நஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம்

– தேவி பரமலிங்கம்

இந்திய தமிழக, ஈழ மண் முஸ்லிம்களின் தாய் மொழி தமிழென நிறுவப்பட்டுள்ளது. எனினும் ஆண் பூர்வீக வழி அரபுமொழி ஐம்பது சதவீதத்தைக் கொண்டுள்ளதால், அம்மொழியும் கற்க வேண்டிய கடைப்பாடும் தொடர்கிறது.

முஸ்லிம்கள் வர்த்தக வாழ்வியலைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதால் நாடுகள், நகரங்கள் பரந்து பல மொழி பேசும் மக்கள் பிரதேசங்களிலும் வாழ்கின்ற நிலைமையில் அம்மொழிகள் பேசி, கற்றல் கொள்ளவும் நேர்ந்துள்ளன.

அதனால் தூய தமிழ் மொழியை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க இயலாமலும் போகின்றது. ஆயினும் முஸ்லிம்கள் காலத்துக்குக் காலம் தமிழ் மொழியில் ஆக்கி வழங்கியுள்ள படைப்புக்களை மறந்தோ, மறைத்துவிடவோ முடியாது.

அவ்வகையில் யாழ் மண்ணைச் சேர்ந்த இளங்கீரன் சுபையீர் என்னும் எழுத்தாளர் 1960களில் பத்திரிகையில் நீண்ட நெடும் தொடர் கதைகளை எழுதிப் புகழ்க்கொடி நாட்டியுள்ளதை இன்று பலருக்கும் தெரியாது.

நாட்டின் நாலா புறமும் நோக்கினால் நயீமா ஏ.பஷீர் பின்பாக நயீமா சித்தீக் புகழ் பெற்றவர்களில் குறிப்பிடக்கூடியவர். ‘அசன்பே சரித்திரம்’ தமிழ் நாவல்களில் முதல் முதலாக படைக்கப்பட்ட நாவலாகவும் பேசப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் முஸ்லிம் ஆண்களை விடவும், முஸ்லிம் பெண்கள் தமிழ்க் கவிதை, புனைகதைத் துறைகளில் சாதித்துள்ளனர். யாழ் ஐந்து சந்தி பிளவ்ஸ் பவுண்டேசன் உரிமையாளர் சமூக சேவையாளர், ஊடகவியலாளருமான எம்.எல்.லாபீர், திருமதி நஸ்ரியா அஜித்தின் ‘சிதறல்களில் சிறு துளிகள்’ நூலை மதிப்பீட்டுக்காக கையளித்தார்.

என்னுடைய விமர்சனப் பார்வை பலருக்கும் பிடிப்பதில்லை. உள்ளதை உள்ளபடி கூறுவதும் அல்லாமல் வழிப்படுத்தும் முறைமையையும் விமர்சனம் முன்வைக்க வேண்டும். சம்பிரதாய நோக்கோ, பூசி மெழுகுவதோ ஒரு நல்ல படைப்பை இனம் காண உதவாது. அதனூடாக நல்ல படைப்பாளிகளை உருவாக்கப் போவதுமில்லை.

விமர்சனம் பலரால் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படலாம். ஆயினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்க. ஒவ்வொருவருவர் மூலமே விமர்சனம் பெறப்படுகின்றது. அதன் கூட்டுப் பெறுமானமே நல்ல படைப்பொன்றை சீர் தூக்கவும் உதவுகின்றது.

விமர்சனம் காய்தல் உவத்தல் இன்றியே வைக்கப்பட வேண்டிய ஒன்று. நஸ்ரியா அஜித்தின் சிதறல்களில் சிறு துளிகள் நூலைக் கையில் எடுத்ததும் என்ன வகைப் படைப்பு என்பதை இனம் தேர்வதில் சிறிதே மினக்கெட வேண்டியதாயிற்று. சிறு கதைகளா, தொடர்கதையா என்பதை நூலை வெளியிட்டவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

இதற்கு முன்பாக ‘கண்ணீர் பூக்கள்’ என்னும் நூலும் நூலாசிரியரால் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் என்ன நூலென்று தெரிவித்திருக்கவில்லை.

