நம் தங்கையும் மற்றவர்களின் தங்கையும்

– தம்பி

அது, 2014-ல் ரக்‌ஷா பந்தன் அன்று நடந்த உண்மைச் சம்பவம். அதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

மஞ்சள் சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் தன் கைகளில் பரிசொன்றுடன் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்குச் சற்றுத் தள்ளி பின்புறமாக இரண்டு இளைஞர்கள் நிற்கிறார்கள். அவர்கள் இருவரும் தோஸ்துகள். அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு இளைஞர் கழுத்தில் டையுடன், தோளில் மாட்டிய பையுடன் நிற்கிறார்.

அந்த இளம்பெண்ணின் கைபேசி சிணுங்க, எடுத்துப் பேசுகிறார். எதிர் முனையில் அந்தப் பெண்ணின் சகோதரன் என்பது தெரிகிறது. தன் சகோதரனுக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள் சொல்லிவிட்டு, இன்னும் 15-20 நிமிடங்களில் தான் வந்துவிடுவேன் என்கிறார் அந்தப் பெண். அவள் கைபேசியை வைத்ததும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கும் டை கட்டிய இளைஞருக்கு ஃபோன் வருகிறது.

அவருடைய நண்பரின் சகோதரி என்பது அவர் பேசுவதை வைத்துத் தெரிகிறது. நண்பனின் சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள் தெரிவிக்கிறார் அந்த இளைஞர். அந்தச் சகோதரிக்கும் அவரின் சகோதரிக்கும் பேருந்து நிலையத்தில் அவர் காத்துக்கொண்டிருப்பதாக அந்தத் தொலைபேசி உரையாடலில் தெரிகிறது.

அவர் கைபேசியை வைத்ததும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தோஸ்துகள் இருவரும் அந்தப் பெண்ணைச் சீண்ட ஆரம்பிக்கிறார்கள். ‘அட்டகாசமான ஃபிகர்’ என்றெல்லாம் பேசுகிறார்கள். ‘இங்கே வா’ என்று அந்தப் பெண்ணை அழைக்கிறார்கள். அப்போது, டை கட்டிய இளைஞருக்குக் கோபம் வருகிறது. அவர்களிடம் வருகிறார். அந்த இளைஞர்களின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்க்கிறார். இருவரும் ரக்‌ஷா பட்டை கட்டியிருக்கிறார்கள். “இதை யார் கட்டியது?” என்று கேட்கிறார். “எங்கள் தங்கை” என்கிறார்கள் அந்த தோஸ்துகள். “அப்படின்னா அவளும் அட்டகாசமான ஃபிகராத்தான் இருக்கணும். என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க” என்கிறார் டை கட்டிய இளைஞர்.

உடனே அந்த தோஸ்துகள் இருவரும் டை கட்டிய இளைஞரை அடிக்க வருகிறார்கள். கழுத்தைப் பிடித்து நெரிக்கிறார்கள். “உங்கள் தங்கச்சியைப் பற்றிப் பேசினதும் உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா?” என்று அந்த இளைஞர் கேட்கிறார். அதற்கு “ஆமாம்” என்கிறான் தோஸ்துகளில் ஒருத்தன். “அப்படின்னா, நீங்கள் ரெண்டு பேரும் சீண்டிக்கொண்டிருப்பது யாரைத் தெரியுமா? என் தங்கச்சியைத் தான்” என்கிறார் டை கட்டிய இளைஞர். தோஸ்துகள் இருவர் மட்டுமல்ல, அந்த இளம் பெண்ணும் உறைந்துபோய் நிற்கிறார்.

இருவரும் டை கட்டிய இளைஞரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். “மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடமில்லை, அந்தப் பெண்ணிடம்” என்கிறார் அவர். அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணிடம் சென்று மன்னிப்புக் கேட்கிறார்கள். அந்தப் பெண்ணோ, “பரவாயில்லை, இனிமே மற்றவர்களின் தங்கச்சிகளிடம் இப்படி நடந்துக்காதீங்க” என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறார். அவர்களும், “கண்டிப்பாக, இனிமே அப்படிச் செய்ய மாட்டோம்” என்கிறார்கள்.

அவர்கள் சென்ற பிறகு, டை கட்டிய இளைஞரிடம் அந்தப் பெண் வருகிறார். அந்த இளைஞரிடம் “நன்றி அண்ணா” என்கிறார். “எனக்கும் ஒரு சகோதரி இருக்குறா” என்கிறார் அந்த இளைஞர். “எல்லா சகோதரர்களும் அவங்களோட சகோதரிகளுக்குத்தான் மதிப்பு கொடுக்குறாங்க, அவங்களத்தான் பாதுகாக்குறாங்க.

ஆனால், மத்தவங்களோட சகோதரிகளையும் மதிச்சு, அவங்களப் பாதுகாக்குறவங்கதான் உண்மையான சகோதரர்கள விட உயர்ந்தவங்க” என்கிறார் அந்தப் பெண். அப்படிச் சொல்லிவிட்டுக் கையிலுள்ள பரிசை எடுக்கிறார். “இது என்னோட அண்ணனுக்காக வாங்கிய பரிசு. ஆனா, இதுக்கு உண்மையிலேயே தகுதியானவர் நீங்கதான்” என்று சொல்லியபடி அந்தப் பரிசைக் காட்டுகிறார்.

மூன்று கைப்பிடியுள்ள கோப்பை அது. ‘உலகின் மிகச் சிறந்த சகோதரர், எதையும் கையாளத் தெரிந்தவர்’ (World’s greatest BRO, who can handle anything) என்று அதில் எழுதியிருக்கிறது. நெகிழ்ந்துபோகும் அந்த இளைஞர், “உங்களுக்குத் திருப்பிக் கொடுக்க இப்போது என்கிட்ட எதுவுமில்லையே தங்கச்சி” என்கிறார். அந்தப் பெண், “அட, நீங்க எனக்கு இன்னைக்குச் செஞ்சதுக்கு ஈடு இணை வேறெதுவும் கிடையாது” என்கிறார். அந்த இளைஞர் நன்றி சொல்ல, குறும்படம் முடிகிறது.

“எல்லா உறவுகளுக்கும் மேலாக ஒரு உறவு இருக்கிறது. அதுதான் மனித நேயம். மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மதிப்பு கொடுக்கும், அவர்களையும் காப்பதற்கு முன்வரும் சகோதரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்” போன்ற வாசகங்களோடு முடியும் இந்தக் குறும்படம் நம் எல்லோருக்கும் ஆழமான, அழுத்தமான செய்தியைச் சொல்கிறது!

இந்த குறும்படத்தைப் பார்க்க:

*

*

Top