இவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு

– ச.லலீசன்

தமிழார்வலர்கள் தமிழன்னைக்காக வெ வ்வேறு வகையான தமிழ்ப்பணிகளை ஆற்றி வருகின்றனர். மறைமலை அடிகள் நிறுவிய தனித்தமிழ் இயக்கச் செல்வாக்கால் தமிழுலகிற்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் நாட்காட்டியை வருடா வருடம் வெளியிட்டு தமிழ்ப்பணி புரிகின்றார் நா.வை.மகேந்திரராசா என்ற மின் பொறியியலாளர். இல 84, ஜெயந்தி நகர், கிளிநொச்சி என்ற முகவரியைத் தனது சொந்த முகவரியாகக் கொண்ட இவர் தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தனது பெயரை குமரி வேந்தன் எனவும் தனது ஊரை வெற்றிநகர் எனவும் அடையாளப்படுத்திப் பயன்படுத்துகின்றார்.

மொழி, பண்பாடு மீட்பு, காப்பு, வளர்ச்சி என்பவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு குமரித்தமிழ்ப்பணி மன்றம் என்ற அமைப்பையும் நிறுவிச் செயற்படுத்துகின்றார். இந்த அமைப்பின் ஊடாகத் தூய தமிழ் மொழிப் பிரயோகத்தை வலியுறுத்தும் வண்ணமும் மொழி, இன அடையாளங்களை மீட்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் நூல்களை வெளியிடுகின்றார். பெய்யெனப் பெய்யும் மழை, ஒருங்கிருக்கை நெறி (யோகாசன நெறி), தமிழியற் சான்றோர், மதுரை எரிகின்றது, அகனின் விழிப்புக் கதைகள், உலக உயர்தனிச் செம்மொழிச் செந்தமிழ், தமிழர் மெய்யியற் கோட்பாடு, தமிழர் இலக்கிய இலக்கணம் (ஓர் அறிமுகம்) என எட்டு நூல்கள் இது வரை வெளிவந்துள்ளன.

அடுத்த ஆண்டு முதல் தமிழர் கலையான யோகாசனத்தைக் குமரித்தமிழ்ப்பணி மன்றத்தின் ஊடாக கிளிநொச்சியில் போதிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார் என அறிய முடிகின்றது. தமிழர் ஆண்டு தைப்பொங்கல் நாளிலேயே மலர்கின்றது என்பது தனித்தமிழ் ஆர்வலர்களின் துணிபு. இது 2047 ஆவது திருவள்ளுவர் ஆண்டு ஆகும். தமிழரின் முதலாவது மாதம் சுறவம் இதனையே தை என்கின்றோம். இதே போல் அடுத்துவரும் மாதங்கள் கும்பம் (மாசி), மீனம் (பங்குனி), மேழம் (சித்திரை), விடை (வைகாசி), ஆடவை (ஆனி), கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாதி), துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை), சிலை (மார்கழி) என அமைகின்றன.

தமிழ் எண்கள் க (1), உ(2) … என்றவாறு நாட்காட்டியில் அமைந்துள்ளன. அமாவாசையைக் குறிக்க காருவா என்ற தமிழ்ச்சொல்லும் பூரணையைக் குறிக்க வெள்ளுவா என்ற தமிழ்ச்சொல்லும் கையாளப்பட்டுள்ளன. நாட்களின் பெயர்களைக் குறிப்பதிலும் புதன்கிழமையை அறிவன் என்றும் சனியைக் காரி என்றும் தமிழ்பெயர்களால் சுட்டியுள்ளனர்.

தமிழின் இருப்பிற்காக வாழ்ந்த பெரியோர்களது வண்ணப்படங்கள் மற்றும் நாம்; அன்றாடம் பயன்படுத்தும் வடசொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் என்பன ஆங்காங்கே குறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஆகாய விமானத்தை வானூர்தி என்றும், ஆகாயத்தை வான் அல்லது விண் என்றும், ஆதரவு என்பதை ஒத்துழைப்பு என்றும் தம்பதிகளை இணையர் என்றும் தொகுப்பாசிரியர் குறித்துக் காட்டியுள்ளார்.

தமிழோடு தொடர்புடைய முக்கிய நாட்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழர் அரசியலில் வரலாறாகிவிட்ட முக்கிய நாட்களையும் இளைய சந்ததி அறிய வேண்டும் என்பதற்காக குமரிவேந்தன் உள்ளடக்கியுள்ளார்.

தமிழார்வத்தினால் வெளியீடு செய்யப்படும் இந்நாட்காட்டி வெளியீட்டினால் வருடாவருடம் பல்லாயிரக்கணக்கான உரூபாக்களை இவர் தன் கைப்பொருள் இழப்பாகச் சந்திப்பதும் தவிர்க்கவியலாததாகியுள்ளது. தமிழார்வம் ஒன்றே இம்முயற்சிக்கான அடிப்படையாகக் குமரி வேந்தனின் பின்னால் உரமாகவுள்ளது.

தொடர்பு :
நா.வை குமரிவேந்தன்
முகவரி : இல.84, யெயந்தி நகர், கிளிநொச்சி
தொலைபேசி இல : 077 620 3788

விலை : உரூபா 110.00

ச.லலீசன்,
பிரதி முதல்வர்,
கோப்பாய் ஆசிரிய கலாசாலை

*

*

Top