ராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்

– தெளிவத்தை ஜோசப்  

30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி அவரே இப்படிக் கூறுகின்றார். நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த நான் பல காலம் ஊரில் வாழ்ந்தவன் என்று சொல்வதிலும் பார்க்க ஊரோடு வாழ்ந்தவன் என்று சொல்வதில் தான் பெருமை கொள்கின்றேன். நான் நேசிக்கும் இந்த மண்ணின் மக்களுடைய அன்றைய கால வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர்களுடன் கூடப் பயணித்திருக்கின்றேன். பிறந்து வளர்ந்து படித்த நாட்டை விட்டேகிய பிறகும் இந்த மக்களுடன் என் மனம் இன்றும் இறுக ஒன்றிப்போயிருப்பதற்கு இந்த ஊர் மண்ணின் வாசனைதான் காரணம் என்பேன். (இந்தத் தொகுதியின் என்னுரை)

இவர் எழுபதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் என்பதும் வீரகேசரி, தினகரன், அலை, மல்லிகை போன்ற ஏடுகளில் இவருடைய கதைகள் வெளிவந்தன என்பதும் குப்பிளான் ஐ.சண்முகனின் முன்னுரை மூலம் தெரிய வருகின்றன. இத்தொகுதியின் கதைகள் எதிலும் அந்தக் கதை வெளிவந்த ஆண்டோ கதை வெளிவந்த பத்திரிகை பற்றிய தகவலோ இடம்பெறவில்லை. தன்னூர்க்காரரும் நண்பருமான குப்பிளான் சண்முகத்திடமே விடாப்பிடியாக நின்று முன்னுரை பெற்றுக் கொண்டதாகவும் குறிக்கின்றார்.

ராஜாஜி ராஜகோபாலன். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரேயே என்னோடு அறிமுகமானவர். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே கிளையிலேயே பல ஆண்டுகளாக இணைந்து பணி புரிந்தோம் என்று தனதுரையை ஆரம்பிக்கின்றார் குப்பிளான் சண்முகன். ராஜகோபாலனது கவிதை நூல் ஒரு வழிப்போக்கனின் வாக்கு மூலம் 2014 இல் வெளி வந்துள்ளதாகவும் முன்னுரையில் குறிக்கின்றார் இவர்.

இந்த நூலை நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னொரு இணைப்பதிப்பகமே சுதர்சன் புக்ஸ் என்பது நூலாசிரியரின் உரை மூலம் தெரிய வருகின்றது. 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி ஈழத்துச்சிறுகதைத்துறைக்கும் தமிழ்ச்சிறுகதைத்துறைக்கும் ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டி நிற்கிறது என்பதை தயக்கமின்றி கூறலாம். ராஜாஜி கோபாலனது இயற்கையான எழுத்தின் வளம் பாத்திரங்களின் ஊடாக அதை அழகுற வடிவமைத்துக் கொள்ளும் நுட்பம் போன்ற பல அம்சங்கள் இந்த அடையாளப்படுத்தலை அதற்கான தகுதியை உறுதி செய்கின்றன.

