யாரோடு நோவது ….

 வலய மட்ட தமிழ்த்தினப் போட்டி 29.05.2014 அன்று யா∕இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. நாடகப் போட்டியில் உடுவில் பெண்கள் கல்லூரியும், இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி, சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி முதலானவை மோதின.

ஏலவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு அமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி வெற்றி பெற்றது. நாடகத்தின் விதிமுறைக்கு அமைய சிறுகதை ஒன்றே நாடகம் ஆக்கப்பட வேண்டும் என்றனர். அதற்கமைய நந்தியின் காப்பு சிறுகதையை ஸ்கந்தவரோதயக்கல்லூரி நாடகம் ஆக்கியது. இதற்கு நடுவராக வந்தவர் நந்தியின் மருமகன் தேவானந்த் ஆவார். அனைத்து நாடக நிகழ்வுகளும் சிவகுமார் ஆசிரியர் மேற்பார்வை யின் கீழ் இடம்பெற்றது. இவர் ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தவர். கடந்தமுறையும் மகாஜனக் கல்லூரி சமநிலையை அடைவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்.

இந்நாடகத்துக்கு நடுவராகக் கடமையாற்றியவரில் பிறிதொருவர் பாபு என்பவர் இந்நாடகத்தின் நெறியாளராகக் கடமையாற்றிய கணேசிஸின் விசுவாசி. இம்முறை இவரை இந்நிகழ்வுக்கு நடுவராகக் கடமையாற்ற அனுமதிக்க கூடாது என மகாஜனக்கல்லூரியின் ஆசிரியர் திரு அயூரன் அவர்கள் வலயக்கல்வி தமிழ்பாட ஆசிரிய ஆலோசகரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் இவர் ஒருவரால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மற்றைய பெண் நடுவர் பாடசாலை மட்டத்துடன் தொடர்புபடாதவர் ஆயனும் கணேஸின் மற்றொரு விசுவாசி. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து நாடகம் அனைத்தும் அரங்கேறின.

முடிவுகள் ஏலவே தீர்மானிக்கப்பட்டமைக்கமைய ஸ்கந்தவரோதயக்கல்லூரி இம்முறையும் வெற்றி பெற்றது. அத்துடன் தேவானந்தின் செயற்றிறன் அரங்குடன் (யு.வு.ஆ) சேர்ந்து இயங்கும் கணேஸின் நாடகத்தை எந்த முறையில் தேவானந்தா நடுவராக இருக்க முடியும்? இதற்கு தேவானந்தா பரிசுத்தமான இதயத்தை திறந்து சாட்சியமளிப்பாரா?. கணேஸின் நடுநிலையற்ற தன்மை கருதியே யாழ்ப்பாணக்கல்லூரி இம்முறை நாடகத்தினை தயாரித்து இருந்தும் நிகழ்வில் பங்கு பற்றவில்லை. மற்றும் நாடகத்தின் முடிவு அறிவிக்க முன்னரே கணேஸ் அங்கிருந்து சென்றதுடன் அவருடைய மாணவர்களும் சென்று விட்டனர். இது கூடியிருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் சந்தேகத்தை கொடுத்தது. அதுமாத்திரமின்றி ஏற்கனவே கணேஸ் மீது கொண்டிருந்த சந்தேகத்தையும் உறுதிப்படுத்தியது.

மற்றும் நாடகத்தை பார்க்க கூடாது என முடிவினை அறிவித்திருந்தும் அனைத்து நாடகங்களையும் பார்வையாளரைப் பார்க்க விட்ட வலயத்தினர் ஸ்கந்தவரோதயக்கல்லூரி நாடகத்தை மட்டும் பார்வையிட அனுமதிக்க வில்லை. அவர்களின் நாடகம் நடந்த போது வாயில் கதவுகளுக்கு ஸ்கந்தவரோதயக்கல்லூரி மாணவர்களே காவலிருந்தமை இலங்கையில் வலிகாம வலயத்தில் மாத்திரமே நடக்கும். நடுவராகக் கடமையாற்றிய ஒருவரின் தகவலின் படி ஸ்கந்தவரோதயக்கல்லூரி நடித்த நாடகம் ஒரு களத்தினையே கொண்டிருக்க மகாஜனக் கல்லூரி நாடகம் மூன்று களக்காட்சிகளைக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

ஆயினும் மகாஜனக் கல்லூரி இந்நிகழ்வில் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தையே பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வில் தோல்வி நடுவர்களின் தீர்ப்பினாலேயேயன்றி நடிப்பினால் அன்று என நடுவர் கூறியது மனதினை உறைய வைக்கிறது. பல மாணவருடனும் ஆசிரியருடனும் சம்பந்தப்பட்ட இவ்விடயத்தை வெறுமனே அலட்சியப்படுத்தி விட முடியாது. மனங்களுடனும் மாணவரின் ஆளுமையுட னும் சம்பந்தப்பட்ட இவ்விடயத்தில் வலயம் கவனம் எடுக்கத் தவறுமாயின் வலிகாம வலயம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற போட்டிகளை நடாத்தும் போது மேலதிகாரிகள் வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் இருத்தல் அவசியம். ஆயினும் நடந்தது நடந்துவிட்டது. இனியாவது விடிவு பிறக்குமா? இதனை யாரோடு நோவது?.

*

*

Top