உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – இறுதி பாகம்

 – டேவிற் பிரவீன்

இத்தகைய சோதனைகளும் கூட “me-too” மருந்துகளுக்கு கிடையாது. “me-too” மருந்து என்பது வெற்றிப் பெற்ற பழைய திரைப்படங்களை டியிற்றலைஸ் (digitize) செய்து ரிலீஸ் செய்வதற்கு சமம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் புது மொந்தையில் பழையக் கல்லு. இப்படி பல வேலைகளை செய்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு சந்தையில் என்றைக்குமே போட்டித்தான். போட்டிக் காரணமாக மருந்து கம்பெனிகளிடையே புதுப்புது மருந்துகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும்.

புது மருந்துகளைத்தான் Brand மருந்துகளாகத் தயாரிக்க முடியும். அப்பொழுதுதானே பண மழை பெய்யும். ஆனால் இதில் கொடுமை புதுவகை இரசாயன மருந்துகள் கண்டுபிடிப்பு என்பது எப்போதாவது ஒரு முறை நிகழும் காரியம். அதுவும் மக்களின் வரிப் பணத்தில் நடைப்பெறும் கல்வி நிறுவன சோதனைக் கூடங்களில்தான் நிகழ முடியும். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் R&D-தான் பிரபலமானது ஆயிற்றே. அதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மருந்து கண்டுபிடிப்பு வாய்ப்புகளைத் தேடியபடி இருக்கின்றன. இந்த தேடலில் உலகம் முழுவதிலும் இருக்கும் மழைக் காடு மூலிகைகளும் அடங்கும். இதில் முக்கியமானது நம்மூர் மூலிகைகள். பல நூறு ஆண்டுகளாக மூலிகைகளை நாம் மருத்துவத்திற்கு பயன்படுத்திவருவதால் இயல்பாகவே நம்மிடம் மூலிகைகளின் மருத்து குணங்களைப் பற்றிய அறிவுக் கேட்பார் அற்று கொட்டிக் கிடக்கிறது. இந்த மூலிகை மூலக் கூறுகளையே இத்தகைய மருந்து நிறுவனங்கள் குறிவைக்கின்றன.

நம்மூர் மூலிகைகளைக் குறித்த அறிவு நவீன மருந்து தயாரிப்பு முறைகளுக்கு தெரியாது என்பதால் அவைகள் உள்ளூர் மக்களையே நம்பியிருக்கின்றன. சில நூறு ரூபாய்கள் செலவு செய்தால் போதுமானது. மூலிகைகளின் மூலக் கூறுகள் அவர்களின் கைகளில்.அப்புறம் என்ன இந்த மூலிகைகளின் மூலக் கூறுகளை தங்களுடைய R&D ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்று பாவனை செய்து உயிர் கொல்லி நோய் எதாவது ஒன்றிட்கு மருந்து தயாரித்துவிட வேண்டியதுதான். நம்மூர் வேலிக் காத்தானோ, குப்பைமேனியோ இரசாயன மருந்தாக மாற்றப்பட்டு அதையும் நாம் சில நூறு ரூபாய்கள் செலவு செய்து வாங்கும் நிலையும் வெகுதொலைவில் இல்லை.

இதுவரை மருந்து தயாரிப்பு நிலையைப் பார்த்தோம் இனி தயாரான மருந்துகளை நிறுவனங்கள் எப்படி விற்பனை செய்கின்றன என்றுப் பார்ப்போம். மருந்துகளை விற்க மருந்துவமனைகளும் மருத்துவர்களும் தான் ஒரே வழி என்றுப் பார்த்தோம். இது விற்பனையின் ஒருபகுதி. மற்றொருப் பகுதி மருந்துகளையே உள்ளடக்கியது. ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒரே மருந்தையே நம்பியிருக்க முடியாது. அதேபோல தான் தயாரித்துக் கொண்டிருக்கும் மருந்துகளையும் கைவிட்டுவிட முடியாது. ஆனால் அதைவிட மிக மிக முக்கியம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்பட்டுவிடுமே அதனால்.

