‘இங்கே திறமைக்கு சரியான விலை கொடுக்கப்படுவதில்லை!’ – மதன் பேட்டி

‘‘இளம் வயதில் என் ஆசையெல்லாம் ஏதாவது ஒரு அலுவலகத்தின் மூலையில் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் வரைந்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு உயரத்தைத் தொட்ட பிறகு, புதிய சவால்களுக்கு தயாராவதுதானே சரி… வாய்ப்பு வரும்போது அதை உதாசீனப்படுத்தவும் கூடாது இல்லையா?! அப்படித்தான் எனக்கு எழுத்து, சினிமா விமர்சனம் என்று பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் ஆசையோடு எடுத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுக்க ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்று தனது நீண்ட விரல்களைக் காற்றில் அசைத்துப் பேசத் தொடங்குகிறார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை, தியாகராஜ பாகவதர் முதல் விஜய் – அஜித் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடியும். அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மதன் மூவி மேட்னி’ நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரை விமர்சனத்தை கையில் எடுத்திருக்கிறார் மதன். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்து பேசினோம்.

‘புதுயுகம்’ தொலைக்காட்சியின் ஆலோசகராகத்தானே முதலில் பொறுப்பேற்றீர்கள். பிறகு எப்படி திரை விமர்சனம் பக்கமும் வந்தீர்கள்?

தனிப்பொறுப்பு, அதற்கு ஒரு சம்பளம் என்று இயங்கும்போது நமது பங்களிப்பும் அதிகம் இருக்கவேண்டுமே. பத்திரிக்கை அனுபவம் ஒரு பக்கம், 12 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சினிமாவிமர்சகர்’ என்ற பெயர் தந்துள்ள அனுபவம் அத்துடன்..! இதெல்லாம்தான் மீண்டும் திரை விமர்சனம் செய்யலாமே என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதுபற்றி நான் சேனலில் கேட்டபோது அவர்களும் ரசித்து வரவேற்றார்கள். இப்போது அந்தப் பயணம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இப்போது நிறைய தொலைக்காட்சி சேனல்கள் வந்துவிட்டன. சினிமா பற்றி செய்திகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் சினிமா விமர்சனத்துக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளதா? அதை எந்த பாரபட்சமும், வியாபார நெருக்கடிகளும் இல்லாமல் எடுத்துச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கிறதா?

நிஜம்தான். குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேனல்கள் இருந்த காலகட்டம் போல இப்போது இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் தொலைக்காட்சி பேட்டிக்கு வந்து போவதையே சோர்வான விஷயமாக எண்ணத் தொடங்கிவிட்டனர். என் விமர்சனத்துக்கு, அந்தப் படத்தின் இயக்குநர் மட்டும் வந்தால் போதுமென்றே நினைக்கிறேன். அவரை முன் அமரசெய்தே ஒரு படத்தை ஆய்வு செய்வதற்கு அத்தனை கோணங்கள் உள்ளன. மக்களும் அறிவார்ந்த விமர்சனங்களை ரசிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் உங்கள் கார்ட்டூன்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?

என் கார்ட்டூன்கள் இப்போது எங்கும் வருவதில்லைதான். என் படைப்புத்திறனுக்கு நான் ஒரு மதிப்பை அளவிட்டு வைத்திருக்கிறேன். அது எங்கே கிடைக்கிறதோ அங்கு கொடுத்தால் போதும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இங்கே திறமைக்கு சரியான விலை கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத மதிப்புள்ள பொருளை வெறும் 35 சதவீத விலைக்குக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்?

டிஜிட்டல் உள்ளிட்ட நவீன உத்திகள் வளர்ந்துள்ள நிலையில் இளைய தலைமுறையிலிருந்து திறமை மிக்கப் புதிய கார்ட்டூனிஸ்டுகள் வளர்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா?

