இளவாலை ஹென்றியரசர் கல்லூரி தேசியரீதியில் சம்பியனானது!

கோத்மலை பால் உற்பத்தி நிறுவனம் தேசிய ரீதியாக 19 வயது பிரிவு பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி நடாத்தியது.

போட்டியின் ஆரம்பம் முதல் இருதிவரை விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றியரசர் கல்லூரி தேசிய மட்ட கொத்மலை வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இப்போட்டியின் இறுதியாட்டம் கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை கொழும்பு குதிரைப் பந்தய திடல் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விறுதியாட்டத்தில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை எதிர்த்து கொழும்பு   சுஹிரா கல்லூரி மோதியது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவையாக இருந்தமையால் ஆட்டம் ஆரம்பத்தில் இருந்தே சூடு பிடித்தது.

இதனால் பந்து இரு அணிகளின் வீரர்களிடமும் மாறிமாறி சென்றது. இவ்வேளையில் முதல் பாதி ஆட்டத்தில் ஹென்றியரசர் கல்லூரியின் வீரர் அன்ரனி ராஜ் தனது அணிக்கான முதலாவது கோலினை பெற்றுக் கொடுக்க ஆட்டம் மேலும் பரபரப்பானது. பதிலுக்கு கோல் போடுவதற்கு முனைந்த சாஹிரா கல்லூரி 1 கோலினை பெற்றுக் கொள்ள முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடர்ந்த போது ஆதிக்கம் செலுத்திய இளவாலை ஹென்றியரசர் கல்லூரி ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் திக்குமுக்காடிய சாஹிரா கல்லூரி எதிரணியிடமிருந்து பந்தை பெற்றுக் கொள்வதற்கு கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இச்சந்தர்ப்பத்தை வெளிப்படுத்திய இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணிக்கு அணோஜன், கனிஸ்ரன் ஆகியோர் தலா ஒரு கோலினை பெற்றுக் கொடுத்தனர். இதனால் ஆட்டம் கண்ட சஹிரா கல்லூரியால் மீள முடியாது போக இறுதியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று கொத்மலை வெற்றிக் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றி சம்பியனாகியது.

இப்போட்டியில் ஆட்ட நாயகனாக ஹென்றியரசர் கல்லூரியின் அனோஜன், சிறந்த கோல் காப்பாளராக ஹென்றியரசர் கல்லூரியின் அமல்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வணிக்கான பயிற்றுவிப்பாளராக டனிஸ்ரன் வியஜகுமார்  செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: யாழ்.தினக்குரல்

Related posts

*

*

Top