முதலமைச்சர் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிட்டனுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் இன்று 29.02.2016 திங்கள்கிழமை வலய வாரியம் அமைக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவிருந்தது.

இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இத்திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்பதையும் வலயக்கல்விப் பணிப்பாளரின் விசாரணை தொடர்பாக நடவடிக்கை எடுக்காது, மேற்கொள்ளப்படும் இத்திட்டம் தவறானது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்வி அமைச்சர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தியிருந்தோம் எனவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நியாயமான கோரிக்கையை ஏற்காது குறித்த நிகழ்வு நடைபெறுமாயின் அதேதினம் துணுக்காய் கல்வி வலய ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடஇருந்தனர். இறுதியாக துணுக்காய் வலய ஆசிரியர்கள் எதிர்நோக்கவுள்ள பாதகத் தன்மைகளை வடமாகாண முதலைமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கிணங்க இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆர்ப்பாட்டமும் ஆசிரியர்களால் கைவிடப்பட்டிருந்தது.

ஆயினும் இன்று ஆளுநரோ, கல்வி அமைச்சின் அதிகாரிகளோ எவரும் இன்றி வலய வாரிய உறுப்பினர்களுடன் மட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சரின் உத்தரவையும் மீறி நடைபெற்றுள்ள இந்த நிகழ்வானது துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரின் மற்றுமொரு முறையற்ற செயற்பாடாகும். இந்தச் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு விசாரணை நடத்தி இந் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை இரத்துச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்

Related posts

*

*

Top