வடக்கில் அதிகரிக்கிறது குற்றச்செயல்கள் தீர்வு என்ன?

பாலியல் ரீதியான வக்கிரத்தனமான குற்றச்செயல்கள் வெளிநாடுகளிலிலேயே இடம்பெற்று வந்தன. இவற்றை இதுவரை ஊடகங்கள் மூலமாகவே அறியும் நிலை காணப்பட்டது. ஆனால்
இந்த நிலைமை மாறி இன்று இலங்கையிலேயே அவை மோசமாக அதிகரித்துச் செல்வது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டில் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் வகைதொகையாகக் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன.

கூட்டு பாலியல் வன்முறைகளிளான படுகொலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இதனால் அப்பாவிச் சிறுமிகள், குழந்தைகள், பெண்கள் என பலரும் பலியாகி வருகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் பெண்களுக்கு உருவாகியுள்ளது

முன்னர் ஒரு கால கட்டத்தில் காவத்தை படுகொலைகள் முக்கியத்துவமிக்கதொன்றாக ஊடகங்களில் இடம்பிடித்தன. வீடுகளில் தனியாக இருந்த வயோதிப பெண்கள் கூட பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்து எரிக்கப்பட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி, பாதுகாப்பு தரப்பினருக்கு இது பாரிய சவாலாக மாறியிருந்தது.

காலப்பபோக்கில் இச்சம்பவங்கள் சற்று கட்டுக்கடங்க, தற்போது சிறுமிகள் மீதான பாலியல் கொடூரங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.

யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பாடசாலை மாணவியான வித்தியா பாலியல் ரீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  இவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கூட்டு பாலியல் வன்முறையையும் படுகொலையையும் அனைத்து தரப்பினருமே கடுமையாக கண்டித்தனர். இந்த சம்பவத்துடனாவது இத்தகைய கொடூரங்கள் முடிவுக்கு வருமென்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனாலும் இச்சம்பவங்கள் தொடர்வது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்வுகள் நாளாந்தம் பெருகிச் செல்லும் நிலையில் ஓரிரு சம்பவங்களே வெளிச்சத்துக்கு வருகின்றன. அதேவேளை, அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மேலும் துரிதமாக கண்டுபிடிக்க முடியாதவாறு இருப்பது, நாட்டின் பாதுகாப்புதுறை பலவீனமாக உள்ளதா? என்ற கேள்வியே மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

வித்தியாவின் படுகொலையை அடுத்து மிக குறுகிய காலத்திலேயே உருத்திரபுரத்தைச் சேர்ந்த யெரோசா, கம்பஹா கொட்டதெனியாவை சேர்ந்த சேயா என்ற வரிசையில் வவுனியா உக்குளாங்குளத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அனைவரையும் மீண்டும் அச்சம் கொள்ள செய்துள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து வடக்கில் கடந்த புதன்கிழமை பாரிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிறுத்தி மரணதண்டனை வழங்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடக்கில் கொடூர யுத்தம் நிலவிய காலத்தில் கூட இந்தவகையான பாலியல் வன்புணர்வுகளோ, கொள்ளைகளோ இடம்பெறவில்லை. இராப் பொழுதில் கூட பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழலே காணப்பட்டது.

ஆனால் நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து சட்டம், ஒழுங்கு சீராக நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இத்தகைய சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளமையானது மக்களை மேலும் கலவரமடைய செய்துள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதிலும் விசேடமாக வட பகுதியில் சிறுமிகள், பெண்கள் இவ்வாறு காமுகர்களால் வேட்டையாடப்படுவது அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்துக்கு பின்னரான வட பகுதியில் பாதுகாப்பான வீடுகளோ, சூழலோ இல்லாத நிலைமைகளே தொடர்ந்து காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்திக்கொண்டு பலரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

வடபகுதியை பொறுத்தமட்டில் விசேடமாக வன்னி பிரதேசத்தில் 90 சதவீதமான மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுவதுடன் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பவர்களாகவுமே உள்ளனர்.

இந்தநிலையில் அங்கு வாழும் பெண்களினதும் சிறு பிள்ளைகளினதும் பாதுகாப்பு சவால்மிக்கதொன்றாக மாறுமானால் அது அவர்களை மேலும் பன்மடங்கு பின்னோக்கி தள்ளவே வழிவகுப்பதாகவிருக்கும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏதேனும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டால் அவர்கள் உரிய நேரத்துக்கு வரத் தவறிவிடுவதாகவும் இது மறுபுறம் கொள்ளையர்களுக்கே வாய்ப்பாக அமைந்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் அடுத்தடுத்து ஏழு வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன.  அதில் ஆலய பூசகர் ஒருவரின் திருப்பணி பணமான 22 லட்சம் ரூபாவும் நகைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவித்த போதிலும் அவர்கள் மூன்று மணிநேரம் கழித்தே ஸ்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான தாமதங்கள் கொள்ளையர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்பதையும் மறந்து போகக்கூடாது.

எனவே பொலிஸார் துரிதமாக குற்றச்செயல்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய மார்க்கத்தை உருவாக்குவது மிகவும் பிரதானமாகும். அதேபோன்று காலதாமதமின்றி, குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களுக்கு ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவேண்டியதும் இன்றியமையாததாகும்.

இன்றேல், இந்தவகையான அதிகரித்து செல்லும் சமூக விரோத செயல்களை ஒருபோதும் அடக்கியொடுக்க முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும்.

இதேவேளை, பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. பெண்பிள்ளைகளை வீடுகளில் தனியாக விட்டுச்செல்வதை கூடுமான அளவு தவிர்ப்பதுடன் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதீத கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலுமே கூடிய நேரத்தை செலவு செய்கின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆசிரியர்களும் பெற்றோரும் கூட்டாக கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

வடக்கில் தொடரும் சம்பவங்களால் மக்கள் மிகுந்த விசனமடைந்துள்ளதுடன் தங்கள் கடுமையான எதிர்ப்பை காட்டும் வகையிலேயே ஹர்த்தாலிலும் ஈடுபட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதும் கட்டாயமாகும்.

வடபகுதியை பொறுத்தமட்டில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதுடன் மக்களின் பாதுகாப்பின் பொருட்டு தேவையான அளவு பொலிஸ் நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் குற்றச்செயல்கள் தலைதூக்குவதை தடுக்க முடியாதுபோனால் அது பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Related posts

*

*

Top