கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த 18.02.2016 வியாழக்கிழமை  கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.

வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும் இயந்திரத்தை வழங்கியிருந்தது. இந்நவீன புல் நறுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கால்நடைகளுக்கான பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது என்பது தொடர்பாகவே இப்பயிற்சி இடம்பெற்றுள்ளது.

பொதுவாக புல், வைக்கோல், இலை குழைகளை ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு அப்படியே உணவாக வைக்கும்போது பெரும்பாலான உணவு வீணாக்கப்படுகிறது. ஆனால் இவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு சீனி, உப்பு, தவிடு போன்றவற்றைத் தூவி உணவாக வழங்கும்போது ஆடு, மாடுகள் முழுவதையும் உணவாக்குவதோடு, பால் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் இப்பயிற்சியின்போது பயிற்சி வழங்குநர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இப்பயிற்சியின்போது இயந்திரத்தைப் பயன்படுத்தும் முறை பற்றியும் நீண்ட நாட்களுக்கு உணவின் பசுமை குன்றாது சேமிக்கக்கூடிய குழித்தீனி முறை பற்றியும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. கால்நடைத்தீவன உற்பத்திப் பயிற்சியின் தொடக்க அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.வசீகரன், கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ்.கௌரிதிலகன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (1) கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (2)

கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (3) கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (4) கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (6) கிளிநொச்சியில் கால்நடைத் தீவன உற்பத்திப் பயிற்சி (7)

Related posts

*

*

Top