அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை

இலங்கையின் வடமாகாணத்தில் நெல் அறுவடை 60 வீதம் முடிவடைந்துள்ள போதிலும், அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்யாத காரணத்தினால் தாங்கள் பெரும் நட்டமடைய நேரிட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 32 ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆயினும் வியாபாரிகள் 22 ரூபா அறுபது சதத்திற்கே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்கின்றார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

அறுவடை செய்தவுடனேயே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய தேவை இருப்பதனால், தனியார் வியாபாரிகளுக்கு அரைவிலை கால்விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்றார்கள் என்கிறார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் என்ற விவசாயி.

நல்ல விலை வரும்வரை, காத்திருந்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாது. ஏனென்றால் அறுவடை இயந்திரத்தின் மூலம், நெல்லாக்கி தூற்றித் தருகின்ற இயந்திர உரிமையாளருக்கும் ஏனைய விவசாயத் தொழிலாளர்களுக்கும் உடனடியாகக் கொடுப்பனவு செய்ய வேண்டி இருக்கின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும் நட்டத்திற்கு ஆளாகின்றார்கள்.

நெல்லை நல்ல விலைக்கு விற்க முடியாத காரணத்தினால் விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளிகளும் பாதிக்கப்படுகின்றார்கள். விவசாயத் தொழிலாளர்களாகிய பெண்களுக்கு நாளொன்றுக்கு 650 ரூபா மாத்திரமே சம்பளம் கிடைக்கின்றது.

இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு குறைந்தது 800 ரூபாயாவது எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் காளிமுத்து ராஜேஸ்வரி.

நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை (2)

கடந்த சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட நெல் இன்னும் விற்பனை செய்யப்படாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் பத்து களஞ்சியசாலைகளில் குவிந்து கிடப்பதனால், இந்த காலபோக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு களஞ்சியசாலை வசதி இல்லாதிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவும் நெல் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

அறுவடை ஆரம்பமாகி நடந்து கொண்டிருப்பதனால், நெற் சந்தைப்படுத்தும் சபையினர் நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு வசதியாக புளியம்பொக்கணை, கோணாவில், முழங்காவில் போன்ற பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.

இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடையாக்கி உடனடியாகவே விற்பனை செய்யப்படும் நெல் அதிக ஈரத்தன்மையைக் கொண்டிருப்பதனால், வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்ய நேரிடுகின்றது. ஈரத்தன்மையுள்ள நெல்லைக் களஞ்சியப்படுத்துவதிலும் கஸ்டம் உள்ளது. ஆனால், இயந்திரத்தின் உதவியுடன் அறுவடை செய்யும் நெல்லைக் காயவைப்பதற்குரிய மேடை அல்லது களம் இல்லாதிருப்பது தங்களுக்குப் பிரச்சினையாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதற்குத் தீர்வு காண்பதற்காக வயல்களில் மேட்டுப்பாங்கான இடங்களில் நெல்லை காயவிடுவதற்கான களம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.

Related posts

*

*

Top