உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – பாகம் 2

 – டேவிற் பிரவீன்

மருந்து மாத்திரைகளின் விலையை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதைக் குறித்து நாம் என்றைக்குமே கேள்வி கேட்பது கிடையாது. காரணம் அவைகள் மனித உயிர்களைக் காக்க கூடியவைகள்

அதனால் அவைகளைப் பற்றி நாம் வாய் திறக்கக் கூடாது. மிகச் சரியாக இதைத்தான் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. நாங்கள் கொடுக்கும் நோய் தீர்க்கும் மருந்துகள் எவ்வளவு விலையானாலும் வாயை மூடிக்கொண்டு வாங்கிவிடுங்கள் இல்லையென்றால் மருந்து தயாரிப்பை நிறுத்தி விடுவோம் என்று மறைமுகமாக அறிவிக்கின்றன.

இப்படி சொல்வதற்குப் பெயர் அறிவிப்பா அல்லது மிரட்டலா! தாங்கள் உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து சமூக சேவை செய்வதுப்போல் காட்டிக்கொள்பவர்களின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வர முடியுமா? வரமுடியும். காரணம் அவர்கள் மருந்து தயாரிப்பை மனித உயிர்களை காக்க என்று தயாரித்தால்தானே. மனித உயிர்களை வைத்து வியாபாரம் செய்வதுதானே அவர்களின் முதன்மையான குறிக்கோள். உலகம் முழுவதிலும் மனித உயிர்களைக் காக்க தாங்கள் ஒவ்வொருவரும் சுமார் 8,00,000 கோடிகளை Research & Development-ற்கு மட்டுமே செலவிடுவதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடுகின்றன (இது ஒரே ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் செலவுமட்டும்தான்).

அப்படியென்றால் மருந்துகளின் விலை உயர்வாக இருக்கத்தானே செய்யும் என்று நீங்கள் கேட்க வாயைத் திறப்பதற்கு முன் இதைக் கேளுங்கள் R&D-க்கு 8,00,000 கோடி என்பது வடிகட்டிய பொய். உண்மையில் பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் R&D என்று ஒன்றை வைத்திருப்பதே தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்திற்கு நியாயமும் காரணமும் கற்பிக்கத்தான். இதைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள நமக்கு தெரிய வேண்டியது ஒரு நோய்கான மருந்தை கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தின் முதல் நிலையைப் பற்றி.

எந்த ஒரு நோய்கான மருந்தையும் ஒரே நாள் இரவில் motivational song பின்னியில் ஒலிக்க கண்டுபிடித்துவிட முடியாது. ஒரு நோய்க்கான மருந்தைக் கட்டுபிடிக்க பல வருடங்கள் ஆகும். பல வருடங்கள் என்றால் இரண்டுத் தலைமுறைகள் கூட ஆகலாம். தந்தையின் காலத்தில் தொடங்கப்படும் ஒரு மருந்துக் கண்டுபிடிப்பு வேலை பேரன் காலத்தில் முழுமையடையும் நிலைகளும் உண்டு.

ஒரு நோய்கான மருந்தைக் கண்டுபிடிக்க முதலில் அந்த நோயைக் குறித்து அலசி ஆராய வேண்டும். அதாவது மனித செல்லின் மூலக்கூறு வரை சென்று ஒரு குறிப்பிட்ட நோய் ஏறப்படக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இதற்கே 5 முதல் 10 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அதாவது ஒரு ஆராய்ச்சியாளரின் ஆயுளில் 5 முதல் 10 வருடங்கள் இதற்கே செலவிடப்படும். எதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட நோய் உடலில் தோன்றுகிறது, உடலியக்க சங்கிலியில் எந்த இடம் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட நோய் தோன்றுகிறது, அது மேலும் எப்படி உடலியக்கத்தை பாதிக்கிறது போன்ற தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் விரிவாக ஆராய்வார்கள். இது முதல் நிலை.

அடுத்த தொடரிலும்…

*

*

Top