யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதிருப்தி

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்களை உயர்கல்வி அமைச்சால் அனுப்பப்பட்டுள்ள பட்டியலிலிருந்து நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் 876 (06.06.2006) இன் பிரகாரம் தமது செயல் ஏற்புடையதேயென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறுகின்ற போதிலும் இப்பட்டியல் நியமனம் நல்லாட்சி அரசாங்கமும் உயர்கல்வி அமைச்சை முன்னைய அரசாங்கம் போலவே நிர்வகிக்கின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

உயர்கல்வி அமைச்சு ஒரு வேலை வங்கி போல் தொழிற்பட்டால் இது குறித்து பொதுமக்களுக்கு பகிரங்கபடுத்தப்படவேண்டும். சாதாரண பொதுமக்கள் இப்பட்டியலில் இடம்பெற உரிய வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் ஆளும் தரப்பு அரசியல் பிரதிநிதிகளின் அல்லது ஆளும் தரப்புடன் பேரங்களில் ஈடுபட்டுள்ள அரசியல் பிரதிநிதிகளின் தொண்டர்கள் அல்லது பல சந்தர்ப்பங்களில் அடியாட்களுக்கு வேலை வழங்கும் இடமாகவே பல்கலைக்கழகத்தை முன்னைய உயர்கல்வி அமைச்சு மாற்றியிருந்தது.

2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரிபால சிறீசேன அவர்கள் பல்கலைக்கழகங்கள் சுயாதிபத்தியத்துடன் இயங்க அனுமதிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.(அதுவே 1978 பல்கலைக்கழக சட்டமும் கூட).

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய பேவையானது தொழினுட்ப உத்தியோகத்தர்கள்இ ஆய்வுகூட உதவியாளர்கள் ஆகியோரை பத்திரிகை விளம்பரம் மூலமே நிரப்பியது. இதற்கென உயர்கல்வி அமைச்சிடமிருந்து அனுமதி பெறப்பட்டது.

2006க்கு பின்னர் பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டவர்களின் கல்விச்சான்றிதழ்களை உறுதிப்படுத்தக் கூட முடியாதநிலை காணப்பட்டது என்பது பேரவை உறுப்பினர்களும் அறிந்ததேயாகும். சில பீடாதிபதிகளுக்கும் துறைத்தலைவர்களுக்கும் அரசியல் நியமன ஊழியர்களால் பயமுறுத்தல்களும் பிரச்சினைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தொழினுட்ப உத்தியோகத்தர்களை உயர்கல்வி அமைச்சுப்பட்டியல் முலம் நிரப்ப விரும்பாத பல்கலைக்கழக பேரவை பாதுகாப்பு ஊழியர்களையும், தொழிலாளிகளையும் பட்டியல் மூலம் நிரப்ப அனுமதியளிப்பது ஏன்? இவர்களால் துறைத்தலைவர்களுக்கு நேரடியாக பிரச்சினை ஏற்படாது என கருதுகிறார்களா? இடைநிலை மேற்பார்வையாளர்களே சிக்கல்களுக்கு உள்ளாவார்கள் என்பதாலா? தொழிலாளிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கான கல்வித்தரம் 8ஆம் வகுப்பு என்பதால் இந் நிலைகளிலே அரசியல்வாதிகளின் அடியாட்களை அதிகம் புகுத்தமுடியும்.

இந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கு ‘தரகர்களாக’ செயற்படும் சிலர் இலட்சக்கணக்கில் பணம் பெறுவதாகவும் புகார்கள் வருகின்றன. முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி அமைச்சர், உள்ளுர் அமைச்சர் துணைவேந்தர் எல்லோரும் ஆட்சேர்ப்பில் மிகவும் இணைந்து செயற்பட்டனர். பட்டியலை அரசியல் கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி மீள் பரிசீலனை செய்வதும், அங்கு பெயர்களை நீக்குவதும் புதிய பெயர்களை சேர்ப்பதும் அச்செயல்களுக்கு உயர்கல்வி அமைச்சரின் ஒப்புதலை பெறலும் சாதாரணமாகவே இடம்பெற்றன. இம்முறையும் முதற்பட்டியலை திருத்தி மற்றொரு பட்டியலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வந்ததாக தெரிகின்றது.

2017 நடுப்பகுதிக்கு முன்பாக துணைவேந்தர் தெரிவு நடைபெற இருப்பதால், பீடாதிபதிகள் சிலர் தமது நலன் கருதி இப்பட்டியலுக்கு ஆதரவளிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

தமது பதவிக்காக பெருமளவில் தவறான நியமனங்களை அனுமதித்து வந்த துணைவேந்தர் தான் சார்ந்த அலுவலகங்களுக்கு (துணைவேந்தர் அலுவலகம், கல்விசார் தாபனக்கிளை (Academic Establishment) அல்லது மருத்துவபீடத்தின் சில பிரிவுகள் ) இந்த நியமனதாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்கிறார். தப்பித்தவறி அவ்வாறு நியமனம் பெற்றால் பலவீனமான துறைத்தலைவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அவர்களை இடமாற்றம் செய்துவிடுகிறார்.

பல்கலைக்கழக பேரவை இவ்விடயத்தில் விழிப்புடன் செயற்படாவிட்டால் புதிய பேரவையின் பயன்கள் இல்லாது போய்விடும். பேரவை உறுப்பினர் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராகவும், நிபுணத்துவ சேவையாளராகவும் பல்கலைக்கழகத்திடமிருந்து கொடுப்பனவுகளை பெற ஆரம்பித்தால் அது Conflict of Interest க்கு வழிவகுக்குமல்லவா?

Related posts

*

*

Top