சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே – தவறான புரிதல்கள் மீதான ஒரு நோக்கு

Barack Obama

- வெற்றி துஷ்யந்தன்

அண்மைய நான்கைந்து நாட்களாய் இலங்கை மற்றும் பல நாடுகளிலும், ஊடங்கங்களும் அதிகமாய் பேசி வருகின்ற கருப்பொருள் சின்னமாமியே பாடல் பற்றியாகத்தான் இருக்கின்றது. அதற்குரிய காரணம் இந்தப் புகழ் பெற்ற பாடலின் பாடலாசிரியர் கலைஞர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் கடந்த ஆம் திகதி காலமாகி விட்டார்.

உண்மையிலேயே ஒரு பிரதி எப்படி நம் முன்னே வலம் வந்திருக்கின்றது அல்லது ஒரு சிறப்புக்குரிய படைப்பு எப்படி எப்படி எல்லாம் அலைந்து திரிந்திருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப்போயின் சற்று மனவேதனையாகத்தான் இருக்கின்றது.

சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே ஈழத்து பொப் இசையில் ஒரு மிக முக்கியமானதும் ஈழத்து பொப் இசையின் சிறப்பை உலக அளவில் பரப்பியதுமான ஒரு தனித்துவமான பாடல்.

ஈழத்து இசை உலகில் ஒரு காலத்தில் பல இளைஞர்களை குத்தாட்டம் போடவைத்த இந்தப் பாடல் இற்றைவரை ஒரு சிறப்புக்குரிய பாடலாகவே வலம் வருகின்றது. நீண்டகாலமாக அறியப்பட்ட இந்தப் பாடலை பொறுத்தவரை அதன் சிறப்புக்கு ஏற்ப இது யாருடைய பாடல் என்கின்ற அவா நிறைந்த கேள்வியும் அன்று தொடக்கம் இருந்தே வந்திருக்கின்றது. இந்தக் கேள்விக்குரிய விடைகள் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக வெளிவந்திருந்த போதும் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் பெரிதாக அதைப்பற்றிய கரிசனையை எடுத்துக் கொள்ளவில்லை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை அதுவல்ல எம். எஸ்.கமலநாதன் அவர்கள் பெரிதாக தன்னை பிரபல்யப்படுத்துவதையோ அல்லது தனது ஆளுமைகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஒருவராகவே வாழ்ந்திருக்கின்றார் என்பதே நிதர்சனமான ஒன்றாக இருந்திருக்கின்றது.

எம்.எஸ்.கமலநாதன்1

வடமராட்சி வதிரிக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் மிகச்சிறந்த ஒரு கலைஞர் என்பதற்கு அப்பால் மிகச்சிறந்த ஒரு விளையாட்டு வீரர் மற்றும் அனைவரும் நன்கறிந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தரும் கூட. 1970களில் இலங்கையின் பல பாகங்களிலும் வானொலிகளிலும் ஒலித்த மேற்படி பாடல் பலரது வரவேற்ப்பை பெற்ற ஒரு பாடலாக இருந்தது.

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே…

இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல் இது. இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்று பொப் இசையை விரும்புகின்ற அனைத்து பிரதேசங்களிலும் இப்பாடல் இற்றைவரை தனித்துவ அந்தஸ்தை பெற்றிருக்கக் கூடிய பாடலாக வலம் வருகிறது.

எம்.எஸ்.கமலநாதனால் எழுதப்பட்ட இந்தப்பாடல் பிரபல பொப் இசைச் சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம், எ. ஈ.மனோகரன் போன்ற நம் நாட்டு பொப் இசைப் பாடகர்களால் பல அரங்குகளில் பாடப்பட்ட போது மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யமானதாக வலம் வரத் தொடங்கியது. மக்களால் பெருவிருப்புறத் தொடங்கிய இந்தப் பாடலை பல அரங்குகளில் இவர்கள் பாடியமையினால் இந்தப்பாடலும் இவர்களுக்கே உரியன என்றானதான ஒரு தோற்றநிலை உருவாகத் தொடங்கியது எனலாம். இந்தநிலை கூட இந்தப் பாடலின் பாடலாசிரியர் யார் பாடலின் தோற்றம் என இன்னோரன்ன பல காரணிகள் மறைந்து போவதற்கும், மறைக்கப்படுவதர்க்குமான காரணிகளாக அமைந்தது எனலாம். ஆனால் இந்தப் பாடலின் வரிகளின் உரிமம் தனக்கே உரியது எனவும் பாடலின் வரிகளும் தன்னுடையது என கலைஞர் எம்.எஸ். கமலநாதன் அவர்கள் பல ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போதைய காலங்களில் வெளிப்படுத்தியே வந்திருக்கின்றார். உண்மையும் அதுவே.