எதிர்பார்த்தவிதமாக இல்லை என்றுதான் சொல்வேன். இப்போது கார்ட்டூனிஸ்ட்களாக இருக்கும் பல இளைஞர்கள் ஐடி மற்றும் வங்கிகளில் வேலை பார்த்துக்கொண்டு ரகசியமாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சூழல், வருமானம் எல்லாமும்தான் அதை தீர்மானிக்கிறது. நான் பத்திரிகையில் பணியாற்றிய காலங்களில் கூட்டம் கூட்டமாக கார்ட்டூனிஸ்ட்கள் படையெடுத்து வருவோம், போவோம். கார்ட்டூனிஸ்ட் என்பவனின் கற்பனைத் திறனே அலாதியானது.

தற்கால அரசியலை, மகாபாரதத்தோடு இணைக்கவும் அவனுக்கு தெரியவேண்டும். அதே நேரத்தில் பத்திரிகை நடத்தும் முதலாளி, எடிட்டர் ஆகியோரை திருப்திப்படுத்தும் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். இன்றைக்கு ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கு படம் போட சொல்லிக்கொடுக்கலாம். ஆனால், நுணுக்கமான சேதி சொல்லும் கார்ட்டூன் ஐடியாவை யார் கொடுப்பது? இவ்வளவு பெரிய நாட்டில் 30,40 பேர்தான் பிரபலமான கார்ட்டூனிஸ்ட்கள் என்று பட்டியல் போட்டுவிட முடிகிறதே..!

‘நாளைய இயக்குநர்’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளின் வழியே குறும்பட இயக்குநர்களை உத்வேகப்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு கொண்டு வந்தீர்கள்… குறும்படம் மூலம் திரைப்படத்துக்கு வந்தவர்களின் பணிகள் திருப்தியாகத் தெரிகிறதா?

அவர்கள் இயக்கிய நிறைய படங்கள் 100 சதவீத வெற்றியாகத்தான்படுகிறது. திறமைசாலிகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. ஒரு இளைஞனுடைய திறமையைப் பார்க்கும்போது அவனுடைய தாய் கொள்ளும் மகிழ்ச்சியைப் போலத்தான் நானும் அடைந்திருக்கிறேன். இப்போது நிறைய இளைஞர்களின் படங்கள் திருப்திகரமாக உள்ளன.

தற்போதைய சூழலில் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு, போராட்டம், மிரட்டல்எல்லாம் அதிகரித்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்றைய அரசியல், சுற்றுப்புற பிரச்சினைகள் இதையெல்லாம் புரிந்துகொண்டு படம் எடுக்கும் இயக்குநர்கள் இங்கு குறைவுதான். தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த வேண்டும், நமக்கு அடுத்த படம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு படம் எடுப்பவர்களை பெரிய அரசியல்வாதிகளாக ஆக்குவதே இந்தப் போராட்டக்காரர்கள்தான். ஒரு படம் நன்றாக இல்லையென்றால், சரியான கருத்தைச் சொல்லவில்லை என்றால் மூன்றே மூன்று நாட்களில் மக்களே அதை புறக்கணித்துவிடப் போகிறார்கள். என்ன செய்ய… தமிழ்நாட்டில் போராட்டம் என்பது ரொம்ப சர்வ சாதாரணமாகிவிட்டது.

திரைப்படங்களுக்கு தணிக்கை குழுச் சட்டம் என்று ஒரு நடைமுறை இருக்கிறது. நீதிமன்றத்தைப் போல இவர்களுக்கும் ஒரு சட்டம் வகுக்கப்பட்டு, அந்தக் குழுவினர் படத்தைப் பார்த்து, ஆய்வு செய்து வெளியிட அனுமதிக்கும்போது… அதையும் தாண்டி படத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இந்த எதிர்ப்பாளர்கள் எல்லாம் யார்?

தற்போதைய சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா?

ஒரு பெரிய ஆபீஸில் வேலை பார்க்கிறோம்… அங்கு 500 பேர் இருப்பார்கள். அந்த ஆபீஸ் இயங்குவதற்கு காரணமாக அவர்களில் 30 பேர் இருப்பார்கள். அந்த 30 நபர்களில் மிகவும் முக்கியமானவர்களாக ஏழெட்டு பேர் இருப்பார்கள். திரைப்படத் துறையிலும் அப்படித்தான். 300, 400 படங்கள் வரும், போகும். அதில் ஏழெட்டு படங்கள்தான் தமிழ் சினிமாவை முன்னோக்கிக் கொண்டுபோகிறது.

*

*

Top