இந்நூல் உரைநடையையும் இடையிடையே புதுக் கவிதையையும் கொண்டதாக அமைந்துள்ள போதும் உரைநடையே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளது. நாவலிலோ, சிறுகதையிலோ கவிதை வரிகள் வரக் கூடாதென எவரும் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் தேவையில்லை.

இவ்வகைப் படைப்புகள் ஏலவே வெளிவந்தும் உள்ளன. அதனை ஒரு கதை சொல்லும் பாணியாக பிரயோகிப்பதால் தவறேதுமில்லை என்றும் கூறலாம்.

ஆயினும் படைப்பாளிக்கோ வெளியீட்டாளருக்கோ இந்நூல் எவ்வகைப் படைப்பென்பதை வாசகனுக்கு தெரிவிக்க வேண்டிய கடைப்பாடு ஒன்றுண்டு. இல்லையேல் அதுவே திரிபுபடுத்தப்பட்டுவிடும். இல்லாமலும் நூலாசிரியருக்கும், வெளியீட்டாளருக்கும் அந்தத் தெளிவு போதவில்லை, என்னும் பலவீனத்தைப் பட்டவர்த்தனமாக்கிவிடும்.

இக்காலங்களில் ஏதோ எழுதுகிறார்கள். பண வசதி இருப்பதால் புகழ் பெற நூலை வெளியிடுகிறார்கள் என்றாகி உள்ளது. நூல்களை ஆக்கவும், வெளியிடவும் பாண்டித்தியம் இருக்க வேண்டும்.

நஸ்ரியா அஜித் ஒரு ஆசிரியையாகப் பணிபுரிவதால் பாண்டித்தியம் வெளிப்படுகிறது. எனினும் படைப்பிலக்கியத் துறையில் பரிச்சயம் குறைவென்பதையும் துலாம்பரமாக நூல் வெளிக்காட்டுகின்றது.

யாழில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரந்து வாழ்கின்றனர். அக்குடும்பங்களில் மாதிரிக்கொரு குடும்பம் ரஜாப்தீன், பஸ்லியா புத்தளம் நகரம் இடமளித்த வாழும் களத்தில் பல கஷ்டங்கள் மத்தியில் பெற்றெடுத்த இரு பிள்ளைகளையும் கல்விப் புலத்தில் வளர்த்தெடுக்கிறார்கள்.

அவர்களில் நிஃமத் பொறியியலாளர் முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்பாக சீரழிக்கப்பட்டுள்ள யாழ் முஸ்லிம் வட்டாரத்தைத் திரும்பவும் கட்டியெழுப்பப் பாடுபடுகிறான். அவனுடன் இம்மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட பைசூர் ரஹ்மான், பவாஸ் (I.P.S.) ஆகிய இருவரும் சேர்ந்து முஸ்லிம் வட்டாரத்தை திரும்பவும் முன்னெடுப்பதாகக் கதை நிறைகிறது.

கதைக் கூற்றின்படி 2015 கடைசியில் இருந்து 2016ஆம் வருடக் காலத்துள் அவ்விலட்சியம் நிறைவேற்றப்படுவதாக ஆசிரியை நஸ்ரியா அஜித் குறிப்பிட்டுள்ளார்.

‘சிதறல்களில் சில துளிகள்’ நூல் படைப்பைக் குறுநாவல் என வரைபு படுத்தலாம். இக்குறுநாவலானது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன. நூலின் 54ஆம் பக்கத்துடன் முதல் பாகம் நிறைவடைய 56ஆம் பக்கத்திலிருந்து 91ஆம் பக்கம் வரை இரண்டாம் பாகம் வளர்ந்து நிறைவடைகிறது.

