உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – பாகம் 1

 – டேவிற் பிரவீன்

இன்றைக்கு மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களெல்லாம் என்னவென்றே தெரியாமல் பார்த்துக்கொண்ட நாட்டு மருந்துகளையும் மூலிகளையும் பயன்படுத்திய நம்முடைய முன்னோர்களின் வழி வந்த நாம் இன்றைக்கு சிறிய தலைவலி என்றாலும் நாமே ஆங்கில மருந்துக்களை விற்பனை செய்யும் மருந்து கடைகளுக்கு சென்று ஒரு குழுசையை வாங்கி விழுங்கி விடுகிறோம். தொலைக்காட்சியில் காட்டப்படும் இரசாயன மாத்திரை விளம்பரங்களின் தாக்கம் அப்படி.

விளம்பரத்தில் சொல்லப்படும் அந்த குழுசையின் உண்மைத் தன்மை என்ன? அந்த குழுசை தலைவலிக்கானதுதானா? அந்த குழுசையை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் எத்தகையது? அதைப் பற்றி ஏன் அந்த விளம்பரம் எதுவுமே சொல்லவில்லை? மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இப்படி நாமே கண்ட குழுசைகளையும் எடுத்துக்கொள்ளலாமா? மற்ற நுகர்வுப் பொருட்களைப் போல மருந்து மாத்திரைகளையும் இப்படி நேரடியாக விளம்பரம் செய்ய சட்ட அனுமதி இருக்கிறதா? அந்த குழுசை உண்மையில் தலைவலியை போக்கும் என்பதை அந்த மருந்து நிறுவனம் எப்படி கண்டுபிடித்தது? அந்த குழுசையை விற்க யார் அனுமதி கொடுத்தது?

இதுபோன்ற கேள்விகளையோ அல்லது இந்த கேள்விகளில் ஒன்றையாவது ஒரு முறையேனும் உங்களை நீங்களே கேட்டுக்கொண்டது உண்டா? அப்படியானால் இந்த கட்டுரைத் தொடர் முழுக்க முழுக்க உங்களுக்கானதுதான். இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் நான் ஒரு முறைகூட யோசித்துப் பார்த்தது இல்லை, தலைவலியா ஒரு குழுசையை எடுத்து விழுங்கினோமா அடுத்த வேலையைப் பார்த்தோமா என்று போக கூடிய ஆள் நான் என்று நீங்கள் மார்த்தட்டுபவரா? அப்படியானால் இந்த கட்டுரைத் தொடர் உங்களுக்கும் சேர்த்துதான். இந்த கட்டுரைத் தொடரை முழுதும் படித்து முடித்ததும் எப்படியெல்லாம் மருந்து நிறுவனங்கள் உங்களுடைய உயிரை உலையில் வைத்து தங்களுடைய லாப சோற்றை சமைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வீா்கள்.

முதலிலே ஒன்றை தெளிவுப்படுத்தி விடுகிறேன். இந்த கட்டுரைத் தொடர் இன்றைய நவீன மருத்துவ முறைகள் பற்றியதல்ல. ஆனால் இன்றை நவீன மற்றும் ஆங்கில மருத்துவ முறையின் உயிர் மூச்சாக இருக்கும் மருந்துகளைப் பற்றியது. அந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றியது. ஒரு சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தைப் பெருக்க எப்படி உலக மக்களின் உயிர்களை பணையம் வைக்கிறார்கள் என்பதைப் பற்றியது. ஆங்கில மருந்து தயாரிப்பு தொழிலுக்கு பின்னால் இருக்கும் லாப வெறி, இலஞ்சம், முறைகேடு, மனித நேயமற்ற தன்மை, சூழ்ச்சி, ஏமாற்று வேலை போன்றவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் இந்த தொடர்.

எவ்வளவுதான் ஏமாளியாக இருந்தாலும் ஒருப் பொருளை வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்னால் அதன் நன்மைத் தீமைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதுவே மருந்து என்று வருகிறபோது எவ்வளவுப் பெரிய புத்திசாலியாக இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தைப் பற்றிய எத்தகைய எதிர் கேள்வியும் சந்தேகப் பார்வையும் இல்லாமல் அந்த மருந்தினுடைய நன்மைத் தீமைகளைப் பற்றிய புரிதலும் இல்லாமல் விழுங்கி வைப்பது உலக வழக்கம். மருத்துவர் பரிந்துரைத்தால் அது நல்லதாகத்தான் இருக்கும் என்கிற குருட்டு நம்பிக்கை. இந்த நம்பிக்கை உலகம் தழுவியது.