பணத்திற்கு ஆசைப்பட்டு அவசரகதியில் சந்தைப்படுத்தப்படும் மருந்துகள் பக்க விளைவுகளைக் கொண்டு தானிருக்கும். ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தீர்வு தருவதாக சொல்லப்படும் எல்லா இரசாயன மருந்துகளும் தன்னளவில் பக்க விளைவுகளை உள்ளடக்கித்தான் இருக்கும். பக்க விளைவுகள் இல்லாத இரசாயன மருந்து ஒன்று என்று இந்த உலகில் இல்லவே இல்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்து என்று எந்த இரசாயன மருந்தாவது விளம்பரப்படுத்தப் பட்டால் அது நிச்சயம் திறந்திருக்கும்போதே நம் கண்களில் மண்ணை தூவுவதற்கு சமம்.

மருந்தின் பக்கவிளைவுகளை சொன்னால் அடி முட்டாளான ஏமாளியும் கூட மருந்தை வாங்கமாட்டான். இங்கேதான் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதகமான விசயமே சாதகமாகவும் அமைந்துவிடுகிறது. மருந்து நிறுவனங்களால் மருந்துகளை மருத்துவர்கள் மூலம்தானே விற்பனை செய்ய முடியும் அதனால் மருத்துவர்களிடம் மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றிச் சொன்னால் போதுமானது. அதிலும் மருந்தின் எல்லா பக்கவிளைவுகளையும் மருத்துவர்களிடம் சொல்ல நிறுவனங்கள் என்ன நம்மைப் போன்ற ஏமாளிகளா! உதாரணமாக ஒரு மருந்திற்கு பத்து பக்க விளைவுகள் இருக்கிறது என்றால் அதில் மூன்றுக் கூட முழுதாக மருத்துவர்களிடம் தெரிவிக்கப்படாது.

நோய்களுக்கு மருந்து பரிந்துரைக்கும் மருத்துவர் என்றைக்காவது தான் பரிந்துரைக்கும் மருந்தின் பக்க விளைவுகளைக் குறித்து நோயாளிகளிடம் அறிவுறுத்தி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் எழுதும் சுர மாத்திரை ஒருவேளை உன்னுடைய உடல் உறுப்புகளை பின்னாளில் பாதித்தாலும் பாதிக்கலாம் என்று சொல்லியபடியே மருந்து எழுதி நீங்கள் பார்த்ததுண்டா? இங்கே ஏமாளிகள் நோயாளிகளே. தாங்கள் முழுங்கும் மருந்து தங்களின்  நோய்களை குணப்படுத்திவிடும் என்று ஏமாறுவதற்கு தங்களின் உயிரையும் பணயம் வைப்பதோடு உடல் நோக கடினமாக உழைத்த கை காசையும் இழக்கிறார்கள்.

இதில் மேலும் கொடுமை நோயாளிகள் முழுங்கும் மருந்துகளில் 50% அவர்களுடைய நோய்களுக்கு எவ்வித தீர்வையும் தருவதில்லை. அந்த மருந்துகளை காசு கொடுத்து வாங்கி பக்க விளைவுகளை தங்களின் உடலில் ஏற்றிக் கொள்வதுதான் மிச்சம். பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்துகளின் உதவி இல்லாமல் placebo நிலையிலேயே நோய்க்கான தீர்வு கிடைத்துவிடும். நோய்கான மருந்தை சாப்பிட்டுவிட்டோம் அதனால் நோய் தீர்ந்துவிடும் என்கிற உளவியல் சில நோயாளிகளின் நோய்களை தீர்த்துவிடும். இந்த வகையான நோய் தீர்வு முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது இதில் எந்த வகையிலும் மருந்தின் பங்களிப்பு இருக்காது. இந்த நிலையை placebo என்பார்கள்.

