பப்பாசியில் பூ, காய் அழுகலும் இலை மஞ்சளாதலும்

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன்

குறுநில மன்னர்களின் வாழ்க்கை போல சிறிய விவசாயிகளின் வாழ்க்கையும் இடர்காலத்தின் பின்னரான வாழ்வாதாரமும் அமைந்துவிட்டது. எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் குறிப்பாக வருவாயையும் பெருக்கும் நோக்கத்திற்காக விவசாய செய்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. காலநிலை மாற்றம் இயற்கையின் திருவிளையாடல் எனினும் நாமும் அதற்கு இயைந்து எமது பயிர்ச்செய்கையை திட்டமிட வேண்டியிருக்கின்றது. இயற்கையை பகைத்து எதுவும் ஆகப்போவதில்லை என்பதனை எமது விவசாய பெருமக்கள் நன்கே உணர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் காலநிலையினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை துல்லிமாக கணிப்பிட்டு அதன்மூலம் நடைபெற இருக்கும் இயற்கையின் விளைவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் விவசாயப் பெருமக்களுக்கு தகுந்த பலனைக் கிடைக்க வழிசெய்யலாம்.

அதிகமான இடங்களில் தற்போது பப்பாசி செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் பப்பாசியை வீட்டுத் தோட்டங்களிலும் இன்னும் தோட்டநிலங்களிலும் பயிரிட்டு வருகின்றனர். இதில் பப்பாசி செய்கையை மக்கள் முன்னெடுப்பதற்கு முக்கிய காரணமாக அதற்கான தேவை அதிகரித்துள்ளமையாகும். ஜஸ்கிரீம் உற்பத்தியிலும் பழக்கலவை உற்பத்தியிலும் பப்பாசி பழத்தை அதிகமாக பயன்படுத்துவதனால் இந்த கேள்வி அதிகரித்துள்ளமையை குறிப்பிட்டாலும் பழத்தை உண்ணும் பழக்கத்தை மக்கள் முழுமையான தேவையானதாக கருதும் போது இதன் கேள்வி இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அதிகளவில் உள்ளீடுகளில் தங்கி பயிர்செய்யப்படும் பழப்பயிராக பப்பாசியை மக்கள் வளர்க்க ஆரம்பித்து விட்டமையையும் அவதானிக்க முடிகின்றது. இதற்கு பயன்படுத்தப்படும் இனங்கள் குறிப்பாக ரெட்லேடி உள்ளீடுகளில் தங்கியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

பப்பாசி பயிர்செய்யப்பட்ட இடங்களில் அதனது பூவில், காய்களில் அழுகலும் இன்னும் இலை மஞ்சளாதலும் அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் பகுதியில் ஈச்சம்பத்தை எனுமிடத்திலும் யாழ்ப்பாணம் மருதனார்மடப் பகுதியிலும் இவ்வாறான பிரச்சனைகள் உணரப்பட்டிருந்தாலும் அநேகமான பப்பாசி பயிர்செய்யும் இடங்களில் இப்பிரச்சனைகள் காணப்பட்டதனையும் விவசாய பெருமக்களிடமிருந்து அறிய முடிகின்றது. இவ்வாறான பிரச்சனைகளுக்கான காரணிகளை முதலில் இனங்காணுதல் அவசியமாகும்.

பப்பாசியில் பூ, காய் அழுகலும் இலை மஞ்சளாதலும்1

பப்பாசி இலை மஞ்சளாதல்:

பப்பாசி இலை மஞ்சளாவதற்கு ஒரு வகை சிற்றுண்ணி காரணமாகும். சிற்றுண்ணியை வெற்றுக்கண்ணால் காண்பது சிரமமாக இருக்கும். அதனால் பப்பாசியை பயிர்செய்பவர்கள் சிற்றுண்ணியின் தாக்கத்தை அதன் இலை மஞ்சளாவதிலிருந்தே இனங்காண முடியும். பப்பாசியின் கீழுள்ள இலையிலேயே முதலில் மஞ்சளாதல் காணப்படும். பின்னால் கீழிருந்து மேலாக மஞ்சளாதல் விருத்தியடையும். ஓரளவு வளர்ந்துள்ள பப்பாசியில் இவ்வாறான மஞ்சளாதல் பொதுவாக காணப்படுவதனால் இதனை பரந்தளவில் நடுகைசெய்தவர்களுக்கு இந்த தாக்கம் அதிகமானதாகவே தெரியும். இந்த தாக்கத்தை அல்லது சேதத்தை தவறாக இனங்காண்பவர்கள் தேவையற்று பூச்சிநாசினியை விசிறுவதை காண முடிகின்றது.

