வலி.வடக்கில் 701.5 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள 701.5 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வேண்டுகோளுக்கிணங்க இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் 2015 டிசம்பர் மாதம் 29ம் திகதி தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 468.5 ஏக்கர் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 233 ஏக்கர் காணிகளும் மீள்குடியேற்றப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்டன. மூன்று தசாப்த கால யுத்தத்தின் விளைவாக உள்ளகரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் (IDPs) உருவாகியதுடன், பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இராணுவத்தினர் வசம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலவிய யுத்தம் 2009 மே மாதத்தில் முடிவுற்றவுடன் காணிகளை ஆரம்ப உரிமையாளர்களுக்கு விடுவிப்பதில் மிகச் சிறியளவு முன்னேற்றமே காணப்பட்டது.

தமது காணிகள் இன்னும் மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்படாமையால் யாழ்ப்பாணத்தில் 12,000 குடும்பங்கள் அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்களுடனும் வசித்து வருகின்றனர். படையினர் தம்வசம் வைத்துக்கொண்ட காணிகளில் பெரும்பகுதியானவை தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ளன. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்துத்தருமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கும் 2015 டிசம்பர் மாதம் 07 ஆந் திகதி அமைச்சரவை விஞ்ஞாபனமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேசன்துறை தெற்கு, பளைவீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் 213.5 ஏக்கர் காணிகளும், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் 255 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்ட காணிகளில் அடங்கும். தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மொத்தமாக 468.5 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வளலாயில் இராணுவத்தினர் வசமிருந்த 233 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் மொத்தப் பரப்பளவு 701.5 ஏக்கர்களாகும்.

கோப்பாய் பகுதியில் 100 வீதம் தனியார் காணிகள் மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. புனர்வாழ்வளிப்பு அமைச்சின் அதிகாரிகள், இராணுவத்தளபதி, மாவட்டச் செயலாளர், மாகாண சபையின் ஆளுநர் பணிமனை மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. தெல்லிப்பளை, கோப்பாய் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே 701.5 ஏக்கர் பரப்பளவான காணிகளை 2015 டிசம்பர் மாதம் 29 அன்று கையேற்று வேலிகளை அகற்றும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இதன் மூலம் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றக்கூடியதாக இருக்கும் என்பதுடன், விவசாய நடவடிக்கைகளின் ஊடாக வாழ்வாதார செயற்பாடுகள் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியதாகவும் அமையும் என்பது இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு காணிகள் விடுவிக்கப்படுவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கான நீடித்திருக்கக்கூடிய ஒரு தீர்வும் நிலைபேறான சமாதானமும் ஏற்படுவதை உறுதிசெய் வதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உபகரணத் தொகுதிகளுக்கும் உணவுப்பொதிகளுக்கும் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் மீள்குடியேற்றக் கொடுப்பனவொன்று வழங்கப்படுகிறது. மேலும், 65,000 வீடுகளை அமைப்பதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன்கீழ், மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார்.

சூரியசக்தி மின்சாரம், நீர், துப்புரவேற்பாட்டு வசதிகள் மற்றும் வீட்டு உபகரணங்களும் இவ்வீடுகளில் அடங்கியிருக்கும். அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 701.5 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, 2015 ஆம் ஆண்டில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் காணிகளும், திருகோணமலை சம்பூரில் 1000 ஏக்கர் காணிகளும் ஏனைய சிறிய காணித்துண்டுகளும் உள்ளக இடம்பெயர்ந்தவர்களையும்; அப்பகுதிகளில் முன்னர் வாழ்ந்த மீளத் திரும்பி வருவோரையும் மீள்குடியேற்றுவதற்கு ஏற்கனவே அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இம்முன்னெடுப்பானது நத்தார், புதுவருடம், தைப்பொங்கல் ஆகிய பண்டிகைகளுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீடித்திருக்கக்கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

Related posts

*

*

Top