நல்லவனுக்கு நல்லவன் இருக்கிறானோ இல்லையோ வில்லனுக்கு வில்லன் இருக்கத்தானே செய்வான். மருந்து தயாரிப்பும் இதற்கு விதி விலக்கு கிடையாது. நோய்க்கு தீர்வைத் தருகிறதோ இல்லையோ பக்க விளைவுகளைத் தரும் இரசாயன மருந்துகள் பணத்தை கொட்டுவதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? குறுக்கு வழியில் பணம் தேட நினைப்பவர்கள்! போலி மருந்துகளும் சந்தையில் சக்கைப்போடு போடுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்து தயாரிப்பு இரகசியங்களையும் நிறுவனச் சின்னங்களையும் (logo) பேக்கிங் முறைகளையும் அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் முக்கிய நபர்கள் மூலம் பின்பக்க வழியாகப் பெற்றுக்கொண்டு அச்சு அசலாக பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்துகளைப் போலவே போலி மருந்துகளை தயாரித்து சந்தையில் காசுபார்ப்பதும் நடக்கிறது.

போலி மருந்துகள் ஒருபுறம் மக்களைப் போட்டு தாக்குகின்றன என்றால் பல பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து தயாரிப்பு முறைகளேக் கூட சில வேலைகளில் கேட்டிற்கு மேல் கேட்டை கொண்டு வருவதுண்டு. இதற்கு ஒரு உதாரணம், இரத்த அழுத்தத்திற்கான மருந்து batch ஓடி முடிந்த இயந்திரங்களில் முறையான பாதுகாப்பு சுத்திகரிப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் சர்க்கரை நோய்க்கான மருந்து batch-யை ஒட்டுவதன் மூலம் சர்க்கரை நோய்க்கான மருந்தின் மூலக் கூறு கெட்டுப்போய்விடும். பிறகென்ன அத்தகைய மருந்துகளை விழுங்கும் நோயாளிகளுக்கு பக்க விளைவுகளுக்கு மேல் பக்கவிளைவு இலவசமாக கிடைக்கும்.

பக்க விளைவுகள் ஒருபுறம், போலி மருந்துவகள் ஒருபுறம், தயாரிப்பு முறைகளில் ஏற்படும் கோளாறுகள் ஒருபுறம் என்றால் ஒருக் குறிப்பிட்ட நோய்கான மருந்தை மற்ற நோய்களுக்குமான தீர்வாக சொல்லி சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்வது அடுத்த மோசடி. உதாரணமாக டைபாய்ட் போன்ற நோய்களுக்கான மருந்தை கண் தொற்றுக்கும், சீருநீர் தொற்றுக்கும் பரிந்துரைப்பது. இது நோயாளியின் உடலில் பாராதூரமான பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும். சில வேலைகளில் உயிருக்கும் உலை வைத்துவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இதுதான் நிலை என்றால் நம் நாட்டின் நிலையை ஒருவர் சொல்லித்தான் புரிந்து கொள்ளவேண்டுமா என்ன! டைபாய்ட் நோயாளியாகத் தேடித்தேடி பிடித்து தங்கள் மருந்துகளை விற்றால் கம்பெனிக்கு கட்டுப்படியாகுமா என்ன! சந்தையில் சூடாக டிரென்ட் அடித்து கொண்டிருக்கும் நோய்களுக்கும் போகிறபோக்கில் அடித்துவிட்டால்தானே பணம் சம்பாதிக்க முடியும். வேறு ஒரு நோய்கான மருந்தை தங்களுடைய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறோம் என்று தெரியாமலேயே சில மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைப்பது உச்சக்கட்ட கொடுமை.

அடுத்த மோசடி ஒரு நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பில்லாதது என்று தடை செய்யப்பட்ட மருந்துகளை மற்றொரு நாட்டில் கொண்டுபோய் விற்பனை செய்வது. மற்ற மோசடிகளைப் போல இந்த மோசடிக்கும் பெரும்அளவில் பாதிப்புக்குள்ளாவது மூன்றாம் உலக நாடுகள். நம் நாட்டையும் சேர்த்துதான். பொதுவாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் வெளிநாடுகளில் தடைச் செய்யப்பட்ட மருந்துகளை சோதனை செய்யும் உள்கட்டுமான வசதிகள் கிடையாது. அதைவிட முக்கியம் ஊழல் பெருத்துக் கிடக்கும் காரணத்தால் இத்தகைய மருந்துகள் நம் நாட்டிற்குள் வருவதை தடுக்கவும் முடியாது. கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விட்டால் தடை செய்யப்பட்ட மருந்துகள்  இங்கே சக்கைப்போடு போட முடியும்.

