பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை நடத்திய முதலாவது அனைத்துலகச் சைவமாநாடு கடந்த 12.02.2016 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று 14.02.2016 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது.

சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளும் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியதென்றே சொல்ல வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சு.மோகனதாஸ், மற்றும் முன்னாள் பதில் துணைவேந்தர் பேராசிரியர் இ.குமாரவடிவேல் ஆகியோரை ஒரே நேரத்தில் ஒரே மேடையில் இணைத்த நிகழ்வாகவும் நேற்றைய நிறைவு நிகழ்வு அமைந்தது.

1

மாநாட்டில் 81 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. இது தொடர்பான ஆய்வடங்கலும் முதல் நாள் அமர்வில் வெளியிடப்பட்டது. ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கும் அமர்வுகளில் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இந்த வகையில் சாதாரண பொதுமக்களையும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் துறைசார் அறிஞர்களையும் இணைத்த நிகழ்வாக இது அமைந்தது. இவை இம்மாநாட்டின் சிறப்புக்களுள் முக்கியமானவை.

நிறைவு நாள் வைபவம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது. இரவு 10.30 மணி வரை நிகழ்வுகள் தொடர்ந்தன. அழைப்பிதழில் நேர வரையறைகளைக் குறிப்பிட்டிருந்தும் நேர முகாமைத்துவத்தை சரிவரப் பேண முடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியமை எமது சமய நிகழ்வுகளில் பழகிப்போன விடயமோ என்று எண்ணத் தோன்றியது. மேடையில் பேசிய பலர் தமக்குரிய நேரத்தை மறந்து பேசியமையை அவதானிக்க முடிந்தது.

2

நேரம் நீடித்துச் சென்றதால் மிகச் சிறந்த இரண்டு ஆற்றுகைகளை ஆர்வலர்கள் பலர் தவறவிட்டு வீடு சென்றனர். யோகாசன நிகழ்வும், நாட்டிய நாடகமுமே அவை.

யாழ்.யோக அரங்கத்தினரின் யோக அசைவுகள் காண்போரைக் கட்டிப் போட்டன. யாழ். பல்கலைக்கழக நடனத்துறையினர் வழங்கிய திருமுறை கண்ட புராணக் கதையைத் தழுவிய நாட்டிய நாடகம் அரங்கை மெய் சிலிர்க்கச் செய்தது. ஆயினும் நாட்டிய நாடகம் இரவு 9.50 மணிக்கு ஆரம்பமாகியமையால் நூற்றுக்குட்பட்டோராலேயே இச்சிலிர்ப்பில் திழைக்க முடிந்தது. பெரும் எடுப்பில் நிகழ்ந்த இவ்வாற்றுகைகளைப் பலர் பார்க்கமுடியாமல் சென்றுவிட்டனரே என நினைக்கும் போது மனதிற்கு வருடலாக இருக்கின்றது.

3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறை ஆரம்பிக்கப்பட்டு 41 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறானதொரு சைவ மாநாடு நடைபெற்றுள்ளமை பாராட்டுக்குரியது. இதனைத் துணிந்து முன்னெடுத்த துறைத் தலைவர் பேராசிரியர் மா. வேதநாதனும், இந்து நாகரிகத்துறையினரும் சைவ வரலாற்றில் நன்றியுடன் பாராட்டப்படுவர். அதிலும் இந்து மாநாடு நடத்துவதற்கு உலகளாவிய நிலையில் பல அமைப்புக்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் சைவமாநாடு எனத் துணிந்து முன்னெடுத்து அடையாளப்படுத்தியமையையும் வரவேற்கலாம்.

இதேவேளை அடுத்த ஆண்டின் (2017) முற்பகுதியில் தமிழ்த்துறையினரால் அனைத்துலகத் தமிழ் மாநாடு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் மேலும்; பஞ்சாங்க மாநாடு ஒன்றை விரைவில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (3) பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (2) பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (1)

பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (7) பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (6) பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (5) பல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு (4)

Related posts

*

*

Top