தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா

தென்மராட்சி இலக்கிய அணியினரால் முன்னெடுக்கப்பட்ட சிலப்பதிகார விழா இன்று 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள தமிழ்க்கோட்ட அரங்கில் நடைபெற்றது.

ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற பொருளில் முன்னாள் பேராயர் அதி.வண.சு.ஜெபநேசன் எழிலுரையாற்றினார்.  சிலப்பதிகாரத்திற்குள்ள பல்வேறு சிறப்புக்களையும் எடுத்தியம்புவதாகப் பேராயர் தனது உரையை அமைத்தார்.

கவிஞர் த. நாகேஸ்வரன் தலைமையில் சிலப்பதிகாரத்தில் சிந்தைக்கு விருந்தளிப்பதில் விஞ்சி நிற்பது எது? என்ற பொருளில் விவாத அரங்கு இடம்பெற்றது. இதில் கண்ணகியின் கற்புச் சீர்மையே என வவுனியா நீதிமன்ற உத்தியோகத்தர் என்.கே. கஜரூபனும் மாதவியின் ஒழுக்கச் செம்மையே என்ற பொருளில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரித் தமிழாசிரியர் ச.மார்க்கண்டுவும் பாண்டியனின் நீதித்தூய்மையே என்ற பொருளில் தென்மராட்சி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வே. உதயகுமாரும் காவுந்தி அடிகளின் துறவு மேன்மையே என கோப்பாய் ஆசிரிய கலாசாலைப் பிரதிமுதல்வர் ச.லலீசனும் கருத்துரைகளை வழங்கினர்.

மிகவும் சுவாரசியமாக இடம்பெற்ற விவாத அரங்கில் நடுவர் கண்ணகி பக்கம் தீர்ப்பை வழங்கினார். காவுந்தி சிறந்த துறவி எனினும், தனியே அருகக் கடவுள் வழிபாட்டையே ஊக்குவித்தார். ஆனால் இளங்கோவும் துறவியாக இருந்த போதிலும் பல கடவுளர்களை வணங்கி சமயப் பொறை காண்கிறார். கோவலன் நீதி வழங்குவதற்காகத் தன்நிலையில் தற்கொலை செய்தான் எனினும் தான் மேற்கொண்ட பாதகங்களுக்குப் பரிகாரமோ நிவாரணமோ வழங்கவில்லை. மாதவி ஒருவனுடன் மாத்திரம் வாழ்ந்தாள் எனினும் உயரிய பெண்ணிற்குரிய குணமுடையவளாக விளங்கவில்லை. கோலனிடம் இருந்து பொருள் ஈட்டுவதிலேயே அவள் குறியாக இருந்தாள். கண்ணகியின் காற்சிலம்பைத் தவிர அத்தனையையும் சுருட்டினாள். கோவலனது குடும்பத்தையும் பிரித்தாள். கண்ணகி மதுரையை எரித்தாள் என்ற குற்றச்சாட்டிற்கு உட்பட்டவள் ஆயினும் தீயவர்களை மாத்திரமே எரித்தாள். பாண்டியன் சபையேறி வழக்காடியமைக்கு ஊடாகப் பெண்மைக்குத் துணிவைத் தருகிறாள் எனவே சிந்தைக்கு விருந்தளிப்பதில் விஞ்சி நிற்பது கண்ணகியின் கற்புச் சீர்மையே என நடுவர் முடிவை அறிவித்தார்.

நிகழ்வில் தொழிலதிபரும் தாதிய உத்தியோகத்தருமாகிய த.ஜெயந்தன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். சு.ஸ்ரீவரன் கடவுள் வாழ்த்து இசைத்தார். பெரும் எண்ணிக்கையான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (1) தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (2) தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (3)

தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (4)
தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (6)
தென்மராட்சியில் இடம்பெற்ற சிலப்பதிகார விழா (7)

Related posts

*

*

Top