மாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம்

– பேராசிரியா் கு.மிகுந்தன்

எமது பிரதேசத்து வளங்களுள் மனிதவளத்தை மேலும் நாம் வினைத்திறனாக பயன்படுத்தும் காலத்திற்குள் பரிணமிக்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக தொழிற்றுறையின் வளர்ச்சி இங்கே முழுமையாக தேவைப்படுகின்றது. அதிலும் எமது மக்களை உள்வாங்கிய தொழிற்றுறையின் வளர்ச்சியினையே நாம் இதில் முக்கியத்துவப்படுத்த வேண்டும். அரச தொழில் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் பல உறவுகளை நாம் அன்றாடம் காணலாம். பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இந்த தொழில்வாய்ப்பில் தங்கியிருக்கின்றது. தொழில்தருநர்கள் அரிதாக இருக்கும் போது தனியார் தொழில்வாய்ப்புக்கள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் அனைவரும் அரச தொழிலாக தேடியலைந்து கொண்டிருப்பதனாலும், அது அவர்களுக்கான ஒரு சமூகபெறுமதியையும் கௌரவத்தையும் வழங்கும் என்னும் காரணத்தாலும் அரச தொழில் தேடலிலிருந்து தனியார் தொழிற்றுறைக்கு மக்கள் பெரிதாக உள்வாங்கப்படுவதில்லை. மாறாக தற்போதய சூழலில் தனியார் தொழிற்றுறைக்குள்ளும் சிறிது சிறிதாக மக்கள் குறிப்பாக இளையவர்கள் உள்ளீர்க்கப்பட முனைந்திருப்பது தற்போதைக்கு நல்லதொரு செய்தி. இதனை இன்னும் நாம் பலமானதாக தனியார் தொழிற்றுறையின் வளர்ச்சியை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்த்து பார்க்கவேண்டும். தனியார் தொழிற்றுறையின் வளர்ச்சிக்கான அத்திபாரம் பலமானதாக இடப்படவேண்டிய காலகட்டம் இது.

வடபுலத்தில் நடைபெறும் போரின் பின்னரான பல நிகழ்வுகளில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் குறிப்பாக மாதர்சங்கங்களை வலுவூட்டுவதான செயற்பாடுகள் முனைப்பு பெறுவதனை காணலாம். போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பாக கணவனை இழந்தவர்கள் அதிலும் அவர்களே தலைமை தாங்கும் குடும்பங்கள், கல்வியை இழந்தவர்கள், சிறுவயதில் குடும்பச்சுமையை தாங்கவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்கள். பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்களுக்குள் உள்வாங்கப்படுபவர்கள், அங்கவீனர்கள், இன்னும் மாற்றுதிறனாளிகள் என பலரை உள்ளடக்கியதாக இருப்பதனை காணலாம். இவற்றுக்கெல்லாம் ஒருவகையில் தீர்வினை காண்பதற்காக கிராமங்கள் தோறும் மாதர்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதர்சங்கங்கள் சிறப்பாக இயங்குவதனை காண முடிகின்றது. மாதர்சங்கங்கள் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகின்ற ஒர் எளிமையாக கட்டமைப்பாக இருக்கின்ற போதிலும் அதனை வலுவூட்டும் செயற்பாடுகள் இன்னும் முனைப்பாக நடைபெறுதல் அவசியமாகும். இதற்காக பலதரப்பட்ட வலுவூட்டும் நிறுவனங்கள் செயற்பட்டுவருவதும் நல்ல செய்தியே. குறிப்பாக பெண்களை தொழில்தருநர்களாக மாற்றும் செயன்முறை வரவேற்கத்தக்கது.