இந்த குருட்டு நம்பிக்கைத்தான் தீமைகளின் ஊற்றுக்கண். நம் உயிரைக் காக்கும் மருத்துவர் நமக்கு தீங்கானதையா தந்துவிடுவார் என்கிற புரிதலே நம்முடைய குருட்டு நம்பிக்கையாக மாறுகிறது. இதன் விளைவு மருத்துவர் நமக்கு பரிந்துரைக்கும் மாத்திரை எதுவாக இருந்தாலும் எதிர் கேள்வியே இல்லாமல் வாங்கி நம்முடைய நோயைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகிறோம். மருத்துவர் மேல் இருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான் ஆனால் அந்த மருத்தவரும் நம்மைப் போன்ற மனிதர்தானே அவருக்கு மட்டும் எப்படி நிச்சயமாகத் தெரியும் அவர் பரிந்துரைக்கும் மருந்து நமது நோயைத் தீர்க்க கூடியது என்று? என்கிற சந்தேக கேள்வியை ஏன் ஒருபோதும் நம்மை நாமே கேட்டுக்கொள்வதில்லை!

அதற்குத்தானே அவரு ஐஞ்சு வருசம் படிக்கிறாா் அவருக்குத் தெரியாதா என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்பீா்களாக இருந்தால் உங்களிடம் ஒரு கேள்வி மருத்துவர் மருந்துகளைப் பற்றிப் படிப்பாரா இல்லை நோய்களைப் பற்றியும் மனித உடற் கூற்றியலையும் பற்றிப் படிப்பாரா? நிச்சயமாக மருத்துவர் தன்னுடைய மருத்துவப் படிப்புக் காலத்தில் மருந்துகளைப் பற்றிப் படிக்கவே மாட்டார். மருந்துகளின் தயாரிப்பு முறைகள் பற்றியும் உலகின் எந்த மருத்துவரும் படிப்பதில்லை. அது அவர்களின் வேலையும் அல்ல. அப்படியானால் நம்முடைய நோய்க்கு இந்த மருந்துதான் என்பதை மருத்துவர் எப்படி தெரிந்து வைத்திருக்கிறார்?

உண்மையில் உங்களுக்கு ஒரு மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவர் அவர் பரிந்துரைக்கும் மருந்தைப் பற்றி மற்றொருவர் சொல்லித்தான் தெரிந்துக் கொள்வார். இதில் என்ன கொடுமை என்றால் அதற்குத்தானே இந்த கட்டுரையே. மருத்துவருக்கு மருந்துகளைப் பற்றிச் சொல்பவர்கள் யார்? விற்பனைப் பிரதிநிதிகள் (Sales Representatives). யாருடைய பிரதிநிதிகள் என்றால் பன்னாட்டு உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகள். ஆக ஒரு நோய்கான மருந்துகளை தீர்மானிப்பவர் மருத்துவர் இல்லை. மருந்து தயாரிப்பு நிறுவனங்களே.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி ஒரு நோய்கான மருந்துகளை தயாரிக்கிறார்கள்? இதைப் பற்றி விலாவாரியாகப் பார்ப்பதற்கு முன்னால் இந்த தொடர் இரண்டு பகுதிகளைக் கொண்டது என்பதை சொல்லி விடுகிறேன். முதல் பகுதி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி ஒரு நோய்கான மருந்தை தயாரிக்கிறார்கள் அதற்கு பின்னால் இருக்கும் மோசடிகளைப் பற்றியது. இரண்டாவதுப் பகுதி அவர்கள் தயாரித்த மருந்துகளை எப்படி சந்தைப்படுத்துகிறார்கள் அதற்குப் பின்னால் இருக்கும் மோசடிகளைப் பற்றியது.

அடுத்த தொடரிலும்…

*

*

Top