உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – பாகம் 3

 – டேவிற் பிரவீன்

Burroughs Wellcome நிறுவனத்தின் இன்றையப் பெயர் GlaxoSmithKline.உலகின் முதல் பத்து முன்னனி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று. மற்ற முன்னனி நிறுவனங்கள் Pfizer, Merck, Johnson & Johnson, Bristol Myers Squibb, Wyeth, AstraZeneca, Novartis மற்றும் Roche.வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என்று அனைத்திலும் இந்த நிறுவனங்களின் கிளைத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு வெளியே இருந்து வேலை செய்து தரும் கிளை நிறுவனங்களும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இருக்கின்றன.

உலகின் அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் நான்கு நிலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றன. அவைகள் Brand drugs, Generic drugs, Prescription drugs மற்றும் Over-the-counter drugs. Brand மருந்துகள் ஒரு மருந்து நிறுவனத்தின் தனிப்பட்ட கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த so called ‘தனிப்பட்ட’ கண்டுபிடிப்பின் அழகை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். இத்தகைய மருந்துகளுக்கு சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்ளும் இது பொதுவாக பத்து வருடங்களுக்கு இருக்கும். சில சமயங்களில் பதினைந்திலிருந்து இருபது வருடங்களுக்கு கூட போகும்.

இந்த காப்புரிமைக் காலக்கட்டம் தான் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம மழை அடை மழையாக பொழியும் காலகட்டம். இந்த காலகட்டம் முழுவதும் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்த Brand மருந்தை (அது புற்றுநோய்காக, எய்ட்ஸ் நோய்காக, இரத்த அழுத்தம் சக்கரை நோய்காக இருக்கலாம்) உலகின் வேறு எந்த மருந்து தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து விற்க முடியாது. உலக நோயாளிகள் யாராக இருந்தாலும் அது அமெரிக்க சனாதிபதியாக இருந்தாலும் கூட இந்த குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு கம்பெனியிடம் இருந்துதான் அந்த Brand மருந்தை வாங்க முடியும். உலகின் கடைகோடி நோயாளிக் கூட இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தைதான் நம்பியிருக்க வேண்டும் இந்த மருந்திற்காக. பிறகு என்ன அவர்கள் வைப்பதுதானே விலை. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆண்டுகளுக்கு காப்புரிமை கால கட்டத்தை நீடிக்க ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் சாம பேத தான தண்ட முறைகள் அனைத்தையும் தேவையான இடங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும்.

காப்புரிமை காலகட்டம் முடிவடைந்த மருந்துகள் Generic மருந்துகள். இந்த மருந்துகளை எந்த மருந்து தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்கலாம். எல்லா மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருந்தை தயாரிப்பதால் வணிகப் போட்டி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் குறிப்பிட்ட நோய்கான அந்த குறிப்பிட்ட மருந்தின் நிறம், தோற்றம் போன்ற விசயங்களையே மாற்றியிருக்கும் மற்றபடி மருந்தின் molecule ஒன்றுதான். இந்த இரண்டு வகை மருந்துகளையும் ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால் அது Prescription மருந்து. சில மருந்துகளை மருத்துவரின் துணையில்லாமல நோயாளியே மருந்து கடைகளுக்கு சென்று நேரடியாக வாங்க முடியும். உதாரணமாக சுர மருந்து, சளி, தலைவலி மருந்துகள் இவைகள் Over-the-counter மருந்துகள்.

Brand, Generic மற்றும் Prescription வகை மருந்துகளை விற்க மருந்து நிறுவனங்கள் நம்பியிருப்பது மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும்தான். இவர்களை விட்டால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் தங்களுடைய மருந்துகளை விற்க முடியாது. அப்படியென்றால் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நோயாளிகளுக்கு தங்களுடைய மருந்துகளையே மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பரிந்துரைக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அலைமோதுகின்றன. சேவை மனப்பான்மையும் நோயாளிகளைக் குறித்த அக்கறையும் உள்ள மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சலுகைகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிப்பணியாமல் இருந்தால் நோயாளிகளுக்கு உண்மையிலேயே பயன்தரக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆனால் மருந்துவமனைகளையும் மருத்துவர்களையும் நம்பியிருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்காகவும் பங்குசந்தை குறியீட்டிற்காகவும் நடத்தும் சலுகைத் திருவிளையாடல்களுக்கு மத்தியில் சிக்கும் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு காலத்திற்குத்தான் போதி தர்மர்களாக இருந்துவிட முடியும்! உதாரணமாக நான் இலட்சக் கணக்கில் பணத்தை கட்டி மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராக வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் மருத்துவப் படிப்பிற்கு செலவு செய்த பணத்திற்கு ஈடாக இரண்டு மடங்கு சலுகைகளை ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் அதனுடைய மருந்தை என்னுடைய நோயாளிகளுக்கு பரிந்துரைத்தால் எனக்குத் தருகிறேன் என்று ஆசை காட்டினால் நான் என்ன செய்வேன்? எனக்கு பணம் முக்கியமில்லை நோயாளிகளின் நலனே முக்கியம் என்று இருந்துவிட்டால் நோயாளிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால்!

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து மருத்துவ/மருந்து ஆராய்ச்சித் தகவல்களை வாங்க வசதி ஏற்படுத்திக் கொடுத்த சட்டம் எது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்த Bayh-Dole Act. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் Brand மருந்துகளுக்கு காப்புரிமை காலத்தை நீடிக்கவும் உறுதிப்படுத்தவும் வசதி ஏற்படுத்திக் கொடுத்த அடுத்த சட்டம் HatchWaxman Act. அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தால் நம் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மருந்துகளும் அமெரிக்காவில் இருந்து இங்கு இறக்குமதியாகும் மருந்துகளும் இந்த சட்டங்களின் எல்லைக்குள் வருபவைகள்.