இது போன்றதொரு செயற்பாடாக மாங்குளம் வடக்கு மாதர் கிராமிய அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாங்குளத்தில் கண்டிவீதியில் ‘வன்னியின் சுவை உணவகம்’ (Taste of Vanni Restaurant) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்த்த போது அறிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது. கிட்டத்தட்ட 144 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் 21 பெண்கள் தமது முதலை இட்டு அங்கே சிறந்த உணவுகளைத் தயாரித்து சுடச்சுட வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அமைப்புக்கு USAID இனது உதவிகிடைக்கப் பெற்று கட்டடவசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றது. இது ஒரு முன்மாதிரியான திட்டமாக கருதலாம். பெண்கள் தமது கைகளால் சுத்தமானதாக தயாரித்து கொடுக்கும் உணவுவகைகள் சுவையானதாகவும் அனைவரும் விரும்பியுண்ணும் உணவுகளாகவும் உள்ளதனை நேரில் சுவைத்தும் பார்த்தும் அறிந்து கொண்டோம். இவ்வழித்தடத்தில் பயணிப்பவர்கள் இவ்வாறான சுவையகங்களுக்கு வருகை தந்து சுவையான உணவை பெற்றுக் கொள்வதோடு இவர்களின் இந்த முயற்சிக்கும் ஆக்கபூர்வமாக நாமும் பங்களிக்கலாம். இந்த ஊக்குவிப்பினை எம்மினிய உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இவ்வாறான சுவை உணவகங்கள் வடபகுதியெங்கும் உருவாக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண பெண்கள் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்ச்சிப்பட்டறையும் அதனூடாக பயன்பெற்று முன்னேற்றங்கண்ட பெண்களைப் பற்றியும் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன். இதில் கலந்து பயன்பெற்ற பெண்தொழில் முயற்சியாளர்கள் சிலர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பெண்தொழில் முயற்சியாளர்களுடனும் தொழில் வல்லுநர்களுடனும் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். அவ்வாறே இந்திய தேசத்திலிருந்து சில பெண்தொழில் முயற்சியாளர்களும் பயிற்சியாளர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 20 பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் சுயதொழில் முயற்சி என்ற வகையில் செயற்பட்ட பெண்கள் சிலர் நிறுவனமயப்படுதப்பட்டிருந்த நிலைக்கு தம்மை தயார் செய்துள்ளனர். இதனோர் அங்கமாக 15 – 16 ஒக்டோபர் 2015இல் இவர்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவும் அவர்களிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவதற்குமென இரு நாட்கண்காட்சி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பலரும் தமது பொருட்களை விற்பனை செய்ததுடன் சிறந்த உற்பத்தி பொருட்களுக்கான விருதையும் பெற்றிருந்தனர். இங்கே இருநாடுகளுக்குமிடையிலான தொடர்பை இந்நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கியிருப்பதும் இதனை மேலும் விருத்தியடையவும் வழிசெய்திருக்கின்றனர். இம்மாதிரியான திட்டங்கள் பெண்களின் தொழில்முயற்சியை மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருக்கின்றது.

மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையான செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தல் சிறந்தது. விசுவமடுவிலுள்ள மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயற்பாடுகளும் இங்கே முன்னுதாரணத்திற்குரியது. போரினால் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது கணவனை இழந்த நிலையில் அங்குள்ள மாதர் அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராகி கிடைத்த ஒருபகுதி நிதியை பெண்கள் அனைவருக்கும் சிறுகடனாக (75,000 இலிருந்து 100,000 வரை) கொடுத்து அவர்களின் தொழில்முயற்சிக்கு ஊக்கம் கொடுத்ததுடன் 100 சதவீதம் அக்கடன்கள் மீளளிக்கப்பட்டு பின்னர் அதிகரித்த கடனை வழங்கியிருக்கின்றார். இத்தகைய பெண்களின் தலைமைத்துவத்தை மெச்சவே வேண்டும். இதற்கு பலரும் உறுதுணையாயிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

குடும்பங்களில், சமூகத்தில் மகளிருக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும். ஆனாலும் ஒரு சிலபெண்கள் மாத்திரம் தம்மை உயர்த்திச்செல்வதையும் மற்றையவருக்கான வாய்ப்புக்களை மழுங்கடிப்பதையும் காணலாம். இதனைத் தவிர்த்து அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் கிடைக்குமிடத்து அனைவரினதும் ஆளுமையும் ஆற்றலும் வெளித்தெரியும். எமது பிரதேசத்தில் இதற்கான வாய்ப்புக்களை நாம் இன்னும் எதிர்பார்க்கலாம். பெண்களுக்கான கல்வியும், தொழிற்றுறையும் மேன்மையடையும் போது அங்கே குடும்ப பிரச்சனைகள் குறைந்து, பெண்களுக்கான பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். இதனை எமது சமூகம் நிறையவே எதிர்பார்த்திருக்கின்றது.

*

*

Top