சமையலறையில் கல்லறை: விசமாகிய உணவுகள் பாகம் – 8 (இறுதி பாகம்)

 – டேவிற் பிரவீன்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பரிசோதனை முடிவுகள் இத்தகைய பாதிப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. அதன் பாதிப்புகளும் மக்களிடம் தென்படத் தொடங்கி விட்டன. உலகிலேயே அமெரிக்காதான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அதிக அளவில் விளைவித்து உணவில் பயன்படுத்துகிறது.

இத்தகைய பேரழிவு தரும் தொழில்நுட்பத்தை ஏன் அறிவியல் மேலும் மேலும் வளர்த்துச் செல்ல வேண்டும்? எல்லாம் பெரு மூலதனம் தூக்கியெறியும் லாப பணத்திற்குக்தான். அறிவியல் மனித வாழ்வின் அன்றாட பிரச்சனைகளை எப்படி ஆக்கப்பூர்வமாக கடந்து வருவது என்று தீர்வுகளை முன்வைப்பதை விட்டு பூமியில் மனித வாழ்வை இல்லாமல் ஆக்கும் செயல்களில் இப்பொழுது கவனம் செலுத்திவருகிறது.

மரபணு மாற்றத் தொழில்நுட்பம் விவசாயத்தை விவசாயியிடமிருந்து புடுங்கி பெரு மூலதனங்களின் கைகளில் கொடுத்திருக்கிறது. இனி மனிதன் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் பெரு மூலதனங்களே தீர்மானிக்கும். மனிதன் சாப்பிட வேண்டிய உணவு பொருட்களின் ரகங்களை பெரு மூலதனங்களின் சோதனைக் கூடங்களே தீர்மானிக்கும்.

இந்த தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு பெருமூலதனங்கள் நடத்த துடிக்கும் லாப வேட்டைக்கு தேவைப்படுவது உலகெங்கிலும் இருக்கும் விவசாய நிலங்கள். இதன் காரணமாகவே இன்றைக்கு உலகெங்கிலும் விவசாயியை விவசாய நிலத்திலிருந்து வெளியேற்றும் காரியங்கள் அரசாங்கங்களின் உதவியுடன் வேகமாக நடந்து வருகிறது.

இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அனேகமான துரிதவகை உணவுப் பொருட்களில் மறைமுகமாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கைங்கரியம் இருக்கிறது. Vegitable Oils, Soya sauce, Dairy Products, Rice, Corn, Wheat, Peas, Potateo chips, Tomato போன்ற உணவுப் பொருட்களில் மரபணு மாற்றப் பட்ட பயிர்களின் கலப்படம் இருக்கின்றது. தங்கள் உணவுப் பொருட்களின் கலோரி அளவுகளைக் குறிப்பிடும் நிறுவனங்கள் தங்களுடைய உணவுப் பொருள் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகையின் மூலம் தயாரிக்கப் பட்டதா என்பதை மட்டும் குறிப்பிடவே குறிப்பிடாது.

இது குறித்த விழிப்புணர்ச்சி அற்ற அப்பாவி மக்களும் அவைகளை வாங்கித் திண்று கொண்டிருக்கிறார்கள். இதன் தாக்கம் இன்னும் 20-30 வருடங்களில் மனித இனத்திற்கு தெரிந்துவிடும். தெரிந்து என்னப் பயன் பூமியின் பல்லுயிர் அழிப்பில் மனிதன் 60% கடந்து வந்து விட்டிருப்பான். அந்த அழிவுகள் அனைத்துமே மீட்டுருவாக்கம் செய்யப்பட முடியாத அழிவுகளாக இருக்கும் என்பது நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொல்லப்போகும் நற்செய்தி.

இந்த கட்டுரைக்கு உதவிய புத்தகங்கள்:

1. Genetic Roulette: The Documented Health Risks of Genetically Engineered Foods (Jeffrey M. Smith)

2. Seeds of Deception (Jeffrey M. Smith)

3. Altered Genes, Twisted Truth: How the Venture to Genetically Engineer Our Food Has Subverted Science, Corrupted Government, and Systematically Deceived the Public (Steven M. Druker)

4. Understanding DNA (C. R Calladine and Christopher Calladine)

*

*

Top