இதற்கு சில உதாரணங்கள், Phenylpropanolamine, Metamizole (Analgin), Oxyphenbutazone, Nimesulide, Cisapride, Furazolidone, Nitrofurazone, Cerivastatin, Phenolphthalein, Quinodochlor, Tegaserod, Human Placental extract, Thioridazine மற்றும் Pergolide. இவைகள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவைகள் அனைத்தும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டவைகள். இந்த மருந்துகள் படுபயங்கரமான பக்க விளைவுகளை உண்டாக்க கூடியவைகள் என்று நிருபனமானதின் காரணமாகவே இவைகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நிருபனமானது என்றால் பல நூறு நோயாளிகள்  பாதிக்கப்பட்டு அது குறித்து செய்த விசாரனையின் மூலம் நிருபிக்கப்பட்டது. ஆனால் இவைகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதில் கொடுமையோ கொடுமை இந்த வகை மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லாமல் சில நோயாளிகள் இந்த மருந்துகளின் விபரீத விளைவு தெரியாமல் over-the-counter முறையில் நேரடியாக மருந்து கடைகளிலேயே வாங்கிப் பயன்படுத்துவதுதான்.

மனித உயிருக்கு உலைவைக்க கூடியது என்று தெரிந்தே சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இத்தகைய மருந்துகளை விற்கின்றன என்றால் அவைகளின் சமூக பார்வையை என்னவென்பது. ஆனால் இத்தகைய மருந்து நிறுவனங்கள் தங்களுடைய மருந்துகளைப் பற்றி வானளவாப் புகழ்ந்து விளம்பரம் செய்வதற்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கின்றன. பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பங்கு லஞ்ச ஊழலுக்கும் போலி விளம்பரங்களுக்குமே செலவு செய்யப்படுகின்றன. தங்களுடைய லாபம் குறித்துக் கணக்கு காட்டுவதை இராணுவ இரகசியம் போல பாதுகாக்கின்றன. இப்படி ஈட்டப்படும் லாபம் “black box” என்று அழைக்கப்படுவதிற்குள் அடக்கப்பட்டுவிடுகிறது.

இந்த “black box” குறித்த எந்த மருந்து தயாரிப்பு நிறுவனமும் வாய் திறக்காது. அது இராணுவ இரகசியத்தை விடவும் முக்கியமானதுப் போல் இந்த நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகிறது. கருப்பு கல்லாப் பெட்டியின் வருமானம் குறைந்து விடாமலிருக்க மூன்றாம் உலக நாடுகளில் seasonal நோய்களும் பரப்பிவிடப்படும். இவைகளுக்கும் உதாரணம் சொல்லிவிட வேண்டும்தானே. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா, பெயரே தெரியாத விசக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் இப்படி பல நோய்கள் கருப்பு பெட்டியின் பண வரவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும். இதில் கொடுமை இத்தகைய நோய்களுக்கு மருந்து என்று விற்கப்படும் எத்தகைய இரசாயன மருந்தும் இவைகளுக்கு முழுமையான தீர்வைத் தருவதில்லை. இந்த மருந்துகள் செய்யும் காரியமெல்லாம் பல மருந்து நிறுவனங்களின் கருப்பு பெட்டியை நிறப்புவதுதான். நோய்கான கிருமிகளையும் பரப்பிவிட்டு அதற்கான மருந்துகளையும் விற்பதைத்தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பதோ!

நம்முடைய பாரம்பரிய மருந்துவ முறையை உதாசீணப் படுத்தி நமக்கு பல பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மோசடித்தனம் பரிசாக கிடைப்பது வரவேற்கத்தக்கதுதானே!

உயிர்கள் விற்பனைக்கு: மருந்து நிறுவனங்களின் கொள்ளை – பாகம் 3

*

*

Top