ஈழத்து பொப் இசையை பொறுத்தவரையில் உலக இசை மரபுகளிநிடையே என்றைக்கும் தனித்துவமான ஒரு இசைவடிவமாக நோக்குவதற்கு மிக முக்கியமான காரணிகளில் இந்த சின்னமாமியே பாடல் உண்மையில் ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது. அதுவே உலக அரங்கில் ஈழத்து பொப் இசைக்கு ஒரு தள அந்தஸ்தை கொடுத்து எனவும் சொல்லிக் கொள்ளலாம்.

உண்மையிலேயே இந்தப்பாடல் தொடர்பாக அவ்வப்போதுகளில் பல சர்ச்சைகள் உருவெடுத்தே வந்திருக்கின்றன. இந்தப்பாடல் நித்தி கனகரத்தினம் அவர்களுடையது என ஒரு சாராரும் இல்லை எம்.எஸ். கமலனாதனுடையது என இன்னொரு சாராரும் அவ்வப்போதுகளில் பொதுவெளியில் தங்கள் வாதப் பிரதிவாதங்களை முன்மொழிந்தே வந்திருக்கின்றனர். ஆனால் எம்.எஸ்.கமலாதனின் பாடல்தான் என பல ஊடகங்களும், பல துறைசார் வல்லுனர்களும் அவ்வப்போதுகளில் முன்மொழிந்தே வந்திருக்கின்றனர். எம். எஸ்.கமலநாதன் அவர்களும் பல தன்னுடைய நேர்காணலில் பல ஆதாரங்கள் வாயிலாக அதனை வலியுறித்தியே வந்திருக்கின்றார்.

உண்மையிலேயே சின்னமாமியே பாடல் தொடர்பாக பலரும் தங்களது கருத்துப் பகிர்வுகளை அண்மைய நாட்களாய் பதிந்து வரும் நிலையில் நான் எதனை சொல்லப் போகின்றேன். அல்லது எனக்கு என்ன தெரியும் இந்தப் பாடல் எழுதப்பட்ட அல்லது அது பிரபலமாக வெளிவந்த காலத்தில் நான் பிறந்திருக்கவே மாட்டேன் அப்படியானால் நான் என்ன சொல்லப் போகின்றேன் என்று யாரும் நினைத்துக் கொண்டால் அந்த நினைப்பிற்கு நான் முதலில் தலை சாய்த்துவிட்டே இதனை சொல்ல விளைகின்றேன் ……

இந்தப் பாடலை நான் அறிந்த காலம், அது தொடர்பான எந்தப் பிரக்ஞையும் தெரியாத ஒரு காலமே ஆனால் போகப் போக இந்தப் பாடல் பற்றிய சில உண்மைகள் அல்லது அது தொடர்பான சில சர்ச்சைகளை நான் அறிந்தே வந்திருக்கின்றேன். அந்தவகையில் எனது ஊடகப் பணியின் நிமித்தம் கடந்த 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் இந்தப் பாடலோடு எதோ ஒரு ரீதியில் என்று சொல்வதை விட மிக அன்னியோன்னியமாக இருந்த ஈழத்து பொப் இசைப்பாடகர் நித்தி கனகரத்தினம் அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குறிக்கப்பட்ட நிமிடங்களின் ஆரம்பங்கள் ஈழத்து பொப் இசை, பைலா பாடல்களின் தோற்றம் போன்ற பொதுவெளி உரையாடல்கள் ஆரம்பங்களை அதிகமாக நிறைத்தது. இதன் தொடர்சியாக சின்னமாமியே பாடலை நித்தி அவர்கள் கிற்றாரையும் இசைத்தபடி பாடிக் காட்டியிருந்தார்.

நான் தொட இருக்கின்ற விடயம் எவ்வளவு முக்கியமான விடயம் என்கின்ற சற்று பீதி மனதில் நிறைந்திருந்தாலும் எதையுமே பொருட் படுத்தல் இன்றி சின்னமாமியே பாடல் தொடர்பான உரிமம் அதன் சர்ச்சைகளை நேராகவே நித்தியிடம் கேட்டபோது சிரித்துக் கொண்டே ஆரம்பத்தில் என்னை எல்லோரும் கேட்கின்ற கேள்வி இதுதான் என்று சொல்லத் தொடங்கியவர் பல விடயங்களை சொல்லிக் கொண்டார்.