மேலும் நம் நாட்டில் மருந்து தயாரிக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நம் நாட்டில் FDI (Foregin Direct Investment) மூலமாக பணத்தை முதலீடு செய்யும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்த சட்டங்களின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. அமெரிக்காவில் வழக்கிலிருக்கும் இந்த முறைகளையே பெரும்பாலும் உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய நாடுகளில் பின்பற்றுகின்றன. உலகம் ஒரு சிறு கிராமமாகிவிட்டது என்றால் நம்புவீர்கள்தானே. இது மாத்திரம் இல்லை மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் கூட உண்டு.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் எப்படி ஒரு மருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை மேலோட்டமாக தெரிந்து கொள்வோம். ஒரு மருந்து தயாரிப்பின் முதல்நிலை Research phase. இது பெரும்பாலும் மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பெற்ற மருத்துவ/மருந்து ஆராய்ச்சித் தகவல்களை தங்களுடைய R&D கண்டுபிடித்ததாக அள்ளிவிடும் நிலை. அடுத்த நிலை Development phase. இது மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளப்படும் Pre-clinical மற்றும் Clinical என்று.

Pre-clinical நிலையில் மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பெற்ற மருந்து ஆராய்ச்சித் தகவல்களை பலவகையான மிருகங்களுக்கு கொடுத்து சோதித்துப் பார்ப்பார்கள். சீவகாருண்ய சீலர்களும் ப்ளு கிராஸ் அமைப்பினரும் இந்த சோதனைக் கூடங்களுக்கு சென்று போராட்டமெல்லாம் பண்ண முடியாது.

Clinical நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து சோதித்துப் பார்ப்பார்கள். இது மிகுந்த செலவும் காலமும் தேவைப்படும் நிலை. இதிலேயே மேலும் Phase 1, Phase 2 மற்றும் Phase 3 என்று மூன்று நிலைகள் உண்டு. இந்த சோதனைக்கு மனிதர்களைப் பிடிப்பதுதான் மிகவும் கடினமான வேலை. சோதனை நிலையில் இருக்கும் புதிய மருந்துகளை விழுங்குவது என்பது பணம் வாங்கிக் கொண்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம். எவ்வளவுப் பணம் கொடுத்தாலும் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வோமா? அதனால்தான் இதற்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய மருந்துகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு ஆகும் கால தாமதத்தில் இந்த சோதனை நிலையின் பங்கும் அதிகம்.

இதற்கும் ஒரு வழியை காணாமலா இருந்து விடுவார்கள். கண்டுவிட்டார்கள். அது Contract Research Organizations (CROs). புதிய மருந்துகளை வலியவந்து தங்களுடைய உடம்பில் சோதித்து பார்க்க ஆட்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இவைகள். இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு பெரும் அளவில் வெளிவேலை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐதிராபாத், பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இத்தகைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. புதிய மருந்துகளின் சாதக பாதகங்களை அறிந்துக்கொள்ளும் சோதனைக்கு தானாக முன்வருபவர்களிடம் பணம் கொடுத்து கையோடு புதிய மருந்துகளையும் கொடுத்து விடுவார்கள். சில மருத்துவர்களும் இத்தகைய சோதனைகளுக்கு தங்களுடைய நோயாளிகளை பரிந்துரை செய்வது உண்டு. (அதற்கு மருத்துவர்களுக்கு தனியாக கவனிப்பு  உண்டு).

இத்தகைய சோதனைகளை கடந்துதான் ஒரு மருந்து சந்தைக்கு வர முடியும். இத்தகைய சோதனைகளை கடைப்பிடித்திருந்தால்தான் அமெரிக்காவின் FDA (Food & Drug Administration) அனுமதியளிக்கும். இந்த சோதனை எல்லாம் ஏட்டளவில்தான். இத்தகைய தடைகளை கடப்பது மனிதர்களுக்கு வேண்டுமானால் கடினமாக இருக்கலாம் பணத்திற்கு கிடையாது. பணம்தான் பாதாளம் வரைக்கும் பாயுமே. இப்படியான கடினமான சோதனைகளைக் கடந்துதான் தங்களுடைய innovative மருந்துகள் சந்தைக்கும் மக்களின் பயன்பாட்டிற்கும் வருகின்றன என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. மருந்துவமனைகளும் மருத்துவர்களும் அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் உண்மை?

இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். Lupron இது புற்று நோய்கான முக்கிய மருந்துகளில் ஒன்று. இதை தயாரித்தது TAP Pharmaceuticals மருந்து நிறுவனம். அமெரிக்காவில் இந்த மருந்தின் பக்க விளைவுகள் (side effects) காரணமாக இந்த நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் குவிந்து விட்டன. சுமார் 800 கோடி டெலர்களை அபராதமாக கட்டி இந்த வழக்குகளிலிருந்து வெளியே வந்தது இந்த நிறுவனம். இந்த மருந்து இன்றைக்கும் நம் நாட்டில் சந்தையில் விற்பனையில் இருக்கிறது. அமெரிக்க மக்கள் ஏமாளிகள் என்றாலும் தாங்கள் பாதிக்கப்பட்டது நிரூபனமானால் நீதிமன்றம் சென்று போராடி தங்களுக்கான நீதியைப் பெற்று விடுவார்கள். ஆனால் நாம்?

அடுத்த தொடரிலும்…..

உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – பாகம் 2

*

*

Top