குதிரை இல்லாத ராஜகுமாரன்

– ராஜாஜி ராஜகோபாலன்

அந்த இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மற்றேல்லா ரயில்களையும் போலவே வலு நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது. அது எப்போ ஊருக்குப் போய்ச்சேரும் என்பதைப்பற்றி அக்கறைகொள்ள வேண்டியதில்லை, ஓடிக்கொண்டிருந்தாலே போதும் என்று எண்ணிக்கொண்டவர்கள்போல் பயணிகள் அத்தனைபேரும் மனிதப் பொதிகளாய்  உள்ளே அடைபட்டுக் கிடந்தனர். அதன் கடைசிப் பெட்டியின் வாசலோரமாகவிருந்த நடைபாதையில் பழைய பத்திரிகைகளை விரித்துவிட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்த பலபேரில் அவனும் ஒருவனாகப் படுத்திருந்தான்.

இரண்டுபேர் மட்டும் அமரக்கூடிய இருக்கையில் யன்னல் ஓரமாக ஒருக்கழித்திருந்த விஜயா ஆரம்பத்திலிருந்தே அவனைக் கவனித்துவந்தாள். அந்த ரயில் கொழும்பு-கோட்டையிலிருந்து புறப்பட்டபோது நின்றபடி பயணம்செய்து கொண்டிருந்தவர்களில் அவன் ஒருவன்தான் கடைசியில் ஓடிவந்து தொற்றிக்கொண்டான். அதனால் நடைபாதையில் நிற்பதற்குக்கூட அவனுக்கு இடம் கிடைக்காமற்போனது. சிறிது நேரத்தின்பின் கிடைத்த ஒற்றை-ஆள் இடைவெளியில் சுவரோடு சாய்ந்து நின்றுகொண்டான். ரயிலின் ஆட்டத்திற்கேற்ப அசைந்து எப்படி விழுந்துகொள்ளாமல் நிற்பது என்பதை ஒரு கலையாகப் பயின்றவன்போலவும் நிற்பதற்கு இந்த இடமாவது கிடைத்ததேயெனத் திருப்திப்பட்டவன்போலவும் அவன் தோன்றினான். அவனைத் தொடர்ந்து அவதானித்த சிறிதுநேரத்தில் ஒரு குட்டி நித்திரை வந்து அவளை அணைத்தக்கொண்டது.

விஜயா மீண்டும் கண் விழித்தபோது கண்கள் அவனைத் தாமாகவே தேடின. சிச் சீ, இதென்ன பழக்கம்? அவன் யாரோ முன் பின் அறிமுகமில்லாதவன், ஏன்தான் அவனைத் தேடுகிறாய்? பார்க்கப் பாவமாக இருந்தது அதனால்தான் தேடினேன். அதற்காக? பேசாமல் படுத்துக்கொள். இப்படி சீட் மூலையில் இடம் எல்லாருக்கும் கிடைத்துவிடுமா? உனக்கும் நாளைக்கு வீட்டில் அவசர வேலைகள் காத்திருக்கின்றன. நன்றாய் நித்திரைகொண்டு போனால்தானே மற்றவர்கள் பார்க்க லட்சணமாயிருப்பாய். உண்மைதான், ஒத்துக்கொள்கிறேன். அதற்காக நிற்க ஒரு அடிகூட இடமில்லாமல் அவதிப்பட்டவனுக்கு இருக்கையில் வசதியாய் இருப்பவள் இரக்கப்படுவதில் என்ன பிழை இருக்கிறது? ரயிலின் குலுக்கலில் கண்கள் அயர்ந்தபோதும் மனம் அயரவில்லையே. இன்னுமொரு முறை அவனைத் தேடுவோம். இதுதான் கடைசிமுறை. இதுவரை எங்கேயாவதொரு மூலையில் இடம் பிடித்திருப்பான். ஒருமுறை மட்டும் பார்த்துவிட்டு ஒரேயடியாக நித்திரை கொள்ளவேண்டியதுதான்.

ரயிலின் வேகம் கூடக்கூட பெட்டியின் குலுக்கலும் அதிகரித்துக்கொண்டிருந்தது. அது எழுப்பிய தாளத்திற்கேற்ப இருபுறமும் ஆடியாடி நித்திரையானவர்களும், இடைக்கிடை குப்புற விழுந்து உடன் சமாளித்துக்கொண்டு தலை நிமிர்த்தியவர்களும் கூரையை நோக்கி வாயைத் திறந்தபடி உலகை மறந்தவர்களும் தலையை அடுத்தவர் தோளில் சாய்த்துக்கொண்டவர்களும் கண்ணைத் திறந்தபடி நித்திரை செய்யும் கலையைப் பயின்றவர்களும் வாயிலிருந்து வடிவதை ஒழுங்காகப் புறம் கையால் துடைத்துக் கொண்டவர்களுமாகத் தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விஜயா அக்கறையுடன் அவதானித்தாள். அவளுக்கு நேர் முன்னால் இருந்த நடுத்தர வயதுத் தம்பதிகள் ஏற்கனவே ரயிலில் நித்திரைகொண்டு பழக்கப்பட்டவர்கள்போல் அவளுக்குத் தோன்றியது. மனைவி தன்மடியில் சாய்ந்திருக்க அவர் ஏதோ கை நிறையப் பூப்பந்தை வைத்திருப்பவர்போன்ற திருப்தியிலும் ஆழ்ந்த நித்திரையிலும் தன்னை மறந்திருந்தார். நடை பாதையில் கோணலும் மாணலுமாகப் படுத்திருந்தவர்கள் இருக்கைகளில் இருந்தவர்களிலும் பார்க்க உலகை மறந்து நித்திரை கொண்டிருந்தார்கள்போல் அவளுக்குத் தோன்றியது. அவனை மட்டும் கண்ணுக்கு எட்டிய திசையில் காணவில்லை. அவளுக்கு நெஞ்சில் எதுவோ அடைத்தது. போத்தலில் வார்த்துக் கொண்டுவந்த தண்ணீரில் இரு மிடறு குடித்துத் தன் தன் கண்களையும் மனதையும் சீர்படுத்திக்கொண்டு திரும்பவம் தேடினாள். அவனை மட்டும் காணவேயில்லை. இனி எப்படி நித்திரை வரும்? ஏன் வராது, அவன் நினைவை மனதிலிருந்து அகற்றிவிட்டுச் சாய்ந்துகொள் நித்திரை தானாகவே வரும்.

