தமிழ்க் கைதிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமெனக் கோர த.தே.கூ. முடிவு

Barack Obama

விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ்க் கைதிகளிடம் உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கைவிடுமாறு கோருவது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை  முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

பன்னிரண்டாவது நாளாகத் தொடரும் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போரட்டம் காரணமாக, கைதிகளில் பலருடைய உடல் நிலை மோசமடைந்திருப்பது தொடர்பிலும், அவர்களுடைய விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முயற்சிகள், அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பன விரிவாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகு இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  08.03.2016  தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், காணாமல் போயுள்ளவர் பற்றிய பிரச்சினை என்பன குறித்து ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதனால், அந்தப் பிரேரணையைக் கொண்டு வந்ததன் பின்னர் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேச்சுக்கள் நடத்தி கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த விஷயத்தில், கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுக்கள் நடத்த வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும் அல்லது அந்த விடயம் முற்றுப்பெற்றதும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒன்றிணைந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இரண்டிரண்டு பேர் இடம்பெறும் வகையில் 8 பேர் அடங்கிய குழுவொன்றும் இந்தக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

இனிவரும் காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எல்லா செயற்பாடுகளுக்கும் இந்தக் குழுவே பொறுப்பாக இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் முதலமைச்சர் அணியென்றும், அதற்கு எதிரான அணியென்றும் பிளவுபட்ட நிலையில் உள்ள வடமாகாண சபையின் பிரச்சினைகளுக்கு முடிவு கண்டு அவர்களை இணைந்து செயற்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சருடன் பேச்சுக்கள் நடத்தி தீர்வு காணப்படும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நன்றி: பிபிசி

Related posts

*

*

Top