இந்தியா, இலங்கையில் மீனவர்கள் எதிரெதிர் போராட்டம்

Barack Obama

தமிழகம் மற்றும் வட இலங்கையிலுள்ள மீனவர்கள் சென்னை மற்றும் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசின் கெடுபிடிகள் காரணமாக தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகத் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருக்கும் மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும், மூழ்கிய படகுகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பவை உட்பட பல அம்சங்களை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி வடபகுதி மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை நடத்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் வருகையினால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகின்றது. உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே அவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வட இலங்கை மீனவர் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மீனவர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட உதவித் தூதுவர் நடராஜன், இலங்கைக் கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், எனினும் இலங்கை மீனவர்களின் கோரிக்கை கடிதத்தை இந்திய வெளியுறவு அமைச்சுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

*

*

Top