தன்னுடைய கதை மாந்தர்கள் பற்றி அவர் குறிப்பிடுவதை சற்றே கவனிப்போம். ஒவ்வொரு கதையிலும் வரும் மாந்தர்கள் குணங்களும் குற்றங்களும் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் எனது காலத்தில் என்னோடு வாழ்ந்த என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் தம் வாழ்வில் வெளிப்படுத்திய காதல், நட்பு, தியாகம் போன்ற உணர்வுகளை அடுக்கியே இக்கதைகளைக்கட்டி எழுப்பியிருக்கின்றேன். இக்கட்டுமானத்தில் காதலையும் காமத்தையும் அளவுக்கதிகமாக அள்ளி மெழுகி இடுகின்றேன் என்ற வாதங்கள் எழவும் கூடும். மனித வரலாறு காதலையும் காமத்தையும் பற்றித்தானே பெரும்பாலும் பேசுகிறது. இவை இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்று கேட்கிறேன். இக்கதைகளில் வரும் மனிதர்களோடு நான் கைகோர்த்து உலாவியதைப் போலவே நீங்களும் உலாவ வேண்டும் என்றும் உணர வேண்டுமென்றும் விரும்பினேனேயன்றி என் எழுத்தால் உங்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றோ சமுதாயத்துக்கு ஏதேனும் படிப்பினையைப் புகட்ட வேண்டுமென்றோ அவர்களை உங்களுடன் நான் பேசவைக்க விரும்பவில்லை. மாறாக நான் அந்த மண்ணில் ஒருக்கால் வாழ்ந்து அனுபவித்த சூழலையும் இன்று நீங்கள் அங்கே இன்னும் ஒரு முறையாவது வாழக்கிடைக்க வேண்டுமென அவாவுறும் சூழலையும் எமக்கு உவப்பான மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்கின்றார்.

இந்தக்கூற்றும் கூட படைப்பு இலக்கியத்துக்கான அவருடைய முக்கியத்துவத்தை இனம் காட்டுவதாகவே அமைகின்றது. இந்தப் 15 கதைகளில் 14 கதைகள் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிப்பவை.

தலைப்புக்கதையான குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற கதையானது அதில் வரும் விஜயா என்ற யாழ்தேவி ரயில் பெண் தன்னுடைய 32 வயதிலும் இன்னும் தன்னை பெண் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கி நிலை குலைவதை அழகாகக் காட்டுகிறது. கொழும்பு கோட்டையில் ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் இறங்குகையில் கதையும் முடிகிறது.

வாசிப்பவனை அலுப்படையச் செய்யாமல் கதையுடன் கூட்டிச்செல்லும் இலாவகமான எழுத்து வன்மை கொண்டவர் இக்கதாசிரியர்.

முதல் கதையாகிய மேலும் சில கேள்விகளில் வரும் பவானி மகள் ஸ்ருதி கறுத்தக்கொழும்பானில் வரும் சண்டைக்கார சரசுவதி என்று அனைவருமே யாழ்ப்பாண மண்ணின் சாதாரண மனிதர்கள்தான்.

குப்பிளான் ஐ.சண்முகன் இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் இரண்டு என்கின்றார். ஒன்று ஆத்மார்த்தமான தத்துவத் தேடல்களைக் கொண்ட அலையில் வெளிவந்த விழிப்பு மற்றது புதிய வாழ்வியல் சூழல் பற்றியதான அந்த ஒருவனைத்தேடி என்ற இரண்டும். அந்த ஒருவனைத்தேடி கதையின் களம் யாழ்ப்பாணம் அல்ல அமெரிக்கா என்றாலும் பாத்திரங்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.

நீண்ட நெடுங்காலமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடும் கனடாத் தம்பதியினரின் கதை. 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜகோபாலன் அங்குள்ள தமிழர் வாழ்வியலை வைத்து எழுதியுள்ள ஒரே கதை இது என்கிறார் குப்பிளான்.

பெண்ணின் தகப்பனார் வரப்போகும் புதிய மாப்பிள்ளையின் குடும்பம் பற்றி பெருமையடிப்பதை கதாசிரியர் இப்படி எழுதுகின்றார். இவையள் எங்கடை ஊர் ஆக்கள். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலயிருந்தே வான் கூவரில் தான் இருக்கினமாம். டொராண்டோ சனங்களைப் போல் முட்டையிலை மயிர் புடுங்குற ஆக்கள் இல்லையெண்டு அறிஞ்சவன் நான்.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாக நுகரும்படி நுட்பமாகக் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். என்னும் பதிப்புரைக் கூற்று முற்றிலும் உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

தேடி வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல் இது.

நன்றி: வீரகேசரி ‘சங்கமம்’

Related posts

*

*

Top