ஆசிரியர்களே மாணவர்களை வாழ விடுங்கள்

– சி.ரமேஸ்

மாணவர்கள் என்றும் உங்களின் கைபொம்மைகள் அல்ல. அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுடைய அசட்டையீனத்தால் இன்று ஒரு மாணவியை இழந்து தவிக்கிறோம். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டி என்னும் பெயரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பிஞ்சுகளை வெய்யிலிலும் பனியிலும் போட்டு வருத்தும் இவ்விளையாட்டுப் போட்டி ஒன்று தேவையா என்று எண்ணத் தோன்றுகிறது. வலயங்கள் பாடசாலை விட்ட பின்னர் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த சொல்லிப் பணிப்பதால் பல பாடசாலைகள் பி.பகல் 1மணியிலி இருந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

காலை 7.30 மணிக்கு அணிநடை பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களே பிற்பகலில் விளையாட்டிலும் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். (கடமைக்காக கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள் இதில் இருந்து விதிவிலக்கு.) மற்றும் பாடசாலையில் அரையிறுதிப் போட்டி நடைபெறும் போது 800 மீற்றர் ஓடும் மாணவன் 400மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் பங்கு கொள்வான். கேட்டால் மாகாணமட்டப் போட்டியில் இதெல்லாம் சகஜம் அப்பா என்பார்கள். மாணவனின் உடலிலுள்ள வன், மென்தசைகள் குறித்த அறிவுகூட ஆசியிருக்கு பெரும்பாலும் இருப்பதில்லை.

சில பாடசாலைகளில் 1500 மீற்றரும் 800 மீற்றரும் ஒரே நாளில் வைக்கப்பட்டு முடிந்த சம்பவங்களும் உண்டு. அவ்வேளைகளில் House ஆசிரியர் மில்லிட்டரியில் சேவையாற்றியவர் போல நடந்து கொள்வார். பிள்ளையின் உடல், உளநிலைகளைப் பல ஆசிரியர்கள் கருத்தில் கொள்வதுமில்லை. அந்நிலையில் பிள்ளைக்கு உண்மையாகவே வருத்தம் ஏற்பட்டாலும் அவர்கள் அதனைச் சிரத்தையோடு கேட்கவும் தயார் இல்லை. ஆசிரியர்களின் அசட்டையீனத்தால் கனிந்து பெரு விருட்சமாகத் தளைக்க வேண்டிய ஒரு பிஞ்சு இன்று பலியாகியுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு யா/அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் செல்வி யோகலிங்கம் அனோஜா என்ற பாடசாலை மாணவி விளையாட்டுப் போட்டி பயிற்சியின் போது திடீரென ஏற்பட்ட மயக்கத்தால் ஸ்தலத்திலேயே விழுந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் முதலுதவி அளித்தும் மயக்கம் தெளிவுறாத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் வைத்திய சிகிச்சை பலனளிக்காத நிலையில் யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படார். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். பாடசாலை நிர்வாகம் மாணவியின் இறப்பை கூடப் பொருட்படுத்தாது குறித்த நாளில் இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்தி முடித்துள்ளது. அப்போட்டியில் மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் உதயன் பத்திரிகையூடாக அறிய முடிகிறது.

பயிறிசியின் போது இம்மாணவி காய்ச்சல், சளியாலும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவர் உடல் நலத்தில் சிறிதளவாவது அக்கறையைக் காட்டி இருந்தால் அம்மாணவியின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால். ஆசிரியர்களே, அதிபர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் இக்குழந்தைகளை பெற்றார் எம்போன்ற ஆசிரியர்களை நம்பியே பாடசாலையில் ஒப்படைக்கின்றனர். பாடசாலையில் விடப்படும் இக்குழந்தைகள் பாடசாலை நடைபெறும் ஆறு மணித்தியாளங்கள் நம் கண்காணிப்பிலும் நம் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியவர்கள். எம் சொந்தப் பிள்ளைகளைப் போல இம்மாணவர்களை நடாத்துங்கள் பேராலும் துன்பத்தாலும் துவண்டு போய் வருந்தும் இப்பிள்ளைகளுக்கு நீங்களே தாயும் தந்தையும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

Related posts

*

*

Top