முதல் பாக நாயக, நாயகியாய் ரஜாப்தீன், பஸ்லியா – இரண்டாம் பாகம் அவர்களது மகன் நிஃமத் மனைவி (பெயர் தரப்படவில்லை) இவர்களுடன் பைசூர் ரஹ்மான், பவாஸ் (I.P.S.) ஆகிய பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

முதல் பாகத்தில் ரஜாப்தீன், பஸ்லியாவின் திருமண இரவு பஸ்லியாவின் தங்கைமார் மைத்துனரைக் கேலி பண்ண முனைதல் ரஜாப்த் மனைவிக்குத் தங்கைமார்களில் ஒருவளை அழகானவள் எனச் சீண்டுவது போன்ற நிகழ்வுகளை சேர்த்ததால் சிருங்காரச் சுவையையும் சிறிதே சேர்த்துள்ளமை போதாமலே போய்விட்டது.

குறுநாவலின் 2ஆம் பக்கத்தில் பஸ்லியாவுக்குத் திருமணப் பேச்சை உம்மா ஆரம்பித்ததும் ‘தொடங்கி விட்டீங்களா பஞ்சபுராணத்தை..’ என்னும் சொற்றொடரில் பஞ்ச புராணத்தை ‘எனக் குறிப்பிடுவது பொருந்தாத ஒன்று. ‘பஞ்ச புராணம்’ என்பது இந்துக்களின் ஐந்து புராணங்களைக் குறிக்கும் வெறுமனே ‘புராணத்தை’ என்று குறிப்பிடலாம்.

மேலும் 03ஆம் பக்கத்தில் ‘உங்க ஐந்து பேரையும் ஒருத்தனிடம் புடிச்சுக் குடுக்கணும்..’ வார்த்தைத் தொடர் ‘ஒருத்தனிடம்’ என்றில்லாமல் ‘ஒவ்வொருவனிடம்’ என்றே அமைந்திருக்க வேண்டும். இத்தகைய குறைபாடுகளை அச்சகத்தால் ஒப்பு நோக்கருடன் கலந்து திருத்தப்பட்டிருக்கலாம்.

ஆசிரியர் நஸ்ரியா அஜித் போதனாசிரியராகப் பணிபுரிவதால் தமிழ் ஆளுமை கவிதைகளில் மிளிர்கின்றன. நாவலின் உரைநடையில் கைகூடவில்லை. அதற்கவர் நிறையப் புனை கதைகளை வாசித்தல் இல்லாமையைக் காட்டுகிறது.

56ஆம் பக்கத்துக்கு மேலே வளர்ந்துள்ள நாவலில் ஆசிரியையின் இலட்சிய நோக்கத்தைத் தரிசிக்க முடிகிறது. 91ஆம் பக்கம் வரை வளர்ந்த பகுதிகளை எழுதி முடிப்பதற்கு நஸ்ரியா மிகக் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். தரவுகளைப் பெறவும், சேகரிக்கவும் மினக்கெட்ட பாடுகள் விளங்குகின்றன.

‘சிதறல்களில் சில துளிகள்’ குறுநாவல் புதிய முயற்சியாகவும், இலட்சியப் படைப்பாகவும் அதேவேளை முஸ்லிம் சார்ந்த அல்லது யாழ் முஸ்லிம் வட்டாரம் பற்றிய ஆவணங்களை உள்ளடக்கிய ஆவணப்படுத்தல் நூலாகவும் உயர்வு பெற்றுள்ளது. அவசரப்படாமல் ஆசிரியை பொறுமையோடு நாவலைப் படைத்திருப்பின் மிகத் தரமான நாவலொன்றை படைத்திருக்க முடியும்.

இரண்டாம் பதிப்புக்கு ஆயத்தம் செய்கையில் நாவலைச் செப்பனிட்டு, மெருகேற்றி அதிசிறந்த நூல்கள் வரிசையில் இடம்பெறச் செய்யலாம். திருமதி நஸ்ரியா அஜித் இத்தகு நோக்கை உடைய இன்னும் பல படைப்புகளை ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குத் தர வேண்டும் எனக் கேட்டு வாழ்த்தலாம்.

*

*

Top