யாழ் ஆயரின் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் இரண்டு இனங்களும் அன்புறவில் இணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு புதிய வாழ்வைத் தொடங்க நல்லெண்ண அரசானது இக்காலத்தில் முழுமையான செயற்பட வேண்டுமென அன்பு அழைப்பு விடுக்கின்றோம் என யாழ் ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயரின் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளாவது,

உலகக் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து மீண்டும் ஒரு முறை – இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் – என்ற லூக்கா நற்செய்தியாளரின் வார்த்தைகளைக் கொண்டாடும் கிறீஸது பிறப்பின் பெருவிழாக்காலம் இது. முதலில் நன்மனது கொண்ட எல்லா மக்களுக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் ஏன்ற அந்த அறிவிப்பானது இன்னும் பல மகிழ்வின் அறிவிப்புக்களை எம்மக்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதே எமது வாழ்த்தும் வேண்டுதலுமாகும்.

எமது முதலாவது கிறிஸ்மஸ் செய்தியை வெளியிடும் போது பல எண்ணங்கள் மனதிற் தோன்றுகின்றன. மூன்று தசாப்த கால யுத்தம முடிந்து பல விடயங்;கள் கவனத்தில் எடுக்கப்பட்டு சீர்செய்யப்பட்டு விட்டாலும் – முதலாவதாகச் சீர்செய்யப்பட்டிருக்க வேண்டிய – மனித உணர்வையும் மனித வாழ்வையும் தொடுகின்ற – சில அடிப்படை விடயங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை என்பது வேதனை தருவதாகவுள்ளது. மீள்குடியேற்றம் – அரசியற் கைதிகளின் துரித விடுலை – புனர்வாழ்வு பெற்றவர்களின் பாதுகாப்பு – அவர்களுக்கான வாழ்வாதாரம் போன்றன முன்னுரிமை பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து யாப்பினால் உறுதி செய்யப்படுகின்ற நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு தேவையாகின்றது.

இவை பற்றி இலங்கை ஜனாதிபதியை சில தினங்களுக்கு முன்னர் யாழ் ஆயர் இல்லத்திற் சந்தித்த போதும் குறிப்பிட்டிருந்தோம். ஆறுதலாக அவை பற்றித் தெளிவாக அவருக்குத் தெரியப்படுத்தி விரைவான நடவடிக்கையை எடுக்கத் தூண்டுவோம்.

பிரான்சீஸ் பாப்பரசர் இரக்கத்தின் ஆண்டை அறிவித்துள்ளார். இந்த இரக்கத்தின் ஆண்டானது பாவமன்னிப்புப் பெற்று ஆண்டவரோடும் அயலவரோடும் ஒப்புரவாகும் காலமாகும். இலங்கை வாழ் இரண்டு இனங்களும் அன்புறவில் இணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு புதிய வாழ்வைத் தொடங்க நல்லெண்ண அரசானது இக்காலத்தில் முழுமையான செயற்பட வேண்டுமென அன்பு அழைப்பு விடுக்கிறோம்.

புதிய ஆண்டு நம்பிக்கையின் ஆண்டாக – நல்லெண்ண அரசின் செயற்பாடுகளை வேகப்படுத்தும் ஆண்டாக – அனைவருக்கும் இறை இயேசுவின் அருளையும் ஆசீரையும் அள்ளி வழங்கும் ஆண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

Related posts

*

*

Top