பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா?

Barack Obama

- துன்னாலைச் செல்வம்

பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த நிலத்தை ஏன் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து கைப்பற்ற வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை இந்த நிலம் தமிழ் மக்களின் தாய் நிலம். இந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் தமது உயிர்களைக் கொடுக்க தயாராக இருந்தார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டினாலே இந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. இப்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சிங்கள அரசுடன் சேர்ந்து பலாலியில் பொங்கல் விழா கொண்டாட முண்டியடிக்கிறார்களே ஒழிய அந்த மக்களின் நிலங்கள் பறிபோவதைத் தடுக்க துப்பில்லாதவர்களாக இருக்கின்றனர்.

அள்ளி வழங்கும் நீலக் கடலையும் – மீன்பிடித் துறைமுகத்தையும், பொன்கொழிக்கும் சிவப்புமண் விவசாய நிலத்தையும் நாம் விமான நிலையத்துக்காகத் இழக்கத் தயார் இல்லை. காங்கேசன்துறை வர்த்தக துறைமுகத்துக்கும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கும் இடைத்தூரம் 5 கிலோ மீற்றர் தான். 1983 ஆம் ஆண்டு போர்க் காலத்தில் கடல் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மீன்பிடி நிறுத்தப்பட்டது. இதனால் இன்று வரை மயிலிட்டி மீன்பிடியாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடி இவர்களின் தொழில். மயிலிட்டி – பலாலி – தையிட்டி பிரதேசங்கள் சிவப்பு மண் பூமி. இந்தப் பூமி விவசாயிகளுக்கு பொன்னாக உழைத்துக் கொடுத்தது. அந்தப் பிரதேசமும் 26 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கி மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த மண்ணில் வீடுகளையும், தொழிற்சாலைகளையும், ஆலயங்களையும் இடித்தழித்து இராணுவத்தினர் முழுச் சொத்திலும் விவாசாயத்தை மேற்கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள இராணுவத்தினருக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வெளியிலும் மிகுதி விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இராணுவ உணவுச் செலவு மீதமாக்கப்படுகின்றது. நிலச் சொந்தக்காரன் பசி பட்டியினியோடு பிச்சையெடுக்கிறான். இராணுவத்தினர் அந்த நிலத்தில் பசியாறுகிறான். ஆடு மாடு வளர்த்து பால் தேவையை இறைச்சித் தேவையைப் பூர்த்தியாக்கி இராணுவம் வளமுடன் எமது நிலத்தில் வாழ்கின்றார்கள்

எமக்கு சொந்தமான துறைமுகமும், 12 கிலோமீற்றர் நீளக்கடற்கரையும், எமது சிவந்த விவசாய மண்ணும் எமக்கு வேண்டும்.பறக்கும் விமான நிலையம் எமக்கு வேண்டாம். விமான நிலையத்துக்கு வடக்கு – மேற்குப் பக்கமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள். இப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் அந்த விமான நிலையம் தேவையா?

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்தான் முக்கியம். மீனைக் கடலில் இருந்து வெளியே எடுத்து போட்டால் எப்படி துடிதுடித்துச் சாகுமோ அது போலவே எமது வாழ்வில் மயிலிட்டியை விட்டால்தான் முகாம்களை மூட முடியும்.

மயிலிட்டியை விடாமல் முகாம்களை மூட முடியாது. விமான நிலையம் தேவையானால் யாழ். நகருக்குக் அண்மையாகவுள்ள தீவகத்தில்இ சிங்கப்பூர் விமான நிலையம் மாதிரி அமைத்துக் கொள்ளலாம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விடுவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பலாலிப் படைத்தளத்தில், தைப்பொங்கல் நாளன்று நடத்தப்பட்ட உயர் மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், முன்வைத்த கோரிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பலாலி விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில் இருப்பதால், விமானங்களை தரையிறங்கவும், மேற்கிளம்பவும், பயன்படுத்தக் கூடிய பகுதியாக இது இருக்கும் என்றும், அதனால் அந்தப் பகுதியை விடுவிக்க முடியாது என்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன நியாயம் கூறியிருக்கிறார்.

வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்திகளை, பொருளாதார வலயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான காலம் தற்போது எட்டியுள்ளது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வடக்கில் குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் சாதகமான கருத்திலுள்ளனர். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.

இதனைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்ற போதும் நாம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பயனாக மக்களின் காணிகளை சுவீகரிக்காது கடற்கரையோரங்களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.

பலாலியை சுற்றியுள்ள தமிழ் மக்களின் நிலங்களை தொடர்ந்தும் தமது வசம் வைத்திருக்கவே பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்கப் போவதான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மக்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே பலாலியில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைந்தால் தமிழர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். 1970 இற்கு முன்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் இந்த விமானப் பயணத்தை மேற்கொண்டால் வடக்கில் உள்ள மக்களின் வெளிநாட்டுப் பயணங்களை இலகுபடுத்த முடியும்.

நாட்டின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளில் வடக்கு மாகாணம் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. எனவே வடக்கில் பலாலியில் ஒரு விமான நிலையம் அமைவது சுற்றுலா உள்ளிட்ட தொழில்கள் அதிகரிப்பதற்கும், வடக்கின் அபிவிருத்திக்கும் வழியமைக்க முடியும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்தை சிங்கள அரசு மண்போட்டு மூடப் பார்க்கிறது.
தமிழர்களின் நிலத்தில் சிங்களவன் விவசாயம் செய்கிறான்.

தமிழர்களின் நிலத்தில் சிங்களவன் பௌத்த விகாரைகளைக் கட்டுகிறான். தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுகின்றான். நல்லினக்க அரசு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லுகிறது. அவர்களுக்கும் இந்த அரசுக்கும் தான் நல்லினக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு அல்ல என்பது ஒரு வருடம் கடந்த நிலையில் இன்று தெரிகிறது.

Related posts

*

*

Top