இலங்கையில் வருடத்திற்கு 5000 சிறுநீரக நோயாளிகள்

இலங்கையில் ஒரு வருடத்தில் 5000 சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த நிலைமைகள் குறித்து உடனடியாக தமக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையை ஜேர்மனி உள்ளிட்ட சிறுநீரக நோய் தவிர்ப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளிடம் உடனடியாக சமர்ப்பித்து அந்நாடுகளின் உதவியுடன் குறித்த கருத்திட்டத்தை கூடிய விரைவில் நாட்டில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், போசணை சுதேச வைத்தியத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் நேற்று 07.03.2016 திங்கள்கிழமை பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய குருதி மாற்றுகை மத்திய நிலையத்தின் கேட்போர்கூடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

சுகாதார, போசணை, சுதேச வைத்தியத்துறை பதிற் கடமையாற்றும் அமைச்சர் முஹமட் காசிம், சுகாதார, போசணை, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால ஆகியோரும் சுகாதாரத்துறையில் உள்ள சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

*

*

Top