நன்றி மறவாமைப் பண்பின் உயர் பேணுகை தைப்பொங்கல் திருநாள்

– எஸ்.ரி.குமரன்

தமிழர்களின் நாட்காட்டியின்படி தை மாதம் முதல் நாள் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகின்றது. தை மாதம் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் மாதமாகவும் அமைகின்றது.

தமது உழைப்பக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.

தைத்திருநாள் உழவர்களின் நன்றிக்கடன் தீர்க்கும் நாளாக அமைகின்றது. உணவு உற்பத்திக்கும் உயிரினங்களின் வளர்ச்சிக்கும் தேவையான வெப்பம் வெளிச்சம் மழை என்பவற்றினை சூரியன் வழங்குகின்றான். ஆதலினால் சூரியனுக்கு நன்றிக்கடனினை உழவர்கள் செலுத்துகின்றார்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆன்றோர்களின் வாக்காகும். தை பிறந்து விடால் எல்லோர் மனதிலும் மகிழ்வு ஏற்ப்படும். நல்ல விடயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்ப்படும். தைத்திருமகள் தங்களது வாழ்வை புத்தொளி வீசச் செய்வாள் என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

தை மாத காலப்பகுதியில் சூரிய பகவான் தனு இராசியிலிருந்த மகர இராசிக்கு பிரவேசிக்கின்றான். இக்காலம் உத்தராயண காலம் எனப்படும். இது மகர சங்கிராந்தி எனப்படுகின்றது. இத்தினத்தினையே நாம் தைத்திருநாளாக கொள்கின்றோம்.

உழவன் தனது முதற்பயனை கதிரவனுக்குப்படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இச் செயற்ப்பாடு தமிழர்களால் குறிப்பாக தொன்று தொட்டு வழங்கி வந்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையானது கடவுள் வழிபாட்டினையும் சைவத்தமிழ் மக்களின் மரபு வழி விழுமியங்களான நன்றி மறவாமை பகிர்ந்துன்னல் அன்பு அறம் அகிம்சை புனிதம் பேணுதல் முதலான பண்புகளினை வளர்க்கும் நிகழ்வாக அமைகின்றது.

இத்தகு சிறப்பு மிக்க தைப்பொங்கல் பண்டிகையானது. மனித வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகின்றது. இந்நாளில் தம்மையம் தம்முடைய சூழலினையும் புனிதப்படுத்தி நன்றியுணர்வோடு இறைவனை வழிபட்டு பெற்றோர் பெரியோருடைய ஆசியினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகையானது தமிழ்ர்களுடைய மனங்களில் குதூகலம் நம்பிக்;கை புத்துணர்வை வழங்கும் திருநாளாக விளங்குகின்றது. இந்நாளில் நாம் அனைவரும் நன்றியுணர்வு உள்ளவர்களாகவும் பகிர்ந்துணணும் பண்புள்ளவர்களாகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் எஸ்.ரி.குமரன்
உப செயலாளர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்

Related posts

*

*

Top