ஆரம்பத்தில் சற்றும் வழுவாது பதில் வழங்கியவர் இறுதியில் இந்தப் பாடலின் பிரபல்யத்திற்கு எம்.எஸ். கமலநாதன் அவர்கள் மிக முக்கியமான காரணம் என்றவர், இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கும் எனது நன்றிகளை சொல்லிக் கொள்கின்றேன் என்று கூறிக் கொண்டார். அவருடைய பதில்களே இந்தப்பாடலின் ஆசிரியர் எம்.எஸ்.கமலநாதன் தான் என்பதை பல இடங்களில் பூதகரமாக்கியிருந்தமையை என்னால் உணர முடிந்தது. ஆனாலும் நித்தி அவர்கள் பல இடங்களில் வழுவல் தன்மை உள்ள பதிகலையே கூறி வந்திருக்கின்றார்.

இந்த நேர்காணலை பார்வையிட்ட எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் மிகுந்த மகிழ்சி அடைந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார் என்பதை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். மிகுந்த பிரபலமான பாடல் தொடர்பாக என்னால் முடிந்த எதோ ஒன்றை நாமும் செய்திருக்கின்றோம் என்கின்ற மன நிறைவு இந்தப் பாடல் தொடர்பான நினைப்பு எழுகின்ற போதுகளில் என்னிடம் அதிகமாகவே வந்து செல்லும்.

உண்மையிலேயே இந்தப் பாடலை அரங்க ஆற்றுகைகளினால் பிரபல்யப்படுத்தியவர் ஈழத்து பொப் இசைப் பாடகர் நித்தி கனகரத்தினம் அவர்கள் என்று சொல்வதில் எக்காலமும் எந்த வகையிலான மாற்றுக் கருத்து நிலைகளும் இருக்க முடியாது. ஆனாலும் இந்தப் பாடலின் ஆசிரியரும் மெட்டு அமைப்பும் கலைஞர் எம்.எஸ்.கமலாதனுக்கே உரியது என்பது இசை உலகம் இன்று நன்கறிந்த ஒன்றாகியிருக்கின்றது.

உண்மையில் ஈழத்து இசை தன்னை எல்லா இடங்களிலும் தனித்துவமான பல விடயங்களினால் தன்னை தனித்துவப் படுத்தியே வந்துகொண்டிருக்கின்றது. இன்று எம்.எஸ்.கமலநாதனின் மறைவுக்குப் பின்னர் இலங்கையின் முழு ஊடகங்களும் சின்னமாமியே பாடல் பற்றியும் அந்தப் பாடலை ஒளிபரப்பியும், ஒலிபரப்பியும் பாடலாசிரியர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் மறைந்தார் என்கின்ற செய்திகளை சொல்லி வருகின்றது உண்மையிலேயே அவர் வாழுகின்ற காலத்தில் ஒரு சில ஊடகங்களை தவிர பெருவாரியான ஊடகங்கள் பாடலை ஒலிபரப்பியதே தவிர இந்த பாடலின் ரிஷி மூலம் நதி மூலத்தை பற்றி பெரிதும் சிலாகித்துக் கொள்ளவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற நிலையில் இருந்த ஊடகங்கள் இன்றைய ஒரு சில நாளிகளைகளில் இந்தப் பாடலின் ஆரம்பம் சிறப்பு என்பனவற்றை சிலாகிப்பதைப் போல ஆரம்ப காலங்களில் சிலாகித்திருந்தால் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் பெரிதும் அகமகிழ்வு கண்டிருப்பார், சில கட்டுமானங்கள் போன்ற பல இன்னோரன்ன காரணிகள் என்றைக்கோ உடைபட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

எது எப்படியோ சின்னமாமியே பாடல் இன்றைக்கு ஒரு தேசத்தின் அடையாளமாக அல்லது ஒரு தேச தனித்துவ இசைக்கான அடித்தளமாக இருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப் போயில் இந்த பெருமை மிகு பாடலின் பாடலாசிரியர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் உண்மையில் போற்றப்படக்கூடியவர் இப்படியான சிறப்புக்குரிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் இன்று காலமாகியிருந்தாலும் என்றைக்கு சாகாவரம் பெற்றுக்கக் கூடிய கலைக்கூடாகவும், இந்த பெருமை மிகு பாடலுக்கூடாகவும் என்றைக்குமே அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதே திண்ணம்.

*

*

Top