பாதுகாப்பான கடவைகள் அமைக்க பின்னடிக்கிறது ரயில்வே திணைக்களம்

ரயில் கடவைகள் இல்லாத இடங்களில் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்துக்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே திணைக்களம் தொடர்பான விடயம் ஆராயப்படுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருந்தார். இதன் பின்னர் அந்தப் பாதுகாப்புக் கடவையில், பாதுகாப்பு வேலி அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்தைக் கோரியிருந்தோம்.

அதிகளவானவர்கள் பயன்படுத்தும் கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்திருக்கும் குறித்த ரயில் கடவைக்குப் பாதுகாப்பு வேலி அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இதுவரையில் அது அமைக்கப்பட வில்லை. ஏதாவது விபத்துக்கள் ஏற்படும்போதுதான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். பின்னர் அதனைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ரயில்வேத் திணைக்கள அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு வேலி அமைக்கும் கடவைகள் மாத்திரம்தான் பாதுகாப்பான ரயில் கடவை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒலி எழுப்பும் சாதனம் உள்ள கடவைகளும் பாதுகாப்பான ரயில் கடவைகள்தான்.

மக்கள் நெருக்கத்தைப் பொறுத்து, ஒலி எழுப்பும் கருவி தனித்துப் பொருத்துவதும், அல்லது ஒலி எழுப்பும் கருவியுடன் பாதுகாப்பு வேலியும் அமைப்பதும் அமையும். அத்துடன் எமக்கு இங்கு பணியாளர்கள் மிகக் குறைவு. இதனை அதிகரித்துத் தருமாறு பலமுறை கோரியுள்ளோம் என்றார்.

Related posts

*

*

Top