சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா

சி.வை.தாமோதரம்பிள்ளை-நினைவு-விழா

பாடசாலை மட்டத்தில் இளையோரைத் தமிழ்த்துறையில் ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மட்ட விழாக்களை முன்னெடுக்கவுள்ளது. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரது வழிகாட்டலில் இடம்பெறும் இச்செயற்றிட்டத்தின் முதல் நிகழ்வு யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் சி.வை.தாமோதரம்பிள்ளை விழாவாக இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 29.01.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை தாங்குவார். யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் மிமிலாதேவி விமலநாதன் தொடக்கவுரையாற்றுவார். சி.வை.தா. பற்றிய சிறப்புரையை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்துவார்.

தொடர்ந்து மாணவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வாக சொல்லாடுகளம் இடம்பெறும். ‘இன்று இளைய தலைமுறையை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கை ஆற்றுபவர் முதியோரா? பெற்றோரா? ஆசிரியரா? என்ற பொருளில் இடம்பெறவுள்ள சொல்லாடுகளத்திற்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நடுவராகச் செயற்படுவார். இந்நிகழ்வில் மாணவர்கள் மாத்திரம் அன்றி தமிழார்வலர்களும் கலந்து கொள்ளமுடியும் எனத் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை என்பதன் குறுக்கமே சி.வை.தா. என்பதாகும் இவர் 1832 இல் பிறந்தவர். 1901 ஆம் ஆண்டு சனவரி 01ஆம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தவர். பத்திற்கும் மேற்பட்ட பண்டைத்தமிழ் நூல்களை (வீரசோழியம், கலித்தொகை, தொல்காப்பியம் பொருளதிகாரம்…) ஏடுகளில் இருந்து தேடியெடுத்துப் பதிப்பித்தவர். பதிப்புலக இமயமாகப் போற்றப்பட்டவர்.

வட்டுக்கோட்டை செமினறியில் படித்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர். சிறுப்பிட்டியில் இவரது வீடு அமைந்திருந்த இடத்தில் நினைவுக்கல் ஒன்று காணப்பட்டது. அது 1990 அளவில் போர் நடவடிக்கைக் காரணங்களால் அழிவடைந்து போனது.

சி.வை.தா.விற்கு சிறுப்பிட்டியில் சிலை எடுக்க வேண்டும் என சிறுவைக்கிழார் என அழைக்கப்படும் புலவர் செல்லத்துரை அடிக்கடி கூறுவார். அவரது ஆவலை நிறைவேற்ற சிவை.தா. ஆசிரியராகப் பணியாற்றிய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் சிலை ஒன்றை அமைத்தனர். (புலவரின் மாணவன் முன்னாள் பிரதி அதிபர் சிவலிங்கத்தின் முயற்சியால் இது இடம்பெற்றது)

Related posts

*

*

Top