டில, ஏதும் நடந்தாலும் நாங்க தானே பொறுப்பு.’

‘தங்கச்சி கவனம், இந்தத் தண்ணி குடிக்க கூடாது. குடிச்சா கடி வரும்’ என்று சொன்னோம்.

‘உங்கால இப்பிடியே போங்க சில வீடுகள் இருக்கு ‘ என்று சொன்னார்கள். சென்றோம்.

பட்டம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக் குரல், திரும்பினோம். ‘எங்க தம்பி போறியள்?’

அவர்களுடனும் கதைத்தோம். அவர்களுடைய வீட்டில் மூன்று பேருக்கு உடலில் புண் மற்றும் அலேர்ஜிக் தன்மையான கொப்புளங்கள் வந்திருந்தன. ஆஸ்பத்திரியில் மருந்து தந்ததாகவும் குணமாகவில்லை என்றும் சொன்னார்கள். தனக்கும் உடம்பில் கடியிருப்பதாக ஒரு அம்மா சொன்னார்.

‘தம்பி இந்த பாட்டிய கேளுங்கோ, சொன்னாலும் கேட்காம கிணத்து தண்ணியத்தான் குடிக்கிறா ?’

‘ என்னமா, வருத்தம் வருமல்லோ என்றேன் ?’

‘என்ன வருத்தம், என்ர கிணத்து தண்ணியக் குடிச்ச ஒண்டும் வராது’ என்று சொன்னார். கிணற்றை பார்த்தோம்,  எண்ணைப் படிவு சாதாரணமாகவே தெரிந்தது. ‘ என்ன தம்பி ஒயில் நிக்குதே ?’ என்றாள் கிழவி.

‘ஓம்’ என்று சொல்லிய பின் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

அங்கு நின்ற சிறுவர்கள் வேறு இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

சில வீடுகளுக்கு சென்று உரையாடினோம். எல்லோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இதன் பயங்கரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. பின் அவ்வளவு தூரம் வழிகாட்டிகளாக வந்த சிறுவர் படையை வீடுகளில் சேர்ப்பித்தோம்.  ஆங்கிலத்தில் அவ்வப்போது பேசியதற்காக ஏகமனதாக எல்லோருமே திட்டினார்கள். இனிமேல் ஆங்கிலம் கதைத்தால் பத்து முட்டையை உன்னுடைய வாய்க்குள் அடைவேன் என்ற மிரட்டலுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை சொன்னவள் எனது முழங்கால் அளவு நின்ற சிறுமி.

elalai vadaku jaffna water crisis nanilam (2)

ஆதியின் தூரத்து சொந்தக்காரர்களையும் தற்செயலாக சந்தித்தோம். இநோய் வந்திருப்பவர்களில் சிலர் அவனுடைய உறவினர்கள். எல்லா மக்களையும் உறவாக நேசித்தல்லவா இந்த பயணத்தை தொடங்கினோம். பிறகு அவனுக்கு மட்டும் உறவினர் என்று பிரித்து எழுதி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள், எல்லோரும் சொந்தங்கள் தான். மனிதர்கள்தான். மறுபடியும் அந்த கிழவி குடும்பத்தை கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் எங்களை அழைத்தார்கள். அந்த வீட்டில் மின்சாரம் இல்லை. ஆனாலும் அடுப்பில் வைத்து குளோரின் தண்ணீரில் போட்ட டீயை அந்த கிழவி வரவைத்துத் தந்தாள். குடித்து விட்டு நேரமாகிறது என்று அவசரப்படுத்தி வெளிக்கிட்டோம். ”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” என்று அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்த அந்தக் கிழவியை பிரிந்தோம். ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது போல் ஒரு பிரமை தோன்றவே, அது கிணறுகளின் மீதான மனுஷி ஒருத்தி யின் காதலை எண்ணியபடி நடந்தேன் நான்.

elalai vadaku jaffna water crisis nanilam (4)

பின், யாழ்ப்பாணம் திரும்பி வர புறப்பட்டோம். மாலை கரைந்து விட்டது. இருட்டத் தொடங்கியது. நீங்கள் போங்கள் என்று அவர்களை மோட்டார் சைக்கிளில் அனுப்பி விட்டு சைக்கிளில் வெளிக்கிட்டேன். வரும் போது எப்படி வந்தோம் என்று தெரியவில்லை. அப்படி இப்படியாக வந்து விட்டோம். அப்போது அவ்வளவாக இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமும் தெரியவில்லை. அதன் பயங்கரங்களின் ஆழம் தெரியவில்லை. ஆனால் இப்போது திரும்பியபோது தான் தெரிந்தது எவ்வளவு தூரம் வந்து விட்டிருந்தோம் என்பது.

*

*

Top