பலருடைய பப்பாசி மரத்திற்று பூச்சிநாசினிகள் வகைதொகையின்றி தெளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. தயவு செய்து பரிந்துரை செய்பவர்கள் பிரச்சனையை சரியாக இனங்காணாது தவறாக பரிந்துரைசெய்ய வேண்டாம். இது நஷ்டப்பட்ட விவசாயிகளை இன்னும் சோதிப்பதாகவே முடியும். இவ்வாறான மஞ்சளாதல் பொதுவாக தழைச்சத்து குறைபாடால் வருவதாயினும் இங்கே குறிப்பிட்டு தோன்றியிருக்கின்ற மஞ்சளாதல் சிற்றுண்ணியின் தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதனால் இதற்காக சிற்றுண்ணியைக் கட்டுப்படுத்தும் சிற்றுண்ணிநாசினியையே பயன்படுத்த வேண்டும். அபமெக்ரின் கலவைகள் எதுவாயினும் பயன்படுத்தி சிற்றுண்ணியைக் கட்டுப்படுத்த முடியும். சிற்றுண்ணியின் தாக்கம் அநேகமாக வெப்பநிலை அதிகரித்திருக்கும் போது அதிகமாக இருக்கும். ஏனெனில் அதிகரிக்கும் சூழல் வெப்பநிலைக்கு இயைபாக சிற்றுண்ணி பெருக்கமும் இருப்பதனால் மஞ்சளாதல் வெப்பநிலை அதிகரித்திருக்கும் போது அதிகமாகவும் விரைவாக பரவுவதாகவுமிருக்கும். ஆனால் தற்போது மழைபெய்ய தொடங்கியிருப்பதனால் இந்த சிற்றுண்ணியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இதனை அலட்சியம் செய்யாது பீடையின் பெருக்கத்தை குறித்து வைத்திருக்க வேண்டும். பின்னர் இதுபற்றி திட்டமிட முடியும்.

பப்பாசி பூ காய்கள் அழுகி உதிர்தல்:

பப்பாசியில் பூ மற்றும் காய்கள் அழுகுதல் என்பது ஒருவகை பூச்சியின் தாக்கத்தின் விளைவாகவே இருப்பதை உணரலாம். மிகவும் சிறிக வண்டின் தாக்கமாகவே இந்த அழுகுதல் ஏற்படுவதாக அறிவிக்கப் படுகின்றது. பூக்களை விரித்து வண்டினை பார்ப்பதன் மூலம் இனங்காணலாம். வெற்றுக்கண்ணால் பார்ப்பதற்கு தெரிந்தாலும் கைவில்லையின் உதவியுடன் பூச்சியினாலான பிரச்சனையை இனங்கண்டு பரிந்துரை செய்யலாம். பூச்சியினை இனங்காண முடிந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கான பூச்சி நாசினியை பரிந்துரை செய்யலாம். வண்டு வகைப் பூச்சியாக இருப்பதனால் இதற்கு தொடுகை நாசினி சிறந்ததாகும். பூச்சியைப் பற்றிய முழுவிபரத்தையும் அறிவிக்க முடியும். பப்பாசியில் தற்போதைக்கு இவ்விரு பிரச்சனைகளுமே முக்கியமானதாக இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த முடிந்தால் பப்பாசி செய்கையை இலகுவாக செய்ய முடியும். மழைகாலத்தில் அதிகளவில் பிரச்சனைகளை தோற்றுவிக்காது இருக்கின்றதை காணலாம்.

One Comment;

  1. த வநாயகம் said:

    மழை காலத்தில் தான் பிரச்சினை அதிகம்

*

*

Top