ஷோபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவல் – ஒரு வியாபார அரசியல்

Barack Obama

- சாஜித்

ஷேபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவலினை நுகர்ந்து முடித்த பொழுதினில் இப்பதிவினை இடுகிறேன். ஏலவே கொரில்லா, ம் என இரு நாவல்களைத் தந்து மூன்றாவது நாவலாக BOX கதைப்புத்தகம் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி…

அட்டைப்படத்திலிருந்து ஆரம்பித்தால் BOX முதல் தமிழ் கொலையினை தலைப்பில் விட்டுச் சென்றிருக்கிறார் ஷோபாசக்தி. தமிழில் பிற மொழி கலத்தல் என்பது ஆதி காலம் தொட்டு நிலவி வந்தாலும் அது ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சங்கமருவிய காலம் தொட்டு நாயக்கர் காலப் பகுதிகளில் தமிழ் மொழியுடன் வட மொழி கலந்த அமைப்பியலை ‘மணிப்பிரவாள நடை’ என்று அழைத்தார்கள். நாயக்கர் கால இலக்கிய செயற்பாடுகள் ஜொலிக்காமைக்கு மொழிக்கலப்பே பெரும் காரணமாய் அமைந்ததால் அதே கதி இன்று ஷோபாசக்தியின் நாவலிற்கு கிடைத்திருக்கிறது.

தமிழின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுக் கொண்டவராய் தனது அனைத்து படைப்புகளிலும் கவனம் செலுத்தும் ஷோபாசக்தி ஆங்கிலத் தலைப்புடன் தமிழ் கலந்திருப்பது புலம் பெயர்ந்து தான் வாழ்வதால் அதன் மீதான தந்திரோபாய அரசியல் என்று முன்அட்டை விளம்பரத்தை முன் வைக்கலாம்…

நாவலிலினை காணிக்கையாக பாலச்சந்திரனுக்கும் ஈழப்போரில் மாண்ட குழந்தைகளுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். தாங்கள் அச்சந்ததியினரை காக்க தவறிவிட்டதாகவும் பரிதவிக்கிறார். ஆம் நிச்சயமாக ஷோபாசக்தி அவரின் சந்ததிகளை காப்பதற்கு தவறிவிட்டார் என்பது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.

புலம் பெயர்ந்து பிரான்ஸிலும் கனடாவிலும் வெறும் எழுத்து பொம்மைகளாகவும் திரைப்பட நடிகர்களாகவும் உல்லாசம் அனுபவிப்பவர்கள் இப்படி பேசுவதில் ஆச்சரியமில்லை. ஒரு போதும் இவர்கள் செயற்பாட்டாளர்களாக இருந்ததும் கிடையாது. யுத்தத்தின் அவலங்களை கவிதைகளாலும் கதைகளினாலும் வடிக்கும் இவர்கள் தனது சொந்த மண்ணிற்கு யுத்த முடிவிற்குப்பின் கால் வைத்ததும் கிடையாது. ஆனால் பேனை தூக்கி விட்டால் இவர்களைப் போல் தமிழ் இன பற்றுள்ளவர்களை காணவும் முடியாது. உண்மையில் சிறந்த நடிகருக்கான விருதினை வெள்ளக்காரன் அறிந்துதான் கொடுத்திருக்கிறான்….

இனி நாவலுக்குள் வருவோம். அங்கே மீண்டும் அதே பல்லவி யுத்த அரசியலை மிகையாக்கப்பட்ட புனைவுடன் நிஜம் எனும் பெயரில் முன்வைக்கப்பட்ட ஒரு இருட்டடிப்பே BOX கதைப்புத்தகம்…

மு.பொ வின் ‘நோயில் இருத்தல்’ பேசிய போரியல் செயற்பாட்டின் ஒரு துளியேனும் தொடவில்லை. குறைந்தது சாதி போராட்டத்தினை முன்வைத்த டானியலின் ‘பஞ்சமர்’ கொண்டிருக்கும் யாழின் காட்சிப்படுத்தல் கூட சரிவர இடம்பெறவில்லை. போருக்குப் பின்னரான வாழ்வியல் அம்சங்களை பேச முற்பட்டு புனைவே வாழ்வாகி மிகைப்படுத்திக் கூறும் ஷோபாசக்தியின் நாவல் எதனை மையப்படுத்துகிறது என்பதே பெரும் குழப்பம். இதை விட முன்பொரு காலம் ஷோபாசக்தி எழுதிய ரம்ழான் போன்ற கதைகள் எவ்வளவோ மேல்….

வன்னிக் கிராமங்களினுடைய பெயர்களின் பட்டியல், வன்னிக் காட்டில் இருக்கும் தாவரங்களின் பட்டியல் போன்ற கிராமிய சமையல் குறிப்புகள் நாவலில் நிரம்பிக் கிடக்கிறது. பேசு பொருள் என்ற கருத்தாடல் நாவலில் மறைந்தே விட்டது…

பெரிய பள்ளன் குளத்தில் இராணுவத்தினரால் நடப்பட்டிருக்கும் செய்தியினை படம் போட்டு காட்டியிருக்கும் ஷோபாசக்தி வெறும் எந்த அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்குல் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய பார்வையானது நாவல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ஏனோ?

தீபன் படம் மூலமும் பல்வேறுபட்ட படைப்புக்களின் மூலமும் ஷோபாசக்திக்கு பெருத்த அடையாளமும் அழகிய இருப்பிடங்களும் கிடைத்தன. ஆனால் அவருடைய படைப்புக்களின் கதை மாந்தர்களாகிய தமிழ் மக்களின் அடையாளமும் இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது?

” யாம் பெற்ற இன்பம்….?”

Related posts

*

*

Top