அதோ அங்கே தெரிவது அவனின் நீல நிறக் காற்சட்டையல்லவா? விஜயா தனக்குப் பக்கத்தில் இருந்தவருக்கு முன்னால் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். அவன்தான், அவனேதான் வாசலுக்குப் போகும் நடை பாதையில் சுருண்டு படுத்திருந்தான். கீழே விரித்திருந்த பத்திரிகைத் தாள்கள் தாறுமாறாய்ப் பரவியிருந்தன. கால்களை நீட்ட இடமில்லாததால் மடக்கியபடி அவன் படுத்திருந்தபோதும் அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான் என்பதைஅவனின் ஒரே ஒழுங்கில் அசையும் உடலிலிலிருந்து அறிந்துகொண்டாள். அதுதான் பார்த்துவிட்டாயே, அவனுக்குப் படுக்க ஒரு இடம் கிடைத்துவிட்டது. நல்ல நிம்மதியாகவும் நித்திரைகொள்கிறான். புண்ணியம் செய்தவன். நான் இங்கே சீட்டின் மூலையில் இடம் பிடித்தும் இரவிரவாக விழித்துக்கொண்டிருக்கிறேன். போகட்டும், எனக்குத்தான் தூக்கம் வராவிட்டாலும் தம்மை மறந்து தூங்குபவர்களைக் காணும்போது என் மனதிலும் அமைதி உண்டாகிறது.

ரயில் நடுச் சாமத்தில் அனுராதபுரத்தை அடைந்தபோது இறங்குபவர்கள் ஏற்படுத்திய சலசலப்பில் விஜயாவும் விழித்துக்கொண்டாள். கையில் கட்டிய மணிக்கூட்டைப் பார்த்தபோது மூன்று மணித்தியாலம் நன்றாய் நித்திரை கொண்டுவிட்டேனென்று தனக்குத்தானே கூறிச் சந்தோசப்பட்டுக்கொண்டாள். இன்னும் ஆறு மணித்தியாலமோ அதற்குக் கூடவோ இதேபோல் பயணமாகவேண்டும். ரயிலின் இந்தத் தாலாட்டில் யாருக்குத்தான் நித்திரைவராது, இல்லையென்றால் பழக்கமில்லாத இந்தச் சூழலில் இப்படி நித்திரைகொண்டிருப்பேனா? இன்னொருமுறை இதேபோல் தொடரலாம். இருக்கையின் மூலை முன்னையிலும் பார்க்க இப்போது வசதியாக இருக்கிறது. அட கடவுளே, அவனைத் துப்பரவாக மறந்துபோனேனே. அவன் படுத்திருந்த திக்கை அவள் திரும்பிப் பார்த்தபோது நித்திரை குழப்பப்பட்டு எழும்பி நின்றவனைப் பாவம், வாசலுக்கு வெளியே அவசரம் அவசரமாக இறங்க முயற்சித்துக்கொண்டிருந்த பயணிகள் எல்லாப் பக்கமும் தள்ளியும் இழுத்தும் சென்றனர். அவர்கள் வெளியேறினதால் பெட்டியில் கணிசமான இடங்களும் வெறுமையாகிவிட்டன. அவளுக்கு முன்னாலிருந்த தம்பதிகளும் மேலேயிருந்த தமது பொதிகளை ஒவ்வொன்றாய்க் கையிலெடுத்து இறங்கிச் செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் இடத்தில் ஒன்றிலாவது அவன் வந்து இருக்கமாட்டானாவென்று அவள் மனம் ஆவல் கொண்டது. அவனும் மிக நிதானமாகப் பெட்டியின் உட்புறம் வந்து வெறுமையாய்ப்போன இருக்கைகளை நோட்டம் விட்டான். அப்போதுதான் விஜயாவைக் கண்டான்.

சேலைத் தலைப்பைத் தோள்மேலாய் இழுத்து மூடிக்கொண்டு வட்டமான கரிய விழிகளால் தனது அசைவுகளையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவளை அவன் கண்டதும் அவள் முன்னாலிருந்த வெற்றிடமும் அவனை வாவென்று அழைத்தது. அவன் ஏனோ தடுத்து நிறுத்தப்பட்டவன் போலவும் முன்பின் அறிமுகமில்லாத ஒரு அழகிய இளம் தமிழ் பெண்ணின் முன்னால் இருக்கத் தயங்கியவன்போலவும் சிறிது நேரம் ஒதுங்கி நின்றான். அவனைத் தான் இடைவிடாது கவனிப்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்ட விஜயா யன்னலுக்கு வெளியே மெல்லமாய்ப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

நாளை காலையானதும் அம்மா அங்கே குசினிக்குள் தலைக்குமேல் வேலையாக இருந்தாலும் அடிக்கடி வெளி வாசலையும் எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பாவோ வழக்கம்போல் முற்றத்தைக் கூட்டித் துப்பரவாக்குவதற்குப் பதிலாக வெளிக் கேட்டைத் திறந்துவிட்டு றோட்டைக் கூட்டிக்கொண்டிருப்பார். அவருக்கு றோட்டில் செல்லும் எல்லா வாகனமும் யாழ்ப்பாண ஸ்டேசனிலிருந்து பருத்தித்துறைக்குப் போகும் பஸ்ஸாகவே தெரியும். இடைக்கிடை வீட்டு வாசலுக்குள் எட்டிப் பார்த்து பஸ் இன்னும் வந்தபாடில்லையென்று ஏமாற்றத்துடன் அம்மாவுக்கு அறிவித்துக்கொண்டிருப்பார். நானோ அவர்களைப்பற்றி ஒரு சிறிதும் சிந்தியாமல் இந்த இளைஞன் அடுத்து என்ன செய்யப்போகிறானென்று அறிந்தால் போதும் என்ற ஆவலுடன் கண்களைச் சொருவவிடாமல் அவதானித்துக்கொண்டிருக்கிறேன்.

அவனுக்கும் அதுவரை சுருண்டு படுத்திருந்ததால் அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். யன்னலுக்கு வெளியே திரும்பியிருந்த விஜயாவைத் தன்னோடு பயணமாகும் இன்னொரு பிரயாணியாகக் கருதிதியவன்போல் அவளுக்கு முன்னால் வெறுமையாயிருந்த இருக்கையில் தயக்கத்துடன் அமர்ந்துகொண்டான். இவன் ஏதோ முற்பிறப்பில் ஏதோ புண்ணியம் செய்திருப்பானோ? இருக்கையின் மூலையில் சாய்ந்த அடுத்த கணமே நித்திரையாகிவிட்டான்.

விஜயாவுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல அவமானமாகவும் போய்விட்டது. அவளொரு சாதாரண பெண்ணாக முதல் பார்வையில் தோன்றினாலும் நன்றாய்க் கவனிப்பவர்களின் கண்ணில் நறுக்கியெடுத்ததுபோன்ற முகத்துடன் அடக்கமானதொரு அழகியாகத்தானிருப்பாள். அவளின் கறுப்பும் இல்லாத சிவப்பும் இல்லாத நடுத்தர நிறத்தையும் இதழ்களில் கூப்பிட்டவுடன் ஓடிவந்து உட்காரும் புன்னகையையும் கனவுகள் புதைக்கப்பட்ட கன்னக் கதுப்பையும் அவர்கள் காணத் தவறமாட்டார்கள். இவனெப்படி ஒருமுறையாவது என்னைக் கண்டுகொண்டதாய்க் காட்டி ஒரு புன் சிரிப்பைக்கூட வெளியிடாமல் ஒதுங்கியிருக்கலாம்? தன் நித்திரையின் அவசியமும் நாளைய தினத்தின் முக்கியமும் அவனை அப்படிச் செய்ய வைத்திருக்கலாம். ஏய் விஜயா, இதற்கெல்லாம் முன்பு துளியும் அறிமுகமில்லாதவனை நோகலாமா? அவனுக்கு மனதில் நிம்மதி இருக்கிறது அதனால் சொல்லி வைத்ததுபோல் நித்திரைகொள்கிறான். நீ மனதில் நிம்மதி இல்லாததால் விழித்துக்கொண்டிருக்கிறாய்.

இதென்ன இது? ஏனிந்த அவசியமில்லாத விசாரணைகளெல்லாம். நாளையன்றைக்கு என்னைப்பார்க்க ஒரு புதியவர் எங்கள் வீட்டுக்கு வருகிறாராம். அவர் பத்தாவது ஆளோ நூறாவது ஆளோ எவருக்கும் சரியான கணக்குத் தெரியாது. என்னவாயிருந்தாலென்ன அவர் எப்படி இருப்பாரென்றல்லவோ இப்போது நான் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கவேண்டும். அதை விட்டு யாரோ முன்பின் தெரியாத இந்த இளைஞனைப் பற்றி யோசித்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்கிறேனே. இது எந்த வகையில் நியாயம்? என்றாலும் இவனைக் கடைசியாக ஒரு முறையாவது பார்த்துக்கொள்வோம். அதில் அப்படியென்ன பிழை இருக்கப்போகிறது?

இவனுக்கு வயது இருபத்தேழு, இருபத்தெட்டு இருக்கலாம். இன்னும் ஒரிரு அங்குலம் கூட வளர்ந்திருந்தால் ஆறடியை எட்டியிருப்பான். றோஸ் கலந்த கறுப்பு நிற முகத்தில் படர்ந்திருந்த மீசை மேல் உதட்டை மூட முயன்றதுபோல் வழிந்திருந்தது. சிகரட் புகைத்துப் பழக்கமில்லாதவனோ, அதுதான் வாய் இப்படிச் சிவந்துபோயிருக்கிறது. மேற்சட்டை உடம்போடு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. சட்டைப் பையில் ஒரு பேனாவும் சரிந்து படுத்திருந்தது. பையினூடாக ஒரு மடித்த கடதாசி துல்லியமாய்த் தெரிந்தது. ஒட்டுமொத்தமாய் யாழ்ப்பாணத்துப் படித்த இளம் ஆள், கொழும்பிலுள்ள ஏதோவோரு கந்தோர் சிறையில் என்னைப்போல் ஆயுட் தண்டனை அனுபவிக்கும் இன்றைய உத்தியோகத்தனும் நாளைய ஏழையுமாயிருக்கவேண்டும். விஜயா அவனை நித்திரை கொள்கிறாள்தானே என்ற தைரியத்தில் கூர்ந்து கவனித்தாள். அட, நித்திரையிலும் சிரிக்கிறானே! தன்னை நான் பார்த்ததைக் கவனித்திருப்பானோ?. நித்திரை கொள்வதுபோல் நடிக்கிறான் போலிருக்கிறது. இவன் போன்றவர்களை நம்பக்கூடாது. இல்லையில்லை, இவன் நடிக்கவில்லை. உண்மையாய்த்தான் நித்திரைகொள்கிறான். நித்திரையிலும் ஏதோ இனிமையான நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டிருப்பான், அதனால்தான் சிரிப்பு வந்திருக்கும். நானும் இப்படி நித்திரையில் சிரிக்கவேண்டும், அது எப்போது நடக்கப்போகிறது?

நாளையன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வருகிறவர் இவனைப்போல இருப்பாரோ? இருந்தால் எவ்வளவு நல்லது. ஆனால் அம்மா எழுதினாளே என் வயதுக்கு மிகப் பொருத்தமான ஆள் என்று. தாய் எழுதிய கடிதத்தின் வரிகள் நினைவுக்கு வந்ததும் முன்னால் நித்திரையிலிருந்தவன் மீது வைத்திருந்த பார்வையை எடுத்து யன்னலுக்கு வெளியே எறிந்தாள். கண்ணுக்குள் எதுவும் பறக்காமலேயே நீர் கசிந்தது. அம்மா எழுதியதைப் பார்த்தால் வருகிறவருக்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். முப்பத்திரண்டு வயதான என்னைப் பார்க்க முன் இருக்கையில் இருப்பவனைப் போன்று துடிப்பான இளைஞனா வரப்போகிறான்? இப்போது உண்மையிலேயே கண்ணுக்குள் தூசி எதுவோ பறந்துவிட்டது. அல்லதுகண்களில் அழுகை வந்து தொற்றிக்கொண்டது.

வருகிறவர் இவனைப்போல் பெண்களை மதிப்பவனாக இருக்கவேண்டும். நிறமும் இளம் கறுப்பாக இருந்தால் பரவாயில்லை. நான் ஓரளவுக்குச் சிவப்புத்தானே, அவர் கறுப்பாய் இருந்தால் அப்படிப் பெரிதாக எதுவும் மோசமில்லை. ஆனால் என் வயதோ இன்னும் இரண்டு வயதோ கூட இருந்தால் எல்லாம் பொருந்த இடமிருக்கிறது. நாற்பது வயதுக்கு மேலிருந்தால் தலையில் மயிரைத் தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டிவரும், இவனுக்கிருப்பதுபோல் உசார் இல்லாமல் ஆள் சோர்ந்துபோயிருப்பார். கையில் விலையுயர்ந்த மணிக்கூடும் உடம்பில் மடிப்புக் கலையாத உடுப்புகளும் இருந்தால் போதுமா? தொலைந்துபோன மாப்பிளைத் தோற்றத்தை எங்கே தேடி எடுக்கலாம்? அம்மா, அப்பாவுக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டதோ?

போன வருஷம் தீபாவளிக்கு ஊருக்குப் போனபோது வேறொருவன் என்னைப்பார்க்கவந்தான். லண்டனில் இருப்பவனாம். பெயர் ஏதோ சொன்னார்கள். மாப்பிளையாய் வரப்போகிறவன் மட்டும்தானே பெண் பார்க்க வரவேண்டும். அந்தப் படை பட்டாளமெல்லாம் எதற்காக அவனோடு கூட வந்ததாம்? அப்பாவுக்குப் பிடிக்கவில்லை, எனக்கும் அறவே பிடிக்கவில்லை. அம்மாவுக்குத்தான் நிறைய வேலை. கடைசியில் அவர்கள் ஒன்றுமே சொல்லாமல் போனதுதான் அம்மாவுக்குப் பெரிய மனவருத்தம். அவர்கள் போய் ஒரு கிழமையால் இதற்கு ஒழுங்கு செய்தவர் அப்பாவைக் கண்டு நிலைவரம் சொன்னாராம். நான் அப்போது கொழுப்புக்குத் திரும்பிவிட்டதால் வீட்டில் நடந்த பேச்சில் பங்கு பெறவில்லை. முடிவு எனக்குத் தெரிந்ததுதான். வயது கூடிப்போய்விட்டது. வயது ஏன் கூடிப்போனதென்றால் எனது சாதகத்தில் சனியோ செவ்வாயோ காலை மடக்கிய காரணத்தால் பார்க்க வந்தவர் ஒருவரது சாதகத்தோடும் ஒத்துவரவில்லை. இப்படியாகச் சம்பந்தம் ஒவ்வொரு முறையும் பேசமுன்னமே குழம்பிப்போய்விட்டது. இந்த மாப்பிளைகளெல்லாம் சாதகக்குறிப்பையா கல்யாணம் கட்டப்போகிறார்கள். இப்படியே போனால் அடுத்த மாதமோ அடுத்த வருஷமோ என் கன்னத்தில் ஓரிரு வெள்ளை மயிர் காதோடு ரகசியம் பேசக்கூடும். அதற்குமுன் ஒரு வழி கிடைக்காமலா போய்விடும்?

நான் முந்திப் பழகிய கதிர் என்ற கதிர்காமநாதன் வலு ஸ்மார்ட்டாக இருப்பான். சிரிப்போ கொள்ளை கொள்ளும். எங்கள் கந்தோருக்கு ஒரே சமயத்தில் பட்டாளம்போல் வந்து சேர்ந்த புதியவர்களில் கதிரும் ஒருவன். அவனும் என்னைப்போல்தான் நிறம். மெலிந்த உடலும் அளவான உயரமும் அவனை எந்தவொரு இளம்பெண்ணும் இன்னொருமுறை திரும்பிப்பார்க்கத் தூண்டும். அவன் வந்த அடுத்த கிழமையே எல்லார் மத்தியிலும் அசல் ஆம்பிளை என்ற பெயரை வாங்கிக்கொண்டான். ஆனால் ஐம்பது வயதை எட்டிய துரை மட்டும் கதிரைப்பற்றி அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. வலியப் போய் இளம் பெண்களை வம்புக்கு இழுக்கும் தனக்குச் சரியான போட்டியாக வந்துவிட்டானேயென்ற வயிற்றெரிச்சல். ஆனால் கதிரின் நோக்கமெல்லாம் எக்கவுண்டனாவதுதான். பாவி, ஒருபெண்ணுடனாவது சினேகிதம் பிடித்தானா? சரியான காரியக்காரன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் படிப்பையும் முடித்து எங்கேயோ குட்டி எக்கவுண்டனாகிவிட்டான். எங்களில் பலருக்குப் பலத்த ஏமாற்றம். அவன் போனபிறகுதான் சே, அவனைக் காதலித்திருக்கலாமே என்று எண்ணித் தம்மையே நொந்துகொண்டவர்கள் பலர் என்னோடும் வேலைசெய்தார்கள், வெளியிலும் இருந்தார்கள். எனக்கு மட்டும் அந்த யோசனை வரவில்லை.

நானும் நினைத்திருந்தால் காதல் என்ற பெயரில் கொழும்பு கடற்கரையிலும் கோயில் திண்ணைகளிலும் மாறி மாறி அகப்பட்ட ஒருவனோடு சுற்றி என் இளமைக்காலக் கனவுகளுக்கு உருவமும் ஊட்டமும் கொடுத்திருக்கலாம். இறுதியில் எனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமான ஒருவன் அகப்பட்டிருக்கவும் கூடும். அம்மா, அப்பாவுக்கும் ஒரேயடியாய் நிம்மதி கிடைத்திருக்கும். எப்பவோ வழுக்கிச் சென்ற வாய்ப்புகளை இப்போ நினைத்துக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? நான் அப்படியான பெண்ணாக இருக்கவில்லை. அதற்காக நான் நிச்சயம் பெருமைப்படலாம்.

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. முன்னால் இருந்த இளைஞன் இருக்கை மூலையில் இருந்து நித்திரைகொண்டு பழக்கம் இல்லாததாலோ எதிரே ஒரு இளம் பெண் விழிகள் மினுங்கத் தன்னைக் கடைக் கண்ணால் பார்த்தபடி இருந்ததாலோ தொடர்ந்து அந்த இருக்கையின் சௌகரியத்தை அனுபவிக்க முடியாதவனாய் எழுந்து உடையைச் சரிசெய்துகொண்டு மீண்டும் உட்கார்ந்துகொண்டான். அப்போதுதான் விஜயாவுக்கும் அவனுக்குமிடையே அந்தவொரு ஆச்சரியமான இரசாயன மாற்றம் ஏற்பட்டது.

எவ்வளவு நேரத்துக்குத்தான் ஆளுக்காள் சும்மா சிரிப்பை எறிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருப்பது? பொழுதுபோக்காக விஜயாவும் அவனும் அரை மனத்துடன் அறிமுகம் செய்துகொண்டார்கள். அவன் தனது பெயரையும் சொல்லி அவள் பெயரையும் கேட்டு அறிந்துகொண்டான். தனக்கு அரசாங்கக் கூட்டுத்தாபனத்தில் வேலையென்றான். விஜயா தன் வேலையைப் பற்றியும் சொன்னாள். அவனும் விருப்பத்துடன் கேட்டான். அதனால் அவளும் முந்தியே அவனோடு பழகியவள்போல் இயல்பாகப் பேசத்தொடங்கினாள்.

“எங்கை கொழும்பிலைதானே இருக்கிறியள்?”

“ஓம், ஒரு சிங்கள ஆக்களன்ரை வீடு. மிச்சம் நல்ல சனம்.”

“எப்பிடி உங்கள் வேலை போகிறது?”

“வேலையும் எனக்கு விருப்பமானதுதான். கூட வேலை செய்யிற எல்லாரும் நல்லஆக்கள். பெரியவருக்கும் என்னை நல்லாப் பிடிக்கும்.”

“உங்களை ஒருவருக்கும் பிடிக்காமல் போகாது.”

“சும்மா சொல்லாதையுங்கோ.”

“உண்மையாகத்தான் சொல்லுறன்.”

இதைக் கேட்டதும் அவன் சிறிது நேரம் தலை குனிந்தபடி பேசாமலிருந்தான். பிறகுகேட்டான், “எப்படித் தெரியும்?”

“துவக்கத்திலையிருந்து உங்களைக் கவனிச்சுக்கொண்டுதானே இருந்தேன்.” எவ்வளவு துணிவாக இதைச் சொன்னேன் என்று தன்னைத்தானேபாராட்டிக்கொண்டாள் விஜயா.

“நானும் உண்மையாகத்தான் சொல்லுறன், உங்களைக் கண்டவுடனே எப்படியாவது கதைக்கவேண்டுமென்று நினைத்தன். நல்ல வேளையா உங்களுக்கு முன்னாலை சீட் கிடைத்தது.”

இப்போது இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். விரைவான இரசாயன மாற்றம்.

என்னைப் புத்திசாலிப் பெண் என்று காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடக்கமானவள், எல்லாரையும் மதிக்கத் தெரிந்தவள், அளவாகவும் கவனமாகவும் பேசுபவள் என்று இவன் அறிந்து எனக்கு மதிப்புத் தந்தாலே போதும், ஒரு பெண் ஒரு ஆணிடமிருந்து இதைவிட வேறெதை எதிர்பார்க்கிறாள்? ஆனாலும் ரயில் பயணத்தில் சந்தித்துக் கடைசியில் இறங்கியதும் நினைவிலிருந்து ஒரேயடியாய் மறந்துபோகக்கூடிய ஆண்போல இவன் இல்லையே.

இதுவரை ரயிலில் மட்டும் தனியாக எத்தனை பயணங்கள் செய்திருப்பேன், எனக்கு முன்னாலும் பக்கத்திலும் எல்லா வயதிலும் எத்தனை ஆண்கள் பயணித்திருக்கிறார்கள்? வழியெல்லாம் சிரிக்கவைத்தே பொழுது போக்கியவர்களும், இல்லாத சகோதர வாஞ்சையை இழுத்துப் பிடித்து உறவு கொண்டாட முயன்றவர்களும், அவர்களுள் ஒரு சிலர் என் உடம்பின் வசதியாய் கிடைத்த பகுதிகளில் தெரியாத் தனமாகப் படுவதுபோல் தொட்டும்தடவியும் சுய இன்பம் அனுபவித்தவர்களும், நான் ஏமாந்த ஒரு சில கணங்களில் என் மார்பில் அழுத்தி எல்லையற்ற சுகம் கண்டவர்களும், இப்படி நிறையப்பேர் இருந்தார்கள். சிச் சீ, இவர்களெல்லாம் ஏன் மனிதர் பயணம் செய்யும் பெட்டியில் ஏறுகிறார்கள்? இவர்கள் நாம் எல்லாரும் படித்த யாழ்ப்பாணத்தார் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில் மட்டும் தம்மை உயர்த்திக் கொள்ள மறப்பதில்லை, இருட்டிலும் நெருக்கத்திலும் தமது மனதைத் தாமே அழுக்காக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டும்போது இந்த நாம் எல்லாரும் படித்த யாழ்ப்பாணத்தார் என்ற உணர்வு எங்கேபோனது?

ஆனால் இவன் நல்லவன். நல்லாய்த் தெரியும், நல்லவன்போல் வேஷம் போடுபவனல்ல. பேச்சுப் போதாதபோது சிரித்துச் சமாளிக்கலாம் என எண்ணுபவன் போலவும் இல்லை. அபூர்வமாய்ச் சிரிக்கும்போதும் தலையைக் குனிந்து சிரிப்பதால் எனக்கும் மரியாதை தருகிறான் என்பது நன்றாய்த் தெரிகிறது. காலுக்கெட்டிய தூரத்திலிருந்தும் தற்செயலாகக்கூடத் தன் பாதம் என் சேலைக் கரையில்கூடப் படக்கூடாது என்பதிலும் கவனமாயிருக்கிறான். அது நடிப்பாக இல்லாமல் அவனின் இயற்கையான குணமாகவும்இருக்கலாம்.

இவன் சொல்வதைப் பார்த்தால் இவன் சந்தித்த எல்லாருமே நல்லவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இல்லையேல் இவன் எல்லாரையுமே நல்லவர்களாகத்தான் காண்கிறானா? எல்லாரிலும் நல்லதையே காண்பதால்தான் தானும் தன்னையறியாமல் நல்லவனாக மாறிக்கொண்டானோ?

இவன்தான் என்னைப் பெண்பார்க்க வந்திருக்கிறான் என்பதுபோலல்லவா நான் பட்டுச்சேலை சரசரக்க முன்னால் வந்து உட்கார்ந்திருக்கிறேன். என்னை இதுவரை பார்க்கவந்தவர்கள் வாசலைக் கடந்து வீட்டினுள்ளே நுழையும்போது மட்டும் தாம் ஏறிவந்த வெண்குதிரையைத் தெருவில் நிறுத்திவிட்டு வந்த ராஜகுமாரன்போல் அட்டகாசத்துடன் நடந்துகொள்வார்கள். அதற்குப்பிறகு ஒரு நிமிடத்துக்குள் தம்மை அரண்மனைச் சேவகனாக்கிக்கொள்வார்கள்.

தேனீரையும் குடித்து வடையும் சாப்பிட்டுக் கையைத் துடைத்துக்கொண்டிருக்கும்போதே சுவரில் மாட்டியிருந்த அத்தனை படங்களையும் நோக்கம் எதுவுமில்லாமல் நோட்டம் விட்டுப் பிறகு மௌனமாய் என் சேலைக் கரையைப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்த கையோடு கண்களை மேலே தவழவிட்டு இடையில் இடறி விழுந்து கடைசியில்முகத்தை மொய்க்கும் வரையிலான ஒரு கணத்துக்குள் எப்படி அந்தப் புதியவன் என்னை உண்மையாய் அறிந்துகொள்ளப்போகிறான்? நானும் வந்தவனை நிமிர்ந்து பார்த்த ஒரு நிமிடத்தில் அவனைப்பற்றி எந்த அளவில் அறியப்போகிறேன்? சிலவேளை அறை மூலையில் என்னோடு இருந்து என்னை ஒரு மணி நேரம் இண்டர்வியூ செய்ய விரும்புவானேயன்றி நானும் அவனை அதேபோல் செய்ய ஒப்புதல் தருவானா? அது அவனுக்கு மட்டுமுள்ள உரிமையென்று அவனின் ஆட்கள் வாதாட வந்தால் எல்லா ஆயத்தங்களும் சரிந்த நிறைகுடமாகிவிடும்.

என்னைப் பெண்பார்க்க வருபவர்களில் ஒருவனாவது இவனைப்போல் இருக்கமாட்டானா? இருக்கலாம், ஆனால் இனியும் எத்தனை காலத்துக்கு அப்படி ஒருவனுக்காகக் காத்திருப்பது? என்றாலும் நாளையன்றைக்கு நூறாவதாக வரப்போகும் நாற்பத்தைந்து வயதுக்காரனிடமாவது ‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை’ என்று என்னால் சொல்லமுடியுமா? நானொரு பெண், எந்தவேளையிலும் ‘இல்லை’ என்று ஒரு ஆணின் முகத்துக்கு முன்னால் சொல்லும் உரிமை என்னிடம் இல்லை. அவன்தான் ஒரு நாளும் இல்லாத பெருநாளாய்ச் சம்மதம்என்று சொல்லிவிட்டானென்றால் அது என் தலையில் இடி விழுந்தது போலல்லவா? அடுத்து, இந்த மாதமே எழுத்தும் கல்யாணமும் என்பார்கள், ஊரெல்லாம் கொண்டாட்டம். நான் மட்டும் அறைக்குள் அடைபட்டு அழுதுகொண்டிருப்பேன். என் அம்மா, அப்பாதான் இப்படி அறிவற்றுப்போய் அரை நூற்றாண்டைத் தொட்டுக்கொண்டிருப்பவனுக்கு என்னை ‘ஓம்’ போடவைக்க முயன்றால் சமூகத்தில் நீதியும் சாத்திரமும் எங்கேபோய் ஒழிந்துகொண்டன? எனக்கு வேண்டிய நீதியை நானே இனிக் கை நீட்டி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

“வீட்டில் ஏதேனும் விஷேசமோ அல்லது வழக்கமான பயணமோ?” அவன்தான் பேச்சைத் தொடர விரும்பினான்.

“அம்மாவுக்கு விஷேசம், அப்பாவுக்கு அவசியம்.”

“அப்போ உங்களுக்கு?”

“பத்தோடை பதினொன்று.” வெறுப்பை மறைக்கவென்று ஒரு சிரிப்பு.

“உங்களுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. அது மட்டும் விளங்குகிறது. நீங்கள் விரும்பினால் சொல்லலாம்.”

விஜயா தலையைக் குனிந்தபடி அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள். “என்னைப் பார்க்க நாளையன்றைக்கு நூறாவது மாப்பிளை வாறார்.” அவளின் ஒவ்வொரு சொல்லிலும் அடக்கமுடியாச் சோகம் இழையோடிற்று.

அவன் என்ன சொல்வதெனத் தெரியாதவனாய் நாடியைத் தடவிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். சிறிது நேரத்தில், “கேட்கிறேனென்று குறை நினையாதீர்கள். உங்கள் கல்யாணம் ஏன் இவ்வளவுக்கு இழுபட்டது?”

“எவரில் பிழையென்று கேட்கிறீர்களா? அப்படி வேறு எவரிலும் பிழை இல்லை. பிழை என்னில்தான் இருக்கவேணும்.” இப்போதும் விஜயா முகம் நிமிர்த்தவில்லை.

அவன் அப்போது அவள் முகத்தைப் பார்க்க முற்பட்டான். இவளை இப்போதாவது முழுமையாகப் பார்க்கவேண்டும். இவளின் தோற்றத்தில் அப்படியென்ன பிழை இருக்கக்கூடும் என்பதை அறியவேண்டும். பெண்களின் குணத்திலும் பார்க்க அழகுதானே திருமணங்களில் முதலிலும் பிறகும் எப்போதும் அலசப்படுகிறது. அவன் முதன் முதலாகத் தன்னை நிமிர்ந்து பார்க்க விரும்புகிறான் என்பதை விஜயா உணர்ந்துகொண்டாள். அவளும் அவனை நோக்கினாள்.

“என்னுடைய பார்வைக்கு நீங்கள் நல்ல பக்குவமான பெண்ணாகத்தான் இருக்கிறியள். நான் இதை முகத்துக்கு முன்னால் சொல்லக்கூடாது. உங்களை உங்கள் அழகையோ அடக்கத்தையோ காரணம் காட்டி இத்தனை பேர்கள் வேண்டாமென்று சொல்லிச் சென்றிருக்கமுடியாது. அதுமட்டும் நிச்சயம்.” என்று அவன் புன்முறுவலுடன் சொன்னான்.

“எத்தனையோ காரணங்களை என்னைப் பார்க்க வந்த எல்லாரும் சொன்னார்கள். ஒன்றும் சொல்லாமலும் போனார்கள். ஆனால் எனக்குக் காலம் வரவில்லையென்ற ஒரே காரணத்தைச் சொல்லித்தான் அம்மா எனக்கு ஒவ்வொரு முறையும் ஆறுதல் சொல்கிறாள்.”

“காலத்தைக் குறை சொல்வதால் அது கோபித்துக்கொண்டு நமக்கு எதிராக எதுவும்செய்துவிடாது. இதனால்தான் காலத்தையும் சிலவேளை கடவுளையும் குறை சொல்கிறோம்.”

“நாளையன்றைக்கு மட்டும் காலம் என் பக்கம் நிற்குமென்று யார் கண்டார்கள்?”

“அதனாலை முயற்சிக்காமல் இருக்கிறதும் நியாயம் இல்லைதானே.”

“ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லி ஏமாந்துபோனோம்.”

“நாளையன்றைக்கு வாறவரை உங்களுக்குப் பிடிக்கக்கூடும். அவரும் உங்களைக் கண்டு கதைத்ததும் சம்மதமென்று சொல்லக்கூடும். இதை அறியாமல் இப்போதே மனதைத் தளரவிடாதீர்கள்?”

“எனக்கு என்ன வயது இருக்குமென்று நினைக்கிறீர்கள்?” விஜயா திடீரென்று இப்படிக் கேட்டதும் அவன் உடனே என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறிப்போனான்.

“ஒரு இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு வயதிருக்கலாம். பெண்களின் வயதை அறிய நான் ஆர்வம் காட்டிறதில்லை, அது நியாயமுமில்லை.” விஜயா அவனின் சிரிப்போடு கலந்துகொண்டாள்.

“நீங்கள் சொல்றதிலும் பார்க்கக் கொஞ்சம் கூட.” என்றவள் சில விநாடிகள் மௌனத்தின் பின், “எனக்குமுப்பத்திரண்டு வயதாகிறது என்று சொன்னால் நம்புவீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை, நான் நம்பமாட்டன்.”

“உண்மையும் அதுதான்.”

“உண்மையாய் இருந்தாலென்ன, நீங்கள் நான் முதல் சொன்ன மாதிரி இருபத்தேழு வயதுப் பெண் போலத்தான் இருக்கிறியள்.”

“என் கல்யாணம் தள்ளிப் போகிறதுக்கு முந்தி வேறு காரணங்கள் இருந்தன, இப்போ இந்த வயதுதான் ஒரே காரணம்,”

“ஆனால் இந்த வயதை அறிந்த பிறகும் நாளையன்றைக்கு உங்களைப் பார்க்க ஒருவர் வருகிறார்தானே?”

“நாப்பத்தைந்து வயதுக்காரர் என் முப்பத்திரண்டு வயதை அவ்வளவு பொருட்படுத்துவாரென்று நினைக்கிறீர்களா?”

“நாப்பத்தைந்து வயதா?” அவனின் வாயும் கண்களும் அகல விரிந்தன.

“ஓம், அரை நூற்றாண்டை எட்டப்போகிறார். என்னைப்போல ஒரு பெண் கிடைத்தால் ஒருவேளை அவர் இன்னும் இளமையாகிவிடக்கூடும்.” அவள் கேலியாகச் சொன்னாளா உண்மையில் தன் மனவேதனையை இப்படி வடித்தாளா? அவளின் ஒவ்வொரு சொல்லிலும் படிந்திருந்த சோகத்தை அவனால் உணரமுடிந்தது.

“எனக்கும் கிட்டத்தட்ட இதுபோல் ஒருமுறை நடந்ததுதான். உங்கள் கதையை நீங்கள் மறைக்காமல் சொன்னதால் நானும் என் கதையைச் சொல்வதிலை பிழை இல்லை.”

“உங்களுக்கும் அப்படி நடந்திருக்குமா?” விஜயா நம்பமுடியாமல்தான் கேட்டாள்.

“கேட்டால் சிரிப்பீர்கள். எனக்குப் பேசிவந்த பிள்ளைக்கு என்னிலும் பதின்மூன்று வயது குறைவு.”

“சில இடங்களிலை அப்படியும் நடக்கிறதுதானே?”

“முந்தியெல்லாம் தவிர்க்கேலாமல் அப்பிடி நடந்ததென்று சொல்லுங்கள்.”

“அந்தச் சம்பந்தத்துக்கு நீங்கள் சம்மதித்தீர்கள்தானே?” கடவுளே இவன் சம்மதித்திருக்கக் கூடாது.

“இல்லை, அந்தச் சின்னப் பெண் அழகான பெண்ணும்கூட. அவள் அந்த வயதில் எத்தனை கனவுகள் கண்டிருப்பாள். அவளின் வயதுக்குப் பொருத்தமான ஒருவன் நிச்சயம் கிடைப்பான் என்று சொல்லி நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அடுத்த வருஷமே அவள் சடங்கு விரும்பினமாதிரி நடந்துவிட்டது. இதில் சந்தோசப்பட்ட ஆக்களிலை நானும் ஒரு ஆள்.”

விஜயா பதில் சொல்லச் சொற்கள் கிடைக்காமல் அவனையே ஆச்சரியத்துடன் பார்த்தாள். இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவன் இருக்கமுடியுமா? ஒருவேளை இவன் முழுப் பைத்தியமோ? அசல் புத்திசாலியோ? இந்த இரண்டு பேருக்குமிடையில் அதிகம் வித்தியாசமில்லையென்று சொல்வார்களே.

தன்னிலும் பதின்மூன்று வயது குறைவான பெண்ணின் அழகையும் இளமையையும் தனக்குச் சாதகமாகக் கருதாது அவளின் கனவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்த இந்த இளைஞன் நிச்சயம் நல்லதொரு கணவனாகவும் வருவான். பதின்மூன்று வயது இளையவள் மீது இவனுக்கு ஏற்பட்ட இரக்க உணர்வு மூன்று வயது மட்டும் மூத்தவளான என்மீது ஏற்படாமல் போய்விடுமா?

ஏன் தலை குனிந்துகொண்டாய் விஜயா? அந்தப் பெண்ணின் இடத்தில் நீ இருக்கவில்லையே என்று நினைத்துக் கவலைப்படுவதாக இவன் ஊகித்துக்கொள்ளப் போகிறான். விஜயா நிமிர்ந்து பார்த்தாள். அவன் தன் முகத்தையும் கலங்கிப்போன கண்களையும் கண்டதும் துணுக்குற்றவன்போல் தோன்றினான்.

“நான் ஏதேனும் பிழையாகச் சொல்லியிருந்தால் தயவு செய்து குறை நினைக்கவேண்டாம்.”

வெளியே அழுதால்தானா அழுகை? உள்ளே அழுததையும் கண்கள் காட்டிக் கொடுத்துவிட்டனவே!

யில் யாழ்ப்பாணம் வந்து சேரக் காலை ஏழு மணியாகி இரவு ஓடி ஒளித்துக்கொண்டது. ரயில் பெட்டிக்குள் எங்கும் எல்லாரும் வீட்டுக்குப்போகும் அவசரத்தில் எதை வைத்தோம் எதை எடுத்தோம் என்ற அறிவில்லாமல் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் நிதானமாக எழுந்து மேலே தட்டில் வைத்த தனது சிறு பேக்கை எடுத்துக் கீழே இருக்கையில் வைத்துவிட்டு “இதுதானா உங்கள் பெட்டி?” என மேலேயிருந்த பெரிய சூட்கேஸைக் காட்டிக்கேட்டான். “ஓமோம்” என்று விஜயா பதில் சொல்லவும் அதை மெல்லமாய்க் கவனமாய் இறக்கிக் கீழே வைத்தான்.

“நீங்கள் முதலிலை கீழே இறங்கி நில்லுங்கோ, நான் பின்னால் இதைத் தூக்கிக்கொண்டு வாறன்.”

“ஏன் உங்களுக்கு இவ்வளவு சிரமம்?”

“எனக்கு இதில் சிரமம் ஒன்றும் இல்லை. நீங்கள் ஏறியபோது சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு வந்தீர்கள். இன்னொருமுறை சிரமப்படவேண்டாம்.”

விஜயாவுக்கு இந்தப் பதில் பிடித்துக்கொண்டதால் தொங்கிக்கொண்டிருந்த சேலையை அள்ளி எடுத்துக்கொண்டு இறங்கும் ஆட்களைத் தொடர்ந்து போய் வெளியே இறங்கச் சென்றாள். அவளுக்குப் பின்னால் விஜயாவின் சூட்கேஸையும் தனது பேக்கையும் இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்து தனது பேக்கை மட்டும் ப்ளாட்போமில் காத்திருந்தவளிடம் கொடுத்தான். அவள் கையை நீட்டி வாங்கியபோது அவன் மெல்லச் சிரித்ததுபோலிருந்தது. அது அவளுக்கும் சிரிப்பை அழைத்துவந்தது.

“நீங்கள் பருத்தித்துறை பஸ்ஸில்தானே போறீங்கள்? நானும் அதைத்தான் எடுக்கவேணும்.”

பருத்தித்துறை பஸ்ஸில் இன்றைக்கு ஏறப்போகிறவர்கள் நாங்கள் இருவர் மட்டும்தான் என்று விஜயா கற்பனை பண்ணிக்கொண்டாளாயினும் இது நல்ல ஆரம்பம் என்று தனக்குள் எண்ணி மனம் பூரித்துக்கொண்டாள்.

“எங்கட வீடு போற வழியிலைதான். நீங்களும் ஒருக்கால் என்னோடை இறங்கி வீட்டைவரவேணும். பிறகு கொஞ்ச நேரத்தாலை பழையபடி பஸ் எடுத்துப்போகலாம்.” அவன் பேசாதிருந்ததைக் கண்டு அவள் மேலும் சொன்னாள். “அம்மா, அப்பாவும் உங்களைக் கண்டால் விருப்பப்படுவினம்.” இதை அவள் மன்றாடிக் கேட்டாள் போலும் அவன் முகத்தில்அப்போது தோன்றி மறைந்த சிந்தனை ரேகைகள் அவன் ஆழமாய் யோசிக்கிறான் என்பதை அவளுக்குஉணர்த்தின.

“ம்ம்ம்… அதெல்லாம் எதுக்கு? இங்கை எல்லாரும் வீட்டுக்கு ஓடுறது போலத்தான் நானும் ஓடவேண்டியிருக்கிறது. எனக்காகவும் வீட்டில் காத்துக்கொண்டிருப்பார்களெல்லோ!”

“ஓமோம், எண்டாலும் ஒரு அரை மணித்தியாலம் எங்கள் வீட்டில் நிண்டால் உங்களுக்குப் பரவாயில்லைதானே?”

“இல்லை, பாருங்கோ. குறை விளங்கவேண்டாம். சந்தர்ப்பம் வந்தால் இன்னொரு முறை காணலாம். உங்கள் களியாணக் காரியமெல்லால் சுகமாய் முடிந்தால் திரும்பவும் கொழும்புக்குத்தானே வரப்போறீங்கள். அப்ப கண்டுகொண்டால் போச்சு.”

எனது கல்யாணம். ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க ஆட்கள் வரமுந்தி மனதுக்குள் நிறைவேற்றி மகிழ்ந்த கற்பனைக் கல்யாணம். அடுத்த அரை மணியில் குழம்பிப்போய்க் கண்ணீரில் முடிந்த கல்யாணம். இந்த முறை மட்டும் அது ஒப்பேறிவிடும் என்று எங்கே எழுதியிருக்கிறது? நான் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டதை இவன் கவனித்திருப்பானோ?

ஸ் ஒருவாறு விஜயாவின் வீட்டு வாசலுக்குச் சற்று முன்பான தரிப்பிடத்தில் வந்து நின்றது. விஜயா முன்னே இறங்கிக்கொள்ள வாசலில் அவளின் தகப்பனார் காத்திருந்தார். பின்னே இறங்கியவனின் கையிலிருந்த சூட்கேஸையும் அவர் வாங்கிக்கொண்டார். பஸ் படிக்கட்டில் நின்றபடியே அவளைக் கனிவுடன் பார்த்து போய்வருகிறேன் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்து விடை பெற்றான். பஸ்ஸும் தனதுபயணத்தைத் தொடர்ந்தது. அது அடுத்த திருப்பத்தைக் கடந்து ஒரேயடியாய் மறைந்தும்விட்டது.

விஜயா வீட்டினுள்ளே செல்ல மறந்து முன் வாசல் கேட்டை கைகளால் இறுகப் பற்றியபடி தன் கண் முன்னால் மறைந்த அந்த பஸ் போன திக்கையே பார்த்து நின்றாள். இரண்டு பேர் ஒன்றாய்க் கழித்த ஒரு முழு இரவு எத்தனை உணர்வுகளைப் பேச்சாலும் கண்ணாலும் பரிமாறியிருக்கும்? “நானும் உங்களைப்போலை ஒருவரைத்தான்…..” என்று பட்டும் படாமலும் இவனுக்கு என் மனதைத் திறந்திருக்கலாம். சிலவேளை நான் வாயால் சொல்லாமலே இந்தப் புத்திசாலி என் மனதைப் புரிந்துகொண்டிருக்கலாம். இதை அப்போதே சொல்லியிருந்தால் என்னோடு இன்னும் சில மணிநேரம் பொழுதைப் போக்கியிருப்பான், என் வீட்டுக்கு வந்துவிட்டுப்போங்கள் என்று அழைத்தபோது தயக்கத்துடனாவது ஒப்புக்கொண்டிருப்பான். எல்லாம் என் பிழை. விஜயாவுக்கு வாசலின் இரும்புக் கதவில் குருதி ஒழுகும் வரையும் தலையைப் பலமாய் மோதி அழவேண்டும்போலிருந்தது.

அவன் கடைசியில் போய்விட்டான். கண்களையும் மனதையும் ஒரேயடியாய் மூடிக்கொள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். நான் சொல்லத் தயங்கியதை எப்படியோ அறிந்து அதையும் தன் கையோடு கொண்டுபோயிருப்பான். இனியென்ன, பழையபடி நாளை இன்னொருவன், அடுத்து இன்னுமொருவன், இன்னும் எத்தனையோ நடுத்தர வயதுக்காரர்கள், மனைவியை இழந்தவர்கள் அல்லது விட்டுப் பிரிந்தவர்கள், தடி பிடித்தவர்கள், பிள்ளைகுட்டிக்காரர்கள். அம்மா தொடர்ந்து கோப்பித்தூள் இடித்து, வடை சுட்டு, தன் இறுதிக்காலம் வரை எனக்காக உழைத்து, மெலிந்து ஓடாகிப்போவாள். இதையா அப்பா என் கல்யாணம்என்கிறார்? வீட்டுக்குள் போவதற்கும் விருப்பமின்றிக் கலங்கிய கண்களுடாக அந்த பஸ்போன திக்கைக் கடைசியாக ஒருமுறை நோக்கினாள்.

தூரத்து முடக்கில் அவன் திரும்பி வருவது தெரிந்தது.

குதிரை இல்லாத ராஜகுமாரன் சிறுகதைத் தொகுப்பிலிருந்து…

 

Related posts

*

*

Top