கிளிநொச்சிக்கு மத்தியவங்கி நகர்வும் வடபகுதி அபிவிருத்தியும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

மத்திய வங்கியின் கிளிநொச்சி காரியாலயம் கடந்த 06ம் திகதி மே மாதம் அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டதுடன் மத்தியவங்கி கிளிநொச்சி நோக்கி நகர்ந்து மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. வடபகுதியின் மையத்தை நோக்கி நகர்ந்து வடபகுதி அபிவிருத்தியினை மேலும் அபிவிருத்தி செய்ய திடசங்கற்பம் கொண்டிருக்கின்றது. வங்கிகளையெல்லாம் இணைக்கும் பாலமாக இருக்கும் மத்திய வங்கியின் இந்த நகர்வு நிச்சயமாக பலரும் எதிர்பார்த்திருக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எண்ணலாம்.

மத்திய வங்கியின் வடபகுதிக்கான முகாமையாளர் திரு குறிஞ்சிதரன் அவர்களினதும் வங்கியின் ஏனைய பணியாளர்களின் அர்ப்பணிப்பும் முழுமையாக கிடைக்கும் காலம் நெருங்கியிருக்கின்றது. மத்திய வங்கியின் சேவை வடபுலத்து அபிவிருத்தியில் மிகவும் முக்கியமானதாகும். போர் நடைபெற்று முடிந்தபின்னர் வடபகுதியின் அபிவிருத்தியை குறிக்கோளாக வைத்து மத்தியவங்கியின் கிளை முன்னதாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிதியினை மக்கள் பல்வேறு வங்கிகளினூடாக பெறுவதற்கான வாய்ப்புக்களை மத்தியவங்கியின் வடபகுதிக்கான வருகை மேம்படுத்தியிருந்தது. இதனை யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் அரிய வாய்ப்பாக பெற்று தங்கள் தொழிற்றுறைவிருத்தியில் கால்பதிக்க காரணமானதாக இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எந்த தொழிற்றுறையானாலும் நிதியினை வினைத்திறனான முறையில் கையாளுதல் மிகவும் முக்கியமானதாகும். நிதியினை சிறந்த முறையில் கையாளுதல் பற்றிய விழிப்புணர்வு எமது மக்களுக்கு இன்னும் கிடைக்க வழிசெய்தல் வேண்டும். நிதியினை பெறுவதும் அதனை பயன்படுத்தி தொழிற்றுறை சிறந்து அதன் மூலம் பெறுகின்ற ஆதாயம் கடனாகப் பெற்ற நிதியை மீளசெலுத்த போதுமானதாக இருத்தல் வேண்டும். நிதி முகாமைத்துவம் பற்றி பல கருத்தரங்குகள், செயலமர்வுகள் மத்திய வங்கியினாலும் அதனுடனிணைந்த அரச மற்றும் தனியார் வங்கிகளினாலும் மக்களுக்கு நடாத்தப்பட்டும் கூட இன்னும் இது பற்றிய அறிவு மக்களிடையே முழுமையாக சென்றடையாத தன்மையை அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது.

இவ்வாறான அறிவூட்டல் நிகழ்வுகளை மத்திய வங்கி ஒழுங்கமைத்து மற்றைய வங்கிகளின் அனுசரணையுடன் வன்னிப் பகுதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்தியவங்கியின் கிளிநொச்சி காரியாலயம் அறிவியல் நகரில் திறக்கப்பட்டமை குறிப்பாக வன்னி பகுதியின் அபிவிருத்திக்கான திறவுகோலாகவும் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான அச்சாணியாகவும் கொள்ளலாம். வடமாகாணத்தின் உள்ளூர்உற்பத்திவருமானம் மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்ததாக 3-5சதவீதத்தினுள்ளே முடக்கப் பட்டிருக்கின்றது.

முடக்கப்பட்டிருக்கின்றது என்பதை விட முடங்கியிருக்கின்றது எனலாம். இதற்கு காரணம் வடமாகாணத்தின் உற்பத்தி வெளியூர்களில் அதிகளவில் சந்தைப்படுத்தப்படாதது எனலாம். வடமாகாணம் வெளியிடங்களிலிருந்து வருகின்ற தினமும் தினிசு தினிசாக வருகின்றவை நுகர்வோரை இலகுவில் கவரும் பொருட்களாகவும் அவற்றை கொள்வனவு செய்வதிலும் நுகர்வதிலும் நாம் குறியாக இருக்கின்றோமே தவிர எமது பொருட்களை அந்த தரத்திற்கு உயர்த்தி உற்பத்தி செய்ய முனையவில்லை. இதுவரைகாலமும் இருந்த நெருக்கடி ஒரு காரணமாக இருந்தாலும் இனிவரும் விஞ்ஞான உலகில் சமகால தேவைகளுக்கு நாமும் முகங்கொடுத்து முன்வரமுயற்சிக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பொருளாதார வல்லுனர் பேராசிரியர் ஓமர் ஜாவிட் குறிப்பிட்டுக்கூறியது மிகவும் பொருத்தமானதாகும். ஒரு தொழில்முயற்சியில் ஈடுபடும் ஒருவர் அதிகளவு முதலீட்டை தன்னக்கத்தே ஆரம்பத்தில் வைத்திருக்க தேவையில்லையென்றும், அதிபுத்திசாலியாக இருக்கவேண்டியதில்லை என்றும், இன்னும் பாரிய வர்த்தக திட்டத்தை தயாரிக்க தேவையில்லையென்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சிறிதளவில் தொழில்முயற்சியில் ஈடுபடும்போது அவருக்கிருக்கின்ற ஈடுபாடு மற்றும் அவர் அதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற அனுபவம் என்பன அந்த தொழிலை விருத்திசெய்ய உதவும். அனுபவமின்றி குறிப்பிட்ட தொழிலை பாரியளவில் தொடங்குவது நல்லதல்ல. சிறியளவில் ஆரம்பித்து அதனை சிறிது சிறிதாக விருத்திசெய்ய முனையும் போது அவருக்கு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு தேவைப்படும். உருவாக்குகின்ற பொருட்கள் தரமானதாக சிறந்ததாக வர்த்தக சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக இருக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

அந்த வகையில் உற்பத்தியாக்கப்படும் பொருட்கள் தரமானதாக மற்றும் அதனை சுற்றியிருக்கும் கவர்ச்சியான உறை, அவற்றை விற்பனைக்கு வைக்கும்பாங்கு அனைத்தும் இங்கே கவனிக்கப்பட வேண்டும். ஆக மொத்தத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட சின்னத்தை அல்லது அடையாளத்தை கொண்டிருத்தல் அவசியமாகின்றது. அடையாளத்தின் அவசியம் தொழிலை விருத்திசெய்யும் போது இன்னொருவர் கலப்படஞ்செய்யாது பாதுகாத்தலிலும் குறிப்பிட்ட உற்பத்தியை நுகர்வோரும் விற்பனையாளரும் இனங்கண்டு கொள்ளவும் உதவும். சிறந்த தொழில்வல்லுனர்கள் எந்தவகையிலும் எவ்விடர்வரினும் தமது உற்பத்திப்பொருளின் தரத்தை குறைத்ததில்லை. அதனை ஒரளவினதாக சிறந்ததாக வைத்திருந்ததாலேயே குறிப்பிட்ட தொழிலில் சிறந்து விளங்க முடிந்திருக்கின்றது. நுகர்வோரை கவர்வதில் தரமும், விலைகுறைவும், இன்னும் பொதிசெய்யப்பட்ட விதமும் உள்ளடங்கும்.

இதற்கு நல்ல உதாரணங்களுண்டு. தமிழ்நாட்டில் கொடிகட்டிப்பறக்கும் குறிப்பிட்ட சின்னங்களாக ராம்ராஐ; பருத்தி வேஷடிகள், அருண் ஐஸ்கிரீம் மற்றும் அர்ச்சயா பால், பூர்விகா கைத்தொலைபேசி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த தொழிற்சாலைகள் பாரியளவில் விருத்தியடைந்து தற்போது கொடிகட்டிப்பறப்பதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறே உண்டு. ஒவ்வொரு பண்டத்திற்கும் அதனை ஒரு சிறந்த குறியீட்டுப் பொருளாக  (Branded Product) ஆக்கியதற்குள்ளான பின்னணியை தொழில்முனைவோர் அனைவரும் அறிந்து வைத்திருத்தல் நல்லது. தமிழ்நாட்டின் விஐய் ரீவியில் உள்ளடக்கப்பட்ட ‘உன்னால் முடியும்’ என்னும் குறிப்பிட்ட நிகழ்ச்சி சிறந்த தொழில்முயற்சியாளர்களை போட்டிகண்டு ஒளிபரப்பியது. இந்நிகழ்ச்சி தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை இணையத்தளத்தில் யூ-ரியூப்பிலிருந்து (vijay tv unnal mudiyum free download ) என்னும் சொற்களை கூகிள் இணையதேடுதளத்தில் தட்டச்சு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து காணமுடியும்.

தொழில்முயற்சியிலீடுபட விரும்புமொருவர் எடுத்தமாத்திரத்தில் பாரிய தொழிற்றுறையை ஆரம்பித்து விடமுடியாது. சிறிதளவில் ஆரம்பித்து அந்த தொழிற்றுறையில் சிறிது சிறிதாக பெறுகின்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு அதனை மேலும் விருத்திசெய்வதற்கான வழிகளை கண்டுபிடித்து ஒப்பேற்றலாம். இங்கே அனுபவம் என்பது எந்தவிதமான தொழில்முயற்சியினதும் அடிநாதமாக இருப்பதனை காணலாம். குறிப்பிட்ட தொழில்முயற்சியொன்றில் ஆர்வமின்றி அதிலுள்ள நுணுக்கங்களை அனுபவத்தினூடாக அளந்தறியாது அந்த தொழிலை மேம்படுத்துவதென்பது சாத்தியமற்றதொன்று.

விவசாயஞ்சார்ந்த பொருட்களை உற்பத்திசெய்து சந்தையில் போட்டிபோட்டு விற்பனையாவதற்கான தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அவற்றை தரநிர்ணயஞ்செய்து விற்பனைக்கு விடுவது நல்லது. உணவுப்பொருட்களாயின் தரநிர்ணயம் செய்யப்படுவதற்கு உணவுப்பொருளை ஆய்வுசெய்யும் ஆய்வுகூடத்தின் உதவியை பெற்று அதனை தரநிர்ணயஞ்செய்யலாம். இந்த வழிமுறை புதிதாக உருவாக்கப்படும் பொருட்களுக்கு அவசியம் தேவை. தொழில்துறை விருத்தியென்பது இதனூடாக பயணிக்கவேண்டியதே. சுத்தமானதாக தரநிர்ணயஞ்செய்யப்பட்ட பொருட்களின் கேள்வி என்றுமே அதிகமாகவும் மற்றைய பொருட்களுடன் போட்டிபோட்டு விற்கப்படும் தகுதியையும் அடைந்துவிடும்.

இந்த விடயத்தில் தரநிர்ணயஞ் செய்வதற்கான ஆய்வுகூடவசதி அவசியம் வடமாகாணத்தில் இருக்கவேண்டும். அத்துடன் விவசாய பொருட்களுக்கு சேதன உற்பத்தியென்ற சான்றிதழும் அவசியம் தேவைப்படும். சேதனமுறைமூலமான உற்பத்தி என்பதனை ஆய்வுகூடங்களில் பரிசோதித்து அதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியமாகும். போர்முடிந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்ற செயன்முறைகளில் ஈடுபட்ட காலம் போய் இப்போது தொழில்துறையில் ஊன்றி கால்பதிக்கும் காலத்தில் இருக்கின்றோம். இந்நிலையில் சூழலுக்கிணைவான தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உணரப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைபவர்களுக்கு தேவையான சூழலுக்கிணைவான தொழில்நுட்பத்தினை உருவாக்குவதற்கான இடங்களாக விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் அறிவியல் நகரில் அமைந்திருக்கின்றன.

இன்னும் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினதும் தொழில்நுட்ப கல்லூரியினதும் வகிபாகம் இங்கே முழுமையாக உணரப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல், ஆய்வு செய்தல் என்பதற்கு மேலதிகமாக தொழில் முனைவோருக்கான எளிய இலகு தொழில்நுட்பத்தினை உருவாக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள பீடங்கள் முன்வருதல் வேண்டும். இதில் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களின் பங்களிப்பு அளப்பரியது. அதனுடன் அறிவியல் நகரிலேயே முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி உருவாக இருக்கின்ற தொழில்நுட்ப பீடத்தினதும் முழுமையாக பங்களிப்பு தொழில்நுட்ப உருவாக்கத்தில் இன்றியமையாததாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து பீடங்களையும் இணைத்து உருவாக்கப்படுகின்ற பீடங்களுக்கு இடையிலான ஆய்வு மூலமாக தொழிற்றுறைக்கு அவசியமானதும் தேவையானதுமான தொழில்நுட்பங்களின் உருவாக்கம் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விவசாய பீடத்தினதும் பொறியியல் பீடத்தினதும் இணைப்பில் சூரியசக்தியில் தன்னியக்கத்தில் முட்டை பொரிக்கும் இயந்திரம் ஒன்று விவசாய பொறியியல் துறை சிறப்பு பிரிவு மாணவனினது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தியை இங்கே பதிவுசெய்வதில் எழுதும் கைகள் மகிழ்கின்றன. இந்த இயந்திரத்தினது உருவாக்கம் இனி பலவினாக்களுக்கு விடைதரக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கலாம். பீடத்தின் ஆரம்பத்தில் பலரும் எதிர்பார்த்த விடயங்களுக்கான அத்திவாரம் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து அறிவியல் நகரில் வெள்ளிவிழாவை கொண்டாடும் இவ்வருடத்தில்ட பலமாக போடப்பட்டு வரும் செய்திகள் நிச்சயம் நாம் கொண்ட கனவை நனவாக்கும்.

மேலும் எமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு என்பது முழுமையாக உள்ளூரை நம்பியிருக்க முடியாது. உள்ளூர் சந்தைவாய்ப்பில் போட்டி அதிகம். ஆதலால் வெளிநாடுகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களாக உற்பத்தி செய்யப்பட்டால் அதற்கான போட்டி நிச்சயம் வெளிநாடுகளில் இருக்கும். வடபகுதிக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பு இங்கிருந்து பொருட்கள் தரமானதாக வடபகுதியின் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லுவதில் தங்கியிருக்கின்றது. இதற்கான வாய்ப்புக்களும் வசதிகளும் எமக்கு கிடைக்கும் என நம்புவோமாக. அரசியல் ரீதியாக வலுவடைந்துவரும் மாகாண சபையின் முழுமையான உதவி வடமாகாணத்தின் அனைத்து திணைக்களங்கள், ஆய்வுமையங்கள் அனைவற்றையும் இணைத்ததாக ஒருகுடையின் கீழ் உருவாக்கப்படும் போது இவையெல்லாம் சாத்தியமாகும்.

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மத்திய வங்கி இருப்பினும் மாகாணத்தின் தேவையறிந்து அதன் அபிவிருத்தியை நோக்கிய அதன் செயற்பாடு நிச்சயமாக அனைத்து திணைக்களங்களையும் இணைத்ததான நிறுவனமொன்றின் தேவையை இங்கே உணரவைத்திருப்பதுவும் அதனை நோக்கி செயற்திட்டங்கள் மாகாண அபிவிருத்திக்கான பாதையை செப்பனிடும் எனவும் நாம் முழுமையாக நம்பலாம். இதில் அனைவரதும் தன்னிகரல்லாத இணைவு அவசியமாகும